செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:34 IST)

மு.க.ஸ்டாலின் சுயசரிதை 'உங்களில் ஒருவன்': சென்னையில் ராகுல் வெளியிடுகிறார்

(இன்று (18-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி, 'உங்களின் ஒருவன்' என்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்த சுயசரிதை நூலின் முதல் பாகத்தை சென்னையில் வெளியிடவுள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த வெளியீட்டு விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பீகார் மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் எனது கட்சிக்கு சேவை செய்தேன். அப்போது, பல இளைஞர்களைப் போலவே, நானும் அண்ணா, பெரியார், கலைஞர் போன்ற தலைசிறந்த தலைவர்களிடம் கொள்கைகள் குறித்து கற்றுக்கொண்டேன். அந்த சம்பவங்களை எனது சுயசரிதை, 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்", என்று தெரிவித்தார் என்கிறது அந்த செய்தி.

'மூன்றாம் பாலினத்தவரை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது'

திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ (LGBTQIA) சமூகத்தினரை, தமிழக காவல்துறை தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என்ற புதிய சட்டத்திருத்தம் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி தெரிவிக்கிறது.

ஒரு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக உள்துறை அமைச்சகம் இந்த புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

அதில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகளில், 24c சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ (LGBTQIA) பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு கீழ் பணிபுரியும் காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என்ற பிரிவைச் சேர்த்துள்ளனர்.

காவல் துறையினர் சட்டபூர்வமான முறையில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது இந்த விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி புத்தகம் இன்று வெளியீடு

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய புத்தகம் ஒன்று இன்று வெளியிடப்படவுள்ளதாக, 'தினந்தந்தி' செய்தி தெரிவிக்கிறது.
 

எ நேசன் டு புரொடெக்ட் (A Nation To Protect) என்ற இந்த புத்தகத்தை எழுதியவர் பிரியம் காந்தி மோதி. இது அவரது மூன்றாவது புத்தகமாகும்.

இந்த புத்தகத்தின் தலைப்பு தேர்வு செய்தது பற்றி பிரியம் கூறுகையில், பல்வேறு பிரிவுகளிலும் இருந்து ஊக்கமிழக்க செய்யும் வகையிலான விமர்சனங்கள் உள்பட பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், உங்களுடைய மனநிலை எப்படி குலையாமல் இருந்தது? உங்களை ஊக்கப்படுத்தியது எது? என்று பிரதமரிடம் கேட்டேன்.

அதற்கு பிரதமர் நரேந்திர மோதி, நிலைமையை உற்று கவனிக்கும்போது, ஊடரங்குக்கிறான என்னுடைய அழைப்புக்கு மக்கள் செவிசாய்த்ததுடன், வீட்டிலேயே அவர்கள் இருந்தனர் என்று பதிலளித்தார். இதுதான் தலைப்புற்கான காரணம்", என்று தெரிவித்தார்.

இந்த புத்தகத்தை இன்று மதியம் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட உள்ளார். இதில், சுகாதார அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.