மு.க.ஸ்டாலின் சுயசரிதை 'உங்களில் ஒருவன்': சென்னையில் ராகுல் வெளியிடுகிறார்!
(இன்று (18-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி, 'உங்களின் ஒருவன்' என்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்த சுயசரிதை நூலின் முதல் பாகத்தை சென்னையில் வெளியிடவுள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த வெளியீட்டு விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பீகார் மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் எனது கட்சிக்கு சேவை செய்தேன். அப்போது, பல இளைஞர்களைப் போலவே, நானும் அண்ணா, பெரியார், கலைஞர் போன்ற தலைசிறந்த தலைவர்களிடம் கொள்கைகள் குறித்து கற்றுக்கொண்டேன். அந்த சம்பவங்களை எனது சுயசரிதை, 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்", என்று தெரிவித்தார் என்கிறது அந்த செய்தி.