செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (17:15 IST)

சீனாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள டிரம்ப் – வேறென்ன தொடர்புகள்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஒரு சீன வங்கியில் கணக்கு இருப்பதாகவும், பல ஆண்டுகளுக்கு சீனாவில் வணிகத் திட்டங்களை செயல்படுத்தி வந்தவர் டிரம்ப் என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப்புக்கு சொந்தமான சர்வதேச ஓட்டல் நிர்வாகத்தால் இந்த வங்கிக் கணக்கு கட்டுப்படுத்தப்படுவதாகவும், 2013 முதல் 2015 வரையில் சீனாவில் இந்த நிர்வாகம் வரி செலுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக டிரம்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வணிகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களை டிரம்ப் விமர்சித்து வந்தார் என்பதும், இரு நாடுகளுக்கும் இடையில் வணிக மோதலைத் தொடக்கிவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் செலுத்திய வரிகள் குறித்த ஆவணங்களைப் பெற்ற பிறகு இந்த வங்கிக் கணக்கு விவரத்தை வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். இந்தப் பத்திரிகை வசமுள்ள ஆவணங்களில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

டிரம்ப் அமெரிக்க அதிபரானபோது 2016, 2017 ஆண்டுகளில் அமெரிக்க வரியாக 750 டாலர் செலுத்தியதாக இந்த செய்தித்தாளின் முந்தைய செய்திகள் குறிப்பிட்டிருந்தன. இந்த செய்தித்தாள் குறிப்பிடும் சீன வங்கிக் கணக்கு மூலம் 1,88,561 அமெரிக்க டாலர் மதிப்புள்ள உள்ளூர் வரி செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் தமது போட்டியாளரான ஜோ பைடனின் சீன கொள்கைகள் குறித்து டொனால்டு டிரம்ப் விமர்சித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பைடனின் மகன் ஹண்டர் சீனாவுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை சுமத்தியது டிரம்ப் நிர்வாகம்.

ஆனால், ஜோ பைடனின் வருமான வரி ஆவணங்களிலும், அவரது பிற வெளியிடப்பட்ட நிதி ஆவணங்களிலும் அவருக்கு சீனாவுடன் வணிக உறவு இருப்பதற்கான எந்த குறிப்பும் இல்லை.

டிரம்புக்கு சீன வங்கியில் கணக்கு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி சுத்தமான ஊகம் என்றும் தவறானமுறையில் இந்த கருத்துகள் உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் டிரம்ப் நிறுவனத்தின் வழக்கறிஞர் ஆலன் கார்ட்டன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வரிகளை செலுத்தும் வகையில் அமெரிக்காவில் அலுவலகங்களைக் கொண்டுள்ள சீன வங்கியில் டிரம்ப் சர்வதேச ஹோட்டல் நிர்வாகம் கணக்குத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார் கார்ட்டன்.

2015க்குப் பிறகு இந்த அலுவலகம் செயலற்று இருப்பதாகவும், ஒப்பந்தமோ, பரிவர்த்தனைகளோ, வணிக நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கிக் கணக்கு நடைமுறையில் இருந்தாலும், வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்புக்கு அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் பல வணிக நடவடிக்கைகள் உள்ளன. ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களில் கோல்ஃப் மைதானங்களும், ஆடம்பர ஓட்டல் தொடரும் இதில் அடக்கம்.

'சீனச் சார்புக்கு முடிவு கட்டுங்கள்...'

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து வெளியே நகர்த்துவதை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள் அளிக்க விரும்புவதாக கடந்த ஆகஸ்டில் அறிவித்தார் டிரம்ப்.

சீனாவில் தங்கள் பணிகளை அவுட் சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கும் அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாகவும் அவர் அச்சுறுத்தினார். 10 மாதங்களில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகவும், சீனா மீதான தங்கள் சார்புக்கு முடிவு கட்டப்போவதாகவும் ஓர் உரையில் தெரிவித்தார் டிரம்ப்.

இதற்கு நேர் முரணாக சீனாவில் வணிகம் செய்யும் வாய்ப்புகளை டிரம்ப் தேடினார் என்பதைக் காட்டுகிறது நியூயார்க் டைம்ஸ் செய்தி. ஷாங்காய் அலுவலகம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது வணிக நடவடிக்கைகள் வேகமெடுத்தன.

பல ஆண்டுகள் சீனாவில் வணிகத் திட்டங்களைத் தொடர்வதற்காக 5 சிறிய நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்காக 1.92 லட்சம் அமெரிக்க டாலர்களை டிரம்ப் முதலீடு செய்த தாக நியூயார்க் டைம்ஸ் பெற்ற டிரம்பின் வரி ஆவணங்கள் காட்டுகின்றன.