வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (10:42 IST)

40 வயதுக்கு முன்னதாக மாதவிடாய் நின்று போவதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

மிக இளம் வயதில் பூப்படைதல் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதை போல இளம் வயதில் அதாவது 40 வயதுக்கு கீழ் மாதவிடாய் நின்றுப்போவதும் பெண்களிடத்திடல் பல உடல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
 
இந்த மெனோபாஸ், மாதவிடாய் நின்றுபோதல் என்பது காலப்போக்கில் நிகழும் ஒன்றாக இருக்கும். அதாவது மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்களிடத்தே ஏற்படும் இயல்பான ஒன்றுதான். இது ஒரு நோயோ அல்லது குறைபாடோ அல்ல. ஆனால் இந்த மாதவிடாய் நின்று போதல் எந்த வயதில் நிகழ்கிறது, எந்த மாதிரியான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்துகிறது, அந்த அறிகுறிகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன, நமது அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை பொறுத்து அதன் தீவிரத்தை உணர முடிகிறது.
 
இயர்லி மெனோபாஸ் (Early menopause) என்றால் என்ன?
ஒரு பெண்ணுக்கு எந்த வித வெளிப்புற மற்றும் மருத்துவக் காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் வருவது நின்று போனால் மெனோபாஸ் எனப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு 45 வயதிலிருந்து 55 வயதில் மாதவிடாய் நின்று போதல் ஏற்படுகிறது. ஆனால் அவ்வாறு இயல்பாக குறிப்பிட்ட வயதுக்குள் நின்றுப் போகாமல் 40 வயதுக்குள்ளாக மாதவிடாய் ரத்தப்போக்கு நின்று போவதை ‘இயர்லி மெனோபாஸ்’ என்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து நம்மிடம் உரையாடினார் மகப்பேறு மருத்துவர் திலகம்.
யாருக்கெல்லாம் இந்த இளம் வயது மாதவிடாய் நின்று போதல் பிரச்னை ஏற்படுகிறது?
பெண்களுக்கு பிறப்பின்போது ஃபாலிக்கல்ஸ் என்பது சுமார் 4 லட்சம் வரை இருக்கும். ஒவ்வொரு மாதவிடாயின்போதும் அது வெளியேறும். இறுதியாக அது சுமார் 300 லிருந்து 400 என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். ஆனால் இந்த ஃபாலிக்கல்ஸின் எண்ணிக்கை என்பது பிறப்பிலேயே குறைவாக இருந்தால் அவர்களுக்கு இளம் வயதில் மாதவிடாய் நின்று போதல் பிரச்னை ஏற்படும். க்ரோமோசோம் குறைபாடுடன் பிறப்பவர்கள் இம்மாதிரியான இளம் வயது மாதவிடாய் பிரச்னைகளுக்கு ஆளாக நேரலாம்.
 
வயிற்றில் புற்றுநோய், கருப்பையில் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களுக்கு சிகிச்சை எடுப்போர், பல்வேறு மருத்துவக் காரணங்களால் கருப்பையை அகற்றும் சிகிச்சை மேற்கொண்டோருக்கு இந்த இளம் வயதில் மாதவிடாய் நின்று போகும் பிரச்னை ஏற்படுகிறது. இளம்வயதில் மாதவிடாய் நின்று போதலை ‘premature ovarian failure’ என்று சொல்கிறார்கள்.
 
மரபு வழியாகவும் இது ஏற்படுகிறது. 90 சதவீத அளவில் மரபு வழியாக ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
 
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம், ஒரு சிலர் பூப்படையாமல் மாதவிடாய் நின்று போதலுக்கான அறிகுறிகள் ஏற்படும். அதனை ப்ரைமரி அமிநோரியா (primary amenorrhea) என்று அழைக்கிறார்கள். இந்த மாதிரி நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் இளம் வயதிலேயே மருத்துவரை அணுக வேண்டும். வயது கடந்துவிட்ட பிறகு இதற்கு ஒன்றும் செய்ய இயலாது. இளம் வயதில் வரும்போது ஹார்மோனல் தெரப்பி போன்ற சிகிச்சைகளை அவர்களுக்கு அளிக்க முடியும்.
 
எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலுவுக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி மிக அவசியம். எனவே இந்த ஈஸ்ட்ரோஜன் குறையும் போது (முன்கூட்டியே மெனோபாஸ் ஆகும்போது) அவர்களுக்கு ஆஸ்டியோபீனியா அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புகளை வலுவற்றதாக மாற்றும் நோய்கள் ஏற்படுகின்றன. இதை கண்டறிந்து அறிகுறிகளின் ஆரம்பக் கட்டத்தில் வந்தார்கள் என்றால் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் டி3 போன்ற மாத்திரைகளை வழங்க முடியும்.
 
அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்னென்ன?
ஹாட் ஃப்ளஷஸ் (முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் திடீர் வெப்பத்தை உணர்தல்), பிறபுறுப்பில் உலர்த்தன்மை, தூக்கமின்மை, தோல் கருமையடைதல், தலைவலி, உணர்வுகளில் திடீர் மாற்றம், அதீத முடி உதிர்தல் போன்றவை மெனோபாஸின் பொதுவான அறிகுறிகள். அந்தந்த அறிகுறிகளுக்கு கேற்ப நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பெறும்.
 
மாதவிடாய் நின்று போவதை எவ்வாறு கண்டறிவது?
 
மெனோபாஸ் சமயத்தில் முறையற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வரும். இம்மாதிரியான அறிகுறிகளை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் சென்று அதிக ரத்தப்போக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஏனென்றால் அதிக ரத்தப்போக்கால் ரத்த சோகை, இதய நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.தேவைப்படும் சூழல்களில் ஹார்மோன் அளவுகளை பரிசோதனை செய்துவிட்டு அதற்கேற்றாற்போல சிகிச்சைகளும் வழங்கப்படும்.
 
முறையற்ற மாதவிடாய் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?
மாதவிடாய் நின்றுப் போகும் சமயத்தில் முறையற்ற மாதவிடாய் அதீத ரத்தப் போக்கு போன்ற அறிகுறிகள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட காலம் வரை இருக்கும்.
 
சிலருக்கு இந்த மாதவிடாய் நின்று போதல் என்பது இயல்பானதாக இருக்கும். சிரமங்கள் இருந்தாலும் அது தாங்கிக் கொள்ளக் கூடிய அளவில் இருக்கும். ஆனால் சிலருக்கு மருத்துவரை அணுகும் நிலை ஏற்படும்.
 
உடலை எப்படி மெனோபாஸிற்கு தயார் செய்வது?
பொதுவாக புரதம் நிறைந்த உணவுகள், பருப்பு வகைகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். இதில் ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகம் இருக்கும். கிட்னி பீன்ஸ், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற அதிக புரத உணவை எடுத்துக் கொள்ளலாம். போதுமான தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி போன்றவற்றால் மெனோபாஸின் விளைவுகளை சற்று சமன் செய்ய முடியும். சத்தான உணவின் மூலம் மொனோபாஸுக்கு முந்தைய அறிகுறிகளை எளிதாக எதிர்கொள்ளலாம்.
 
மெனோபாஸின் வெவ்வேறு கட்டங்கள்?
இந்த மெனோபாஸில் ப்ரீமெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் போஸ்ட்மெனோபாஸ் என மூன்று கட்டங்கள் உள்ளன. அதாவது மாதவிடாய் நின்று போதலுக்கு முந்தைய கட்டம், மாதவிடாய் நின்றுபோதல், மாதவிடாய் நின்று போதலுக்கு பிந்தைய கட்டம். ப்ரீ மெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் போஸ்ட் மெனோபாஸ் ஆகிய மூன்றுக்கும் ஒரு சில அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஒரு வருட காலத்திற்கு மாதவிடாய் வரவில்லை என்ற நிலைக்கு பிறகு வரும் கட்டத்தை போஸ்ட் மெனோபாஸ் என்கிறோம். பொதுவாக இந்த கட்டத்தில் தனிநபர்களை பொறுத்து அறிகுறிகள் மாறுபடுகின்றன.
 
சர்வதேச அளவில் இந்த போஸ்ட்மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐநா தெரிவிக்கிறது. 2021ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 26 சதவீத அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இதுவே 10 வருடங்களுக்கு முன்பு 22 சதவீதமாக இருந்தது என்கிறது ஐநா.