ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (14:45 IST)

மூழ்கி கிடக்கும் புல்லட்: ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்!

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் தாக்கியதில் ஜப்பான் நிலைக்குலைந்துள்ளது. 
 
ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் ஒன்று தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
ஹகிபிஸ் எனும் அந்த டைஃபூன் புயல் சனிக்கிழமை டோக்கியோ நகரின் தெற்கே கரையைக் கடந்த நிலையில், அது கடுமையான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியவாறு வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 
நகனோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உலக புகழ்ப்பெற்ற ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
 
மீட்புப் பணிகளில் ஜப்பானில் 27,000 ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட டோக்கியோவின் புறநகர் பகுதிகளிலுள்ள வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்.
கிரேட்டர் டோக்கியோ பகுதியில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் இறந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜப்பானின் ஒரு சில பகுதிகளில், ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவில் 40 சதவீதம் ஒரு சில நாட்களிலேயே பெய்துள்ளது.
குறிப்பாக, ஜப்பானின் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு 48 மணிநேர காலத்தில் அதிகபட்ச மழையாக ஹகோன் எனும் பகுதியில் ஒரு மீட்டர், அதாவது 100 சென்டிமீட்டர் மழை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் மட்டும் பதிவாகியுள்ளது.
 
வெள்ளப் பெருக்கில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிடங்குகளில் இருந்த அறுவடை செய்யப்பட்ட ஏராளமான உணவு தானியங்கள் நீரில் மூழ்கி வீணாகின.