ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (23:04 IST)

ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவிவேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் எனவும் அந்நாட்டின் பிரதமர் ஷான் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.
 
ஐரோப்பாவை பொறுத்தவரை பிரிட்டனில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
 
அங்கு வெள்ளியன்று 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
பிரட்டனிலிருந்து வருவோருக்கு பிரான்ஸ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 
ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது.
 
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
நெதர்லாந்தில் நவம்பர் மாதம் முதல் பார்கள், உணவகங்கள் மாலை நேரங்களில் செயல்படுவதில்லை.
 
ஐரோப்பாவில் இதுவரை 89 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு 1.5 மில்லியன் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
 
பிரிட்டனில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு ஒமிக்ரான் திரிபே காரணம் என்று கூறப்படுகிறது.
 
 
ஐரோப்பாவில் தொற்று அதிகரித்து வருவதால் இத்தாலி, கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் என வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தடுப்பு மருந்து செலுத்தியவர்களுக்கும் பொருந்தும்.
 
அதேபோன்று தடுப்பு மருந்து எடுத்து கொள்ள தயங்கும் மக்களை தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
 
பிரான்ஸை பொறுத்தவரை, தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள தயங்கும் மனப்பான்மையை எதிர்கொள்ள அடுத்த வருடம் முதல் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருப்பதாகப் பிரதமர் காஸ்டெக்ஸ் தெரிவித்தார்.
 
மேலும் "தடுப்பு மருந்து எடுத்து கொள்ள தயங்கும் சிலரால் மொத்த நாடும் ஆபத்தில் தள்ளப்படுவது சரியில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரான்ஸை போல நெதர்லாந்திலும் அடுத்த வருடத் தொடக்கத்தில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
 
நெதர்லாந்தில் கடுமையான பொது முடக்கம் அமல் செய்யப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
நெதர்லாந்தில் வெள்ளியன்று 15 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவரை இல்லாத ஒரு எண்ணிக்கை அது.
 
அங்கு கோவிட் நோயாளிகள் அதிகம் வருவதால் வழக்கமான மற்றும் அவசரக் கால அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
 
ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சர் கார்ல் லச்சர்பாக், "இதுவரை இல்லாத ஒரு புதிய சவாலுக்கு நாம் தயாராக வேண்டும்" என தெரிவித்தார்.
 
ஜெர்மனியின் சுகாதார முகமை, ஃபிரான்ஸ், நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளன.
 
ஜெர்மனியில் சனிக்கிழமையன்று 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளியன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது.
 
பிரான்ஸ் பிரிட்டனிலிருந்து வர்த்தகம் தொடர்பாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடை விதித்துள்ளது.
 
தொற்று எண்ணிக்கையை அதிகரிப்பதை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த பயணக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அங்கு முதல் டோஸ் தடுப்பு மருந்துக்கும் இரண்டாம் டோஸ் தடுப்புக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
அதேபோன்று உணவகங்கள் மற்றும் நீண்ட தூர பயணத்திற்காக பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் முழுவதுமாக தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.