வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:50 IST)

வாழைப்பழத்தின் இந்த எளிய கதை உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணமான புதிதில், தென்னிந்தியாவில் நாகர்கோவிலில் என் மாமியாரின் வீடு அருகே சாலையோரம் எங்களை நிறுத்தினார்கள். மத சம்பிரதாயத்துக்கு சில வாழைப்பழங்களை அப்போது வாங்கினார்கள். சத்துகள் மிகுந்த வாழைப்பழ சீப்புகளை நான் புதிராகப் பார்த்தேன். மஞ்சள், சிவப்பு, ஊதா என பல நிறங்களில் அவை இருந்தன. தகரக் கூரையில் இருந்த கொக்கிகளில் வாழைப்பழ சீப்புகள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. மதிப்புமிக்கவை போல அவை வைக்கப்பட்டிருந்தன.


12 முதல் 15 வகையான வாழைப்பழங்கள், தனித்தனி பெயர்களில், தனித்தனி பயன்கள் உள்ளவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு சீப்பிற்கும் பூவன், செவ்வாழை, மட்டிப்பழம் என வெவ்வேறு பெயர்கள் இருந்தன. நாகர்கோவிலில் இருந்து சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரம் வடக்கில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நான் வளர்ந்த காலத்தில் இதுபோன்ற வகை வகையான வாழைப்பழங்களை எப்போதும் பார்த்தது கிடையாது.

தெலுங்கு மொழியில் "அரட்டிபண்டூ" என்று இதை அழைப்பார்கள். ஆனால் இங்கே நாகர்கோவிலில் 12 முதல் 15 வகைகளில் வாழைப்பழங்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயர்கள், தனித்தனி பயன்கள் உண்டு என இவர்கள் கூறினார்கள்.

வாழைப்பழங்கள் பல வகை பயன்பாடு உள்ளவையாக, பழங்காலத்தில் இருந்தே மதிப்புக்குரியவை ஆக இருந்து வருகின்றன. இந்தியாவை தாயகமாகக் கொண்டதாக இருப்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தப்படுத்தக் கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது.

வாழை மரங்கள் நாட்டின் கலாசார கட்டமைப்பில் பிணைப்பு கொண்டதாகவும் இருக்கின்றன. நாட்டு ரகங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. இதமான, ஈரப்பதமான சூழல் இருப்பதாலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் செழிப்பான மண் வளம் இருப்பதாலும் நாகர்கோவில் போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

உலகின் ஆரம்பகால பழமாக, அதிகம் பயிரிடப்படும் பழ மரமாக வாழை மரங்கள் இருக்கின்றன. இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து இவை உலகின் பல பகுதிகளுக்குப் பரவியுள்ளது. இன்றைக்கு, உலகில் மிக அதிகமாக சாப்பிடப்படும் பழங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய் காலத்திலும் மக்கள் இதை நிறைய சாப்பிடுகிறார்கள். உலகம் முழுக்க கூகுள் தேடலில் வாழைப்பழ ரொட்டி எளிதாக எப்படி தயாரிப்பது என்ற தகவல்கள் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கின்றன.

வாழைப்பழத்தின் ருசி பிடித்துப் போனதால் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாமன்னர் அலெக்சாண்டர் இவற்றைக் கொண்டு சென்றார் என்பதற்கு வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

பிறகு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுப் பகுதிகளுக்கு 15வது நூற்றாண்டில் வாழைப்பழம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அங்கிருந்து பெர்முடாவுக்குச் சென்றுள்ளது.

17 மற்றும் 18வது நூற்றாண்டுகளில் புதுமையான பழங்கள் என்ற வகையில் பெர்முடாவில் இருந்து கப்பல் மூலம் இங்கிலாந்துக்கு வாழைப்பழங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 1835 ஆம் ஆண்டில், டெர்பிஷயரில் உள்ள சாட்ஸ்வொர்த் எஸ்டேட்டின் தோட்ட தலைமை அலுவலர் ஜோஷப் பாக்ஸ்ட்டன் புதிதாக மஞ்சள் நிறத்தில் ஒரு வாழை ரகத்தை உருவாக்கினார். தனது முதலாளி வில்லியம் கேவன்டிஷ் நினைவாக அதற்கு முசா கேவென்டிஷி என பெயரிட்டார்.

எல்லா நோய்களுக்கும் மருந்தாக வாழைப்பழம் கருதப்படுகிறது, உடல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் ஆன்மிக விஷயங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது.

மற்ற ரகங்களுடன் ஒப்பிடும்போது ஓரளவுக்கு சிறியதாகவும், ருசி குறைவாகவும் இருந்தாலும், "கேவென்டிஷ் பழங்கள்" ஒரே அளவாக இருப்பதாலும், நோய்கள் தாக்காமல் வளருவதாலும், அதிக விளைச்சல் தருவதாலும் மேற்கத்திய உலகில் விரும்பப்படும் ரகமாக இருக்கிறது. இந்தியாவில் ஜி-9 கேவென்டிஷ் ரகம் (இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்டது) இப்போது வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்படுகிறது; இருந்தாலும் நாட்டு ரகங்களும் இன்னும் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகளில் நாட்டு ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.

பூவன், மொந்தை, பேயன் பழங்களை (பிரம்மா, விஷ்ணு, சிவா என்ற கடவுளின் பெயர்களில் உள்ளவை) சத்து, மணம், ருசிக்காக மக்களால் பெரிதாகப் பேசப்படுகின்றன.

இந்தியாவில் எல்லா நோய்களுக்கும் மருந்தாக வாழைப்பழம் கருதப்படுகிறது, உடல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் ஆன்மிக விஷயங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது. குழந்தையாக இருந்தபோது, ஒல்லியான, பழுத்திருக்கும்போது குலைந்து போயிருக்கும் வாழைப்பழங்கள் என் கவனத்தை ஈர்த்தது கிடையாது. இருந்தாலும், மஞ்சள் காமாலை வந்த போது, நோய் எதிர்ப்பு சக்திக்காக இதை சாப்பிடுமாறு என் தாயார் கெஞ்சிய போது நான் வாழைப்பழங்களை விழுங்கியது நினைவிருக்கிறது. மத வழிபாடுகளுக்குப் பிறகு பிரசாதம் என்று கூறி வாழைப்பழத்தை சாப்பிடுமாறு என் பாட்டி என்னிடம் சொல்வார்.

இன்றைக்கு, வாழைப்பழங்களில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகியவையும், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்து உள்ளன. இருந்தாலும் இந்தியாவில், பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவ குணம் உள்ளவையாக வாழைப்பழங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வாழை மரங்கள் புனிதமாகக் கருதப்படுகின்றன. வாழை மரத்தின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்துகிறார்கள். வாழைப் பழங்களை சாப்பிடுகிறார்கள், இலை, தண்டு ஆகியவை மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

``பழுத்த வாழைப் பழத்தில் வாதம் அதிகமாக இருக்கும் ஆயுர்வேத வைத்தியத்தில் பல்வேறு தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது'' என்று டெல்லியில் உள்ள நாட் வெல்னஸ் மையத்தில் ஆயுர்வேத ஆலோசகராக இருக்கும் டாக்டர் ஸ்ரீலட்சுமி தெரிவிக்கிறார்.

மேலும், வாழைப் பூ மற்றும் தண்டு ஆகியவை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றன. வாழைக்கன்று தொழுநோய், வலிப்பு மற்றும் பூச்சிக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகின்றன. மனநிலை பாதிப்புகளால் ஏற்படும் ரத்த அழுத்த அதிகரிப்பு, தூக்கமின்மை போன்றவற்றுக்கு தலப்போத்திச்சில் என்ற தெரப்பி அளிக்கப்படுகிறது. தலையில் மருந்து வைத்து, வாழை இலையால் மூடி வைப்பதால், சாந்தம் ஏற்படுவதாக ஸ்ரீலட்சுமி தெரிவித்தார்.

பாலி கேனானில் (தேர்வாடா புத்திச பள்ளியின் ஓலைச் சுவடிகள்) குறிப்பிடப் பட்டுள்ள ஒரே பழம் வாழைப்பழம் தான். வேதங்கள் மற்றும் பகவத் கீதையில் முக்கனிகள் என்று மாங்கனி, பலாப்பழம் ஆகியவற்றுடன் வாழைப்பழம் சேர்த்து குறிப்பிடப் படுகிறது. இந்து மதத்தில், இந்துக் கோவில்களில் குரு பகவானாகக் கருதப்படும் வியாழன் கிரகமாக, வாழை மரம் கருதப்படுகிறது.

கருத்தரித்தல், விளைச்சல் மற்றும் செழிப்பின் அடையாளமாகவும் வாழை கருதப்படுகிறது. எனவே, தென்னிந்தியாவில், திருமணங்கள், மத வழிபாட்டு விழாக்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளின்போது வீடு அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நுழைவாயிலில் இருபுறங்களிலும், வாழைத்தார், பூ உள்ள வாழை மரங்களைக் கட்டி வைக்கிறார்கள். வங்காளத்தில், துர்கா பூஜை பண்டிகையின் போது, துர்கா தேவியைக் குறிப்பிடும் வகையில் வாழை மரத்தால் உருவம் செய்து, சிவப்பு பார்டர் உள்ள மஞ்சள் சேலை கட்டுகிறார்கள். இது கோலா பாவ் என குறிப்பிடப்படுகிறது. வங்க மொழியில் கோலா என்றால் ``வாழைப்பழம்'' என்பதும், பாவ் என்றால் ``பெண்'' என்றும் அர்த்தம்.

இந்தியாவில் பல வகைகளில் வாழைப்பழங்களை சாப்பிடுகிறார்கள். பழுத்தது அல்லது காயாக, பயனுக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்கிறார்கள். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் மட்டி பழம் தருகிறார்கள். பாரம்பரிய மற்றும் தற்கால இந்திய உணவு வகைகளில் நேந்திரம் மற்றும் ரஸ்தாளி ரகங்களை பயன்படுத்துகிறார்கள். அதிக நாட்களுக்கு வைத்திருக்கலாம், நீர்ச்சத்து குறைவு என்பதால் இவற்றைத் தேர்வு செய்கிறார்கள்.

``கொங்கணியில் (மேற்குத் தொடர்ச்சி மலையில், கொங்கண் பகுதியில் பேசப்படும் மொழி) வாழைப்பழத்தை `கெலே' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த மக்களின் உணவில் வாழைப்பழங்கள் அதிகம் இடம் பெறுகின்றன'' என்று The Love of Spice என்ற வலைப்பூ பதிவை எழுதும் ஷாந்தலா நாயக் ஷெனாய் கூறுகிறார். ``வாழைக்காயை லேசாக வறுத்த உணவு எனக்கு பிடிக்கும். வாழைப்பழத்தில் தேங்காயை சேர்த்து தயாரித்த பொரியல், வாழைப்பழ பொடி, வாழைப்பழ அல்வா ஆகியவை பிடித்தமானவை. வாழைப்பழத்தைக் கொண்டு தயாரிக்கும் உணவுகளை ருசித்து மகிழ்ந்திட ஒரு வழிமுறை இருக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார்.

``சைவ மீன் குழம்பு தயாரிக்க மீனுக்குப் பதிலாக ஸ்லைஸ் செய்த வாழைக்காயை பயன்படுத்துகிறோம். குழம்பில் வாழைக்காய் ஸ்லைஸ்கள் மிதக்கும். மீன் போலவே இருக்கும்'' என்று ஹைதராபாத்தில் உள்ள என்ற உணவகத்தின் சமையல் அலுவலர் விக்னேஷ் ராமச்சந்திரன் கூறுகிறார்.

இந்தியாவில் வாழை எப்படியெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்று எனக்குத் தெரியும் என நினைத்திருந்த நேரத்தில், சென்னை அருகே அனகாபுத்தூரில் சி. சேகர் என்ற நெசவாளரை சந்தித்தேன். வாழைமர நார் மற்றும் கழிவில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த சேலைகளை அவர் தயாரிக்கிறார். 100 பெண்கள் அவரிடம் வேலை பார்க்கிறார்கள். பருத்தி மற்றும் வாழை நார் சேலைகளை பல ஆண்டுகளாக அவர்கள் நெய்து வருகிறார்கள்.

காயாக அல்லது பழுத்ததாக, பழம் அல்லது பூ, கேவென்டிஷ் அல்லது பூவன் என இந்தியர்கள் நிறைய ரகங்களில் இருந்து தேர்வு செய்கிறார்கள். புனிதமானதாகக் கருதப்படும் வாழைப்பழம் நிறைய ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டிருக்கிறது.

வாழை விளைச்சல் அதிகம் உள்ள நாகர்கோவிலில், இப்போது நான் புதிராக பார்க்காமல் ரஸ்தாளி அல்லது மட்டி பழத்தை தேர்வு செய்கிறேன். மத வழிபாட்டுக்கு புனிதமானதாக அவை கருதப்படுகின்றன. ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட நேந்திரம் சிப்ஸ்களை அடிக்கடி வாங்குகிறேன். அதன் ஒவ்வொரு கடியும், இந்த நகரின் சிறப்பைச் சொல்லும், அதன் வாழைப்பழ பாரம்பர்யத்தைச் சொல்வதாக இருக்கும்.

தாவரவியல் முரண்

பொதுவாக பழங்கள் என குறிப்பிடப்படும் சதைக்கனிகளை உருவாக்கும் (தாவரவியல் ரீதியில் பார்த்தால்) மூலிகைத்தன்மை கொண்டதாக இருந்தாலும் வாழைக்கு மரம் என்ற அந்தஸ்து தரப்பட்டுள்ளது.