1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (14:05 IST)

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் கண்டுபிடிப்பு

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக, அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. 

 
மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் வீட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ஏ என் ஐ செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
உலுபெரியா உத்தர் என்கிற ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதியில், தபன் சர்கார் என்கிற செக்டார் 17-ன் அதிகாரி, தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தும் ரிசர்வ் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், உறவினர் ஒருவரின் வீட்டில் உறங்கச் சென்றிருக்கிறார்.
 
அந்த அதிகாரி தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியிருக்கிறார் என பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யும் ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமை குறிப்பிட்டுள்ளது.
 
மேலும், பிடிபட்ட வாக்குப் பதிவு இயந்திரம், செயல்பாட்டில் இருக்கும் இயந்திரங்கள் பழுதாகும் போது மாற்றி பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இயந்திரம் என்றும், அவ்வியந்திரம் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படாது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
 
தேர்தல் பார்வையாளர் நீரஜ் பவன், அவ்வியந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து, அதை தனியாக தேர்தல் பார்வையாளரின் கட்டுப்பாட்டில் ஒரு தனி அறையில் வைத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.