வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (10:53 IST)

முலாம் பழத்தால் பதவியிழந்த ஜப்பான் அமைச்சர்

ஜப்பான் நாட்டின் தொழில்துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற ஈஷூ சுகவாரா பதவி விலகியுள்ளார்.


 
டோக்கியோவில் உள்ள தனது தொகுதி வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த முலாம்பழம், நண்டுக்கறி, ஆரஞ்சு பழங்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியதால் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
"இப்படிப்பட்ட ஒரு நபரை அமைச்சராக நியமித்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன்; ஜப்பான் மக்களிடம் நான் ஆழ்ந்த மன்னிப்பைக் கோருகிறேன்," என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
 
தனது ஆதரவாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் இறந்ததால் அவருக்கு இறுதிச் சடங்குக்கு பணம் வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
எனினும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணம் வழங்குவது ஜப்பானில் ஒரு பாரம்பரிய நடைமுறையாக உள்ளது.
 
தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் நன்கொடைகள் மற்றும் பரிசுகள் வழங்குவதை ஜப்பான் நாட்டு சட்டம் தடை செய்கிறது.
 
தனது குடும்ப உறுப்பினரை இழந்த ஒருவருக்கு ஈஷூ சுகவாரா 20,000 யென் பணம் கொடுத்ததாக ஷுகான் பன்சுன் எனும் வார இதழ் செய்தியாக வெளியிட்டது.
 
தங்களுக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பு வைத்ததற்கு ஈஷூ சுகவாராவின் ஆதரவாளர்கள் அனுப்பிய நன்றிக் கடிதங்களையும், அவரது அலுவலகம் அனுப்பிய பரிசுப் பொருட்களின் பட்டியலையும் அந்த வார இதழ் வெளியிட்டுள்ளது.
 
தாம் செய்த செயல்கள் விதிமீறலா என்று இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், தமது செயல்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கக் கூடாது என்பதால் தாம் பதவி விலகுவதாகவும் ஈஷூ சுகவாரா வெள்ளியன்று பதவி விலகியபின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.