வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (23:30 IST)

பிபிசி பெயரை குறிப்பிடாமல் 'ஆய்வு' பற்றி அறிக்கை வெளியிட்ட வருமான வரித்துறை

டெல்லி, மும்பை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை, மூன்று நாட்களாக நடத்திய ஆய்வு தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பிபிசி பெயரை குறிப்பிடாமல் ஆய்வு விவரத்தை வருமான வரித்துறை பகிர்ந்துள்ளது.
 
இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறையின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் இயங்குகிறது. இதன் அங்கமாகத்தான் இந்திய வருமான வரித்துறை உள்ளது. அதன் குழுவினர், ஜனவரி 14 முதல் 16ஆம் தேதிவரை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 'ஆய்வு' என்ற பெயரில் நிதிப்பரிவர்த்தனை ஆவணங்களை பார்வையிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
 
இந்த ஆய்வின் அங்கமாக, முதல் நாளன்று பிபிசி டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. பிபிசியின் நிதி, தொழில், கணக்குப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பிபிசி அலுவலகங்களில் உள்ள கணிப்பொறிகள் உள்ளிட்ட சாதனங்களையும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த சோதனை நடவடிக்கை ஜனவரி 15,16ஆம் தேதி இரவு வரை நீடித்தது.
 
இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிடிபிடீ) ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கைப்பிரிவின் முதன்மை ஆணையர் சுரபி அலுவாலியா வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு பக்க செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தொழில் குழுமத்தின் அலுவலகங்களில் நடத்திய ஆய்வில் கண்டறிந்ததாக கூறப்படும் தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார்.
 
"பல்வேறு இந்திய மொழிகளில் (ஆங்கிலம் நீங்கலாக) நிகழ்ச்சிகள் கணிசமான அளவுக்கு நுகரப்பட்ட போதிலும், பல்வேறு குழும நிறுவனங்களால் காட்டப்படும் வருமானம்/லாபம், அக்குழுமத்தின் இந்திய செயல்பாடுகளின் அளவோடு ஒத்துப் போகவில்லை என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது," என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
மேலும், "ஆய்வின் போது, தொழில் குழுமத்தின் செயல்பாடு தொடர்பான பல ஆதாரங்களை சேகரித்ததாகவும் அவற்றில் சில, வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்த தொகையை வருவாயாக வெளிப்படுத்தாமல் அதற்குரிய வரியும் செலுத்தப்படாமல் இருந்ததை காட்டுகிறது," என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
"... ஊழியர் அல்லாதோரிடம் இருந்து பெறப்பட்ட சேவைகளுக்காக செலவழித்த பணம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு இந்திய நிறுவனத்தால் திருப்பிச் செலுத்தப்பட்டது. அத்தகைய பணம் செலுத்துதல் முறையும் வரி செலுத்தலுக்கு உட்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், பரிமாற்ற விலை ஆவணங்கள் தொடர்பாக பல முரண்பாடுகள் உள்ளன," என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"ஊழியர்களின் வாக்குமூலம், டிஜிட்டல் தடயங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் முக்கிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சரியான நேரத்தில் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அக்குழுமத்தின் நிதி, நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் பிற தயாரிப்பு செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஊழியர்களில் எவர் முக்கியமானவரோ அவர்களிடம் மட்டுமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கமான ஊடக செயல்பாடுகள் தொடருவதற்கான வசதிகள் செய்யப்பட்டன," என்று வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கூறியுள்ளார்.
 
இந்த செய்திக்குறிப்பில் பிபிசியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதன் உட்கூறுகள், பிபிசியை மையப்படுத்திய தகவல்களாக உள்ளன என்று ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி முகமைகள் தெரிவித்துள்ளன.
 
இந்த செய்திக்குறிப்புக்கு பிபிசி அதன் அதிகாரபூர்வ பதிலை வழங்கவில்லை.
 
வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் எந்தவொரு நேரடி முறையான தகவல்களுக்கும் பிபிசி சரியான முறையில் பதிலளிக்கும்.
 
முன்னதாக, மூன்று நாட்களாக நடந்த ஆய்வு நிறைவடைந்ததையொட்டி பிபிசி சார்பில் அதன் செய்தித்தொடர்பாளர் வியாழக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ``டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எமது அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்'' என அவர் கூறியுள்ளார்.
 
``எங்களது ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். அவர்களில் சிலர் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டார்கள் அல்லது இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்களது செய்தி வழங்கும் பணி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள எங்களது நேயர்களுக்கு தொடர்ந்து செய்திகளை வழங்க கடமைப்பட்டிருக்கிறோம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
``பிபிசி என்பது நம்பிக்கைக்குரிய, சுதந்திரமான ஊடக நிறுவனம். அச்சம் மற்றும் சார்புத்தன்மை இன்றி தொடர்ந்து பணியாற்றும் எங்களது ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் என்றும் நாங்கள் துணை நிற்போம்'' என்றும் பிபிசி செய்தித்தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
 
பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கைக்கு ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.
 
பிபிசி ஆவணப்படத்தில் என்ன இருந்தது?
 
2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.
 
இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
 
அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.
 
2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.
 
இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
 
இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.
 
"அந்த ஆவணப்படம் 'கடுமையாக ஆராயப்பட்டது' என்றும், 'பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்' மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்" என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.
 
இந்தியாவில் இது புதியது அல்ல
 
அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.
 
2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.
 
மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
 
2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 
ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
 
அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.