செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முப்பெருந்தேவர்களும் குழந்தையாக மாறியது ஏன் எங்கு தெரியுமா...?

சிவன், பிரம்மா, விஷ்ணு மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு வந்துள்ளது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர்.  அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள். அவள்தான் அனசூயை.

அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.
 
நெடுநாட்களாக - பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை. பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.
 
வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். குழந்தை வடிவில் இருந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும், தங்களைத் தாய் அநசூயையிடமிருந்து இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணி, மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத் தோட்டத்தில்  மறைந்து கொண்டனர்.
 
ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று. பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு.
 
முப்பெருந்தேவியரும் அநசூயையிடம் அத்ரியின் ஆசிரமத்தில்  குழந்தைகளாக இருந்த  தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அநசூயைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை.
 
அநசூயை நெஞ்சம் கனக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.