குமாருக்கு வயது 40. அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஆவென உரக்கக் குரல் எழுப்பி அழத் தொடங்கினார். உடலில் கடுமையான வேதனை இருப்பதை அவரது குரலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் அவரது வலிக்குக் காரணம் ஹெர்னியா எனத் தெரியவந்தது.
திடீரெனச் சிலருக்கு கடுமையான வேதனையை உருவாக்கும் நோய்களில் ஹெர்னியாவும் ஒன்று. வயிற்றில் ஏற்படும் நோய்களில் இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குடல் பிதுக்கம், குடல் இறக்கம் என்று இது அழைக்கப்படுவதுண்டு.
உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் ஒவ்வோர் ஆண்டிலும் ஹெர்னியா தொடர்பான அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொள்வதாக அமெரிக்காவின் தேசிய மருத்துவக் கல்விக் கழகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடலின் உள்ளுறுப்புகள் பலவீனமான தசைப்பகுதியை வெளியே தள்ளுவதால்தான் ஹெர்னியா ஏற்படுகிறது என்று பிரிட்டனின் சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.
ஹெர்னியா பற்றிய அடிப்படையான சந்தேகங்களுக்கு மருத்துவர் ஷா துபேஷ் பிபிசி தமிழிடம் விளக்கமளித்தார்.
ஹெர்னியா என்பது என்ன?
வயிற்றுப்பகுதி தசைகள் பலவீனமாகும்போது, அதற்கு உள்ளே உள்ள உறுப்புகள் அந்தப் பகுதியை அழுத்தி, பிதுங்கும். ஒரு காற்று ஊதிய பலூனில் பலவீனமாக பகுதி பிதுங்குவது போலத்தான் இதுவும். எந்தப் பகுதியில் பலவீனம் அதிகமாக இருக்கிறதோ அங்கு இத்தகைய நிலை ஏற்படும்.
நமது உடலின் முதுகுப் பகுதியை விட வயிற்றுப் பகுதி சற்று நெகிழ்வாக இருக்கிறது. அதிலும் தொப்புளைச் சுற்றியிருக்கும் தசைகள் மிகவும் பலவீனமானவை. வயிற்றுக்குள் பலூனைப் போல இயற்கையாகவே ஓர் அழுத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. அதில் பலவீனமான ஒரு பகுதி இருந்துவிட்டால், அந்த இடத்தில் பிதுக்கம் ஏற்படுகிறது. இதைத்தான் ஹெர்னியா என்கிறார்கள்.
ஹெர்னியாவின் அறிகுறிகள் என்னென்ன?
சில நேரங்களில் எந்த அறிகுறியும் இல்லாமலேயே ஹெர்னியா இருக்கும். பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் சிறைய அளவுக்கு பிதுக்கம் அல்லது புடைப்பு தெரிவதுதான் ஹெர்னியாவின் அறிகுறி. நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற வலி ஏற்படும்.
மூச்சுவிடும்போது, மலம் கழிக்கும்போது சிறிய அளவினால் பிதுக்கம் பெரியதாக மாறும். சிலருக்கு மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படலாம். இவைதான் ஹெர்னியாவின் அறிகுறிகள்.ஹெர்னியாவின் வகைகள் என்னென்ன?
வயிற்றின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் குடல் பிதுக்கம் அல்லது ஹெர்னியா ஏற்படலாம். அந்த இடத்தைப் பொறுத்து இதை வெவ்வேறு வகையாகப் பிரிக்கிறார்கள்.
இதில் அதிகமாக வருவது கவட்டை கால்வாய் (Inguinal) குடல் பிதுக்கம். இதைத்தான் பொதுவாக குடல் இறக்கம் என்று கூறுகிறார்கள். இது ஆண்களுக்கே அதிகமாக வருகிறது. அடிவயிற்றையும் தொடையும் சேருகிறது இடத்தில் இது ஏற்படும்.
இந்த இடத்தில்தான் வயிற்றையும் விதைப்பையையும் இணைக்கும் ஒரு மூடிய கால்வாய் போன்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இதன் வழியாகத்தான் விந்துக்குழாய், ரத்தக் குழாய், நரம்புகள் போன்றவை விரைப்பைக்குள் செல்கின்றன.
இந்தப் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகும்போது குடலும் அதைச் சார்ந்த கொழுப்பு உள்ளிட்டவையும் விரைப்பைக்குள் இறங்கும். இதுதான் ஹெர்னியாவின் பொதுவான, பரவலான வகையாகும்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ஹெர்னியாவின் பெயர் ஃபெமோரல் ஹெர்னியா. இது மேல் தொடைப்பகுதி அல்லது கவட்டை என்று சொல்லப்படும் பகுதியில் ஏற்படுகிறது. வயிற்றில் இருந்து காலுக்கு ரத்தக்குழாய், நரம்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்லும் கால்வாய்ப் பகுதியில் தசைகள் பலவீனமாகும் போது இந்த வகை ஹெர்னியா ஏற்படுகிறது. சில நேரங்களில் இது ஆண்களுக்கும் ஏற்படலாம்.
முன்வயிற்றில் தொப்புள் பகுதியிலும் குடல் பிதுக்கும் ஏற்படலாம். இதை தொப்புள் ஹெர்னியா (Umbilical Hernia) என்கிறார்கள். உடல் பருமனாக இருப்பது, கருவுறுவது போன்ற காரணங்களால் இவ்வகை ஹெர்னியா ஏற்படுகிறது.
ஹையாடஸ் ஹெர்னியா என்ற வகையை குடலிறக்கம் என்று சொல்ல முடியாது. அது வயிற்றையும் நெஞ்சையும் பிரிக்கும் தசைப்பகுதி பலவீனமடைவதால், வயிற்றுப் பகுதியானது மேல்நோக்கிப் பிதுங்கி வரும். இதனால் உணவும், அமிலங்களும் மேல் எழும்பி நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
ஹெர்னியா யாருக்கு அதிகமாக வரும் ஆபத்து உள்ளது?
அதிக உடல் எடை கொண்டவர்கள், அதிகமான எடையைத் தூக்குபவர்கள், அதிகமாக இருமல், சளி, மூச்சுக் குழாய் பிரச்னைகள் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு ஹெர்னியா வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு பிறக்கும்போது ஹெர்னியா இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
ஹெர்னியாவால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
ஹெர்னியாவை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொண்டால் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் ஹெர்னியா இருப்பவர்களுக்கு அதைக் கவனிக்காமல் விட்டால், சில நேரங்களில் குடல் வயிற்றுக்குள் முறுக்கிக் கொள்ளும். அப்போது குடலானது வெடிக்கும் நிலைக்குச் செல்லும். கடுமையான வலி எடுக்கும். இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது. உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்துதான் உயிரைக் காப்பாற்ற முடியும்.
நீரிழிவு நோய் இருக்கும் சிலருக்கு ஹெர்னியாவின் வலி தெரியாது. அவர்கள் அதை நீண்ட காலத்துக்கு கவனிக்காமல் விட்டால் ஒரு கட்டத்தில் திடீரென வலி ஏற்பட்டு அவசரச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுவது, பரிசோதனைகள் மூலமாக ஹெர்னியாவின் நிலையை அவ்வப்போது தெரிந்து கொள்வதும் இத்தகைய ஆபத்தில் இருந்து காப்பாற்றும்.
சிகிச்சைகள் என்னென்ன?
ஹெர்னியாவுக்கு பெரும்பாலும் மெஷ் ரிப்பேர் என்று சொல்லப்படும் பாலிபுரோபிலீனால் செய்யப்பட்ட ஒரு வகையான வலைபோன்ற பொருளைக் கொண்டு தசையை வலுப்படுத்தும் அறுவைச் சிகிச்சைதான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வலை இல்லாத சிகிச்சை முறைகளும் உள்ளன. இப்போது லேப்ராஸ்கோப்பி எனப்படும் துளை மூலமாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஹெர்னியா வர வாய்ப்புள்ளதா?
வாய்ப்பிருக்கிறது. ஒரு புறம் ஹெர்னியாவுக்கான சிகிச்சை எடுத்து தசையை வலுப்படுத்திய பிறகு மறுபுறமும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலேயே மீண்டும் தசைகள் வலுவிழந்து ஹெர்னியா ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
ஹெர்னியாவுக்கும் ஆண்மைக் குறைவுக்கும் தொடர்பு இருக்கிறதா?
ஹெர்னியா என்ற நோய்க்கும் ஆண்மைக் குறைவுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. ஆனால் அதற்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும் விந்தணு உற்பத்திக்கும் தொடர்பு இருக்கிறது.
கவட்டைக் கால்வாய் (Inguinal) குடலிறக்கத்துக்கு அறுவைச் சிகிச்சை செய்யும்போது தசையை வலுப்படுத்துவதற்காக வைக்கப்படும் வலைபோன்ற பொருள் சில நேரங்களில் விரைப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்.
இதனால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதனால் காத்திருந்து தேவைப்பட்டால் மட்டும் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது நல்லது.