செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (11:12 IST)

அடுத்த அமெரிக்க அதிபரிடம் இந்தியா என்ன எதிர்பார்க்கும்?

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில், மிக அரிதான ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஐந்து பேருக்கு அமெரிக்க குடியுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அது.

அந்த ஐந்து பேரில் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட மென்பொருள் ஆக்குநர் சுதா சுந்தரி நாராயணன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இளஞ்சிவப்பு நிற சேலையில் இருந்த அவரது முகம் புன்னகையால் பூத்திருந்தது. புதிதாக வாங்கிய அமெரிக்க குடியுரிமை சான்றிதழை கையில் பெருமையோடு ஏந்தியிருந்தார் அவர்.

ஆகஸ்ட் 25ம் தேதி, குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. "கட்சி சார்புடன் செய்யப்பட்ட நாடகம்" என்று அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த நிகழ்வை, இந்திய ஊடகங்கள் பெருமிதத்தோடு பதிவு செய்தன.

தங்கள் நாட்டில் பிறந்த ஒருவர் அமெரிக்கர் ஆகும் நிகழ்வை, அதிபர் தாமே முன்னின்று நடத்துவது குறித்தப் பெருமிதம் அது.

தொழில்நுட்பப் பணியாளர்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பாரம்பரியம் உள்ள இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் அமெரிக்க குடியேற்றக் கொள்கை மிக முக்கியமானது. இப்படி அமெரிக்காவுக்கு எச்1பி விசா மூலம் செல்லும் இந்தியர்கள் பின்னாளில் அமெரிக்க குடிமக்கள் ஆவதும் உண்டு.

பாரம்பரியமாக ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் அதிபரின் இந்த அடையாள நடவடிக்கை நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது.

இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் புதிய அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள். வெற்றி பெறுவது டிரம்பாக இருந்தாலும், ஜோ பைடனாக இருந்தாலும், அடுத்த அதிபரால் இந்தியாவுக்கு என்ன செய்ய முடியும்?

சீனா - லடாக்

இந்தியாவுக்கு தங்களால் எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்து அமெரிக்கா வெளிப்படையாகவே இருக்கிறது. இந்தியா தனது வடக்கு எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனாவுடன் ஓர் எல்லைத் தகராறில் மாட்டிக்கொண்டுள்ளது. இரு நாடுகளும் இந்த எல்லைப் பகுதியில், ஏப்ரல் - மே மாதம் முதல் தலா 50 ஆயிரம் படையினரை குவித்து வைத்துள்ளன.

சில இடங்களில் இரு நாட்டு ராணுவ நிலைகளுக்கும் இடையிலான தூரம் வெறும் 200 மீட்டர்தான் இருக்கிறது. படையினர் மத்தியில் தற்செயலாக ஏற்படும் சிறிய ஒழுங்கு குலைவுகூட பெரிய ராணுவ மோதலாக வளர்ந்து விடக்கூடும் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படைகள் மத்தியில் ஏற்பட்ட சிறு சிறு மோதல்கள் இப்பகுதியில் பதற்றத்துக்கும், அணு ஆயுத வல்லமை பெற்ற இரு நாடுகளுக்கு இடையில் தொடர் இறுக்கத்துக்கும் வழி வகுத்தது. இந்த மோதலில் இந்தியாவுக்கு உதவ பல முறை முன்வந்தது அமெரிக்கா.

இந்த சண்டையில் இந்தியா, அமெரிக்காவை தங்களுடைய கூட்டாளியாக்கிக் கொள்ள வேண்டும் என்று கடந்த மாதம் குறிப்பிட்டார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ.

சீனா ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து, சீனாவை வெளியேறும்படி செய்வதற்கு இந்தியா தங்கள் தரப்பில் அமெரிக்காவை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சில இந்திய ராஜீய வல்லுநர்கள் கருதுருகின்றனர்.

சில பிராந்திய கூட்டாளிகளையும் சேர்த்துக்கொள்ள இந்தியா விரும்பலாம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து குவாட் என்றொரு குழுவை உருவாக்கியுள்ளன. இந்தக் குழுவின் கூட்டம், இம்மாத தொடக்கத்தில் டோக்கியோவில் நடந்தது.

பாதுகாப்புச் சிக்கல்களும், தொடர்ந்து வலிமை பெற்றுவரும் சீனாவுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்ற பிரச்சனையும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த குவாட் கூட்டணியை நேட்டோ கூட்டணி போன்று மாற்றவேண்டும் என்ற யோசனையை இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.

உறுதியாகும் உறவு
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஆழமடைந்துவரும் இந்திய - அமெரிக்க உறவுக்கு இந்த யோசனை மிகவும் உகந்ததாக உள்ளது. பாரம்பரியமாக இந்தியா, கூட்டு சேரா கொள்கையை கடைபிடித்து வந்தது.

பனிப்போர் காலத்திலும் ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த காலத்திலும் இதுதான் இந்தியாவின் கொள்கை. ஆனால் 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல், இந்தியாவின் வெளியுறவுப் பார்வையை மாற்றியமைத்தது.

2000-வது ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தந்தார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அமெரிக்க அதிபர் இந்தியா வந்த நிகழ்வாக அந்த பயணம் அமைந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணம் இந்தியாவை அமெரிக்காவின் கூட்டாளியாக்குவதற்கான ஒரு முயற்சியாகவும் அமைந்தது.

இந்திய அமெரிக்க உறவில் கிளிண்டனின் இந்த 6 நாள் பயணம், ஒரு திருப்புமுனையாக ஆனது.

ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக மேற்கொண்ட இந்தியப் பயணத்தின்போது கையெழுத்தான அணுக்கரு ஒப்பந்தம் இந்த உறவை மேலும் ஆழமாக்கியது. பரக் ஒபாமா அதிபராக இருந்தபோது இரண்டு முறை இந்தியாவுக்குப் பயணம் செய்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, குஜராத்தில் நடந்த ஒரு பெரிய கூட்டத்துக்கு வருகை தந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அந்தக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா - அமெரிக்கா இடையே நெருக்கமான நட்பு உருவாகியிருப்பதாக கூறினார்.

டிரம்பை பெருமைப்படுத்தும் வகையில் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் நரேந்திர மோதி.

லடாக் பிரச்சனையில் இந்தியாவுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியபோதும் அந்த ஆதரவை ஏற்பதற்கு இந்தியா தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

இந்தியாவின் தயக்கம்
இந்தியாவின் தயக்கத்துக்கு சில காரணங்கள் இருக்கலாம். "அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வேறொரு முரண்பட்ட திசையில் செல்கிறது. உலக அளவில் அமெரிக்கா செய்து வந்த செலவினங்களை டிரம்ப் குறைத்து வருகிறார்.

இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வரும் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் டாக்டர் நிதாஷா கௌல். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பேராசிரியராக இருக்கிறார் இவர்.

லடாக் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவும், தீர்வுக்கு உதவி செய்யவும் அமெரிக்கா விரும்புவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் விருப்பார்வத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.

உண்மையாகவே உதவி செய்வதற்கு அமெரிக்கா விரும்புவதாக கொண்டாலும் கூட அதனால் என்ன செய்ய முடியும் என்று குறிப்பாக கூறமுடியாது. குறைந்த அளவிலான ராணுவ உளவு, வன்பொருள்கள், பயிற்சி ஆகிய துறைகளில் இந்தியாவுடன் பங்கேற்பதுதான் அதிகபட்சமாக அமெரிக்காவால் செய்யமுடிவது.

அதே நேரம் இத்தகைய அறிக்கைகள் மூலம் பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என்று சீனாவுக்கு ஒரு குறிப்பையும் அமெரிக்கா தருகிறது என்கிறார் டாக்டர் கௌல்.

அமெரிக்கா உண்மையிலேயே இந்தியாவுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும், அந்த உதவி பெரியதாக இருக்கும் என்றும் எடுத்துக்கொண்டால்கூட இந்தியப் பொதுமக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மன நிலை இருக்கவே செய்யும்.

நீண்ட காலமாக அமெரிக்கா பாகிஸ்தானின் நட்பு நாடாக இருந்துவந்தது. எனவே இந்தியர்களில் ஒரு பிரிவினருக்கு அமெரிக்காவை இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக எடுத்துக்கொள்வது கடினமானதாக இருக்கும்.

இதேவேளை, இந்தியா அமெரிக்காவை நம்பக்கூடாது என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் அசோக் ஸ்வைன். ஸ்வீடன் நாட்டின் உப்சாலா பல்கலைக்கழகத்தில் போர் மற்றும் அமைதி குறித்த துறையில் பணியாற்றுகிறார் இவர்.

"எந்த நாட்டுக்கும் அமெரிக்கா நம்பகமான கூட்டாளியாக இருந்ததில்லை. இது டிரம்ப் தலைமையின் கீழ் மிகவும் வெளிப்படையாகிவிட்டது. சீனா போன்ற சக்தியை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா என்ற துருப்புச்சீட்டு இந்தியாவுக்கு உதவாது" என்கிறார் ஸ்வைன்.

இரு தரப்பு ஆதரவு

பிரதமர் நரேந்திர மோதிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் இடையில் அடையாளபூர்வ, தனிப்பட்ட முறையிலான உறவு வலுவாக உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உண்மையிலேயே வலுப்படுத்துவதற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்புகிறார்கள் ராஜீயத்துறை வல்லுநர்கள்.

"அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் இந்த உறவில் நல்ல முன்னேற்றம் உள்ளது. டிரம்புக்கும் மோதிக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு சிறப்பாக உள்ளது. ஆனால், நாடுகளுக்கிடையிலான உறவில் ஏற்படும் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.

இதை விரைவுபடுத்த விரும்புகிறோம்" என்று பிபிசியிடம் கூறுகிறார் முன்னாள் இந்திய ராஜீயத் துறை அதிகாரி நீலம் தேவ்.

சீனப் பிரச்சனையில் உதவி செய்வதாக அமெரிக்கா அளித்த வாக்கை ஏற்காமலும், நிராகரிக்காமலும் இதுவரை இந்தியா கவனமாக கையாள்கிறது. நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் என்ன நடக்கும் என்று பார்க்கும் வரை இந்தியா காத்திருக்கும் என்கிறார் ஸ்வைன்.

ஆனால், அமெரிக்காவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால்கூட இந்திய - அமெரிக்க உறவில் பெரிய மாற்றம் இருக்காது என்று பல ராஜீயத்துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள். டிரம்புக்கும் அவரது போட்டியாளர் ஜோ பைடனுக்கும் இடையில் கிட்டத்தட்ட எல்லா விவகாரத்திலும் கருத்து வேற்றுமை உள்ளது.

ஆனால், இந்தியா தொடர்பான கொள்கையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை இல்லை. இந்தியா தொடர்பான அமெரிக்க கொள்கைக்கு குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இரு தரப்பிலும் ஆதரவு உண்டு என்று இந்தியாவின் முன்னாள் ராஜீயத் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களுக்கு இந்தியா தொடர்பான கொள்கையில் கருத்தொற்றுமை இருப்பது இது முதல் முறை அல்ல என்கிறார் நீலம் தேவ். கிளிண்டன் காலத்தில் இருந்து எல்லா அமெரிக்க அதிபர்களும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். ஒபாமா இரண்டு முறை வந்தார்.

எனவே, குடியரசு கட்சி, ஜனநாய கட்சி என்று இரு கட்சிகளின் அதிபர்களும் இந்தியா வந்துள்ளனர். எனவே இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த அதிபர்களின் கீழும் அமெரிக்க - இந்திய உறவு வளர்ச்சி அடைந்தே வந்துள்ளது என்கிறார் நீலம் தேவ்.

எனவே, தேர்தலுக்குப் பிறகும், லடாக் விவகாரத்தில் நிலவும் பதற்றத்தில் தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்கத் தயாராகவே இருக்கும். ஆனால், இந்தியா எப்படி எதிர்வினையாற்றும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.