கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!
கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் நேற்று உலக காசநோய் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன் கவர்னர் ரவியை புகழ்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.
இதை தொடர்ந்து, இயக்குநர் பார்த்திபன் ஆளுநரை பாராட்டியதை எதிர்த்து, வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார். அவர் தனது பதிவில்,
**"மிகுந்த மதிப்புமிக்க இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம். திரைத்துறையில் புதிய பாதையை உருவாக்கி வெற்றி கண்டவராகவும், தனது வசனங்களிலும் உரையாடல்களிலும் சமூகத்துக்கான அக்கறையுடன் செயல்பட்டவராகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். ஆனால், ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உங்கள் உரை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆளுநர் தமிழ் பண்பாட்டை காப்பாற்றுகிறாரா அல்லது அதை இழிவுபடுத்துகிறாரா? இதே ஆளுநர் மாளிகையில், பல நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படாமல் தடுத்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்திலும், 'தமிழ்த்தாய் வாழ்த்து' முழங்கும் போது அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி. இது தான் தமிழ் பண்பாட்டை காக்கும் வழியா?
மேலும், "குழந்தை திருமணம் நல்லது; நானும் குழந்தை திருமணம் செய்தவன் தான்" என்று 2023 மார்ச் 12 அன்று அவர் பெருமையாக பேசியது தமிழ் பண்பாட்டா? தலித்துகளுக்கு பூணூல் அணிவிக்க வேண்டும் எனக் கடந்த அக்டோபர் 4, 2023 அன்று சிதம்பரத்தில் நடத்தப்பட்ட நிகழ்வும் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானதல்லவா?
தமிழ்நாட்டின் பெயரை 'தமிழகம்' என்று மாற்றி அறிவித்தது எது? இது தமிழ் பண்பாட்டை காக்கும் செயலா? இப்படி, ஆளுநரின் தமிழர் விரோத அணுகுமுறைகள் தொடர்ச்சியாக கண்கூடாகக் காணக்கிடக்கின்றன.
தமிழையும் அதன் பண்பாட்டையும் ஏற்றத் தக்கபடி பேணாமல், அதை எப்படியும் குறைத்து காண்பிக்க முயற்சிக்கும் ஆளுநரை நீங்கள் பாராட்டுவது ஏன்? உங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு உங்கள் வாயிலாக செய்யப்படக்கூடிய துரோகத்தை உணருங்கள்!"**
என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Edited by Siva