செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (10:52 IST)

மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் தமிழ்நாட்டு கிராமம்!

மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டு வேலைகள், வழிபாடுகளில் இருந்து விலக்கி வைக்கும் பழக்கவழக்கங்களை இன்றும் நாம் காண்கிறோம்.
 
ஆந்திரா, தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சில கிராமங்கள் இன்றளவும் மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒதுக்கி வைக்கின்றன.
 
மார்ச் 2018 இல், சமூகப் பிரச்சினைகள் குறித்த பிபிசியின் சிறப்புச் செய்தியின் ஒரு பகுதியாக, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள காந்தகொல்லஹட்டி கிராமத்திற்கு பிபிசி சென்று இருந்தது. அங்கும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.
 
அங்கு தொடரும் இந்த விசித்திரமான நடைமுறை குறித்து பிபிசி கட்டுரைகளை வெளியிட்டு இருந்தது. அந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களிடையே மாற்றத்தைக் கொண்டு வரவும் அதிகாரிகள் முனைப்பு காட்டினர்.
ஆனால், அந்த கிராமங்களின் நிலை இன்னும் மாறவில்லை என்று முன்னதாக பிபிசிக்காக கட்டுரை எழுதிய பிரதிமா கூறுகிறார்.
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள உரிநயனப்பள்ளி, உரிநயனிக்கோட்டுர், பாளையம், சாலர்லப்பள்ளி ஆகிய கிராமங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள ஏகலநத்தம் கிராமத்திலும் இதேபோன்ற அவல நிலை தொடர்கிறது.
 
இந்த கிராமங்களில் சுமார் 2,500 மக்கள் வசிக்கின்றனர். மாதவிடாய் காலத்தின் போது, பெண்களை கிராமத்திற்கு வெளியே வைத்திருக்கும் வழக்கம் இன்றும் தொடரும் இந்த கிராமங்களுக்கு பிபிசி குழு சென்றது.
 
அப்போது அந்த கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த சில பெண்கள் பிபிசியிடம் பேசினர்.
 
ஆந்திரா, தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள இந்த ஊர்களில் வசிக்கும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் கிராமத்திற்கு வெளியே தங்கும் வழக்கத்தை எப்போதும் பின்பற்றி வந்துள்ளனர்.
 
ஊரநயனிக்கோட்டூர் கிராமத்திலுள்ள வயல்களுக்கு அருகில் இரவில் மூன்று பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தனர். பிபிசி அவர்களை சந்தித்தது.
 
இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட போது, "எங்கள் கிராமங்களில் மாதவிடாய் நாட்களில் பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கம் உள்ளது," என்றார்கள்.
 
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏகலநத்தம் என்ற மலைக் கிராமத்தில் உள்ள 200 வீடுகளில் சுமார் 900 பேர் வசிக்கின்றனர். அங்கும் இதே நிலைமை தான் காணப்படுகிறது.
 
குடிசையில் தங்கி, மலைகளில் சமைக்கும் பெண்கள்
 
பெண்கள் தங்கும் வகையில் உள்ள இந்த குடிசைகளில், மாதவிடாய் நாட்களில் இரவு நேரத்தில் வந்து பெண்கள் தங்குகின்றனர்.
 
பகல் நேரத்தில் மலைக்கு அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடுகின்றனர், இந்த பெண்கள்.
 
இங்கு வசிக்கும் பெண்கள், மாதவிடாய் நாட்களில் இப்படித்தான் 4 நாட்களுக்கு கிராமத்தையும், சொந்த வீட்டையும் விட்டு வெளியேறு இப்படி மலைகளில் தங்க வேண்டியுள்ளது.
 
வெயில், மழை என எல்லா தட்பவெப்ப சூழலிலும், பெண்களில் இந்த நிலை மாறுவதில்லை
 
பிபிசியிடம் பேசிய மல்லிகா, "இந்த பாரம்பரியம் என் குடும்பத்தின் முன்னோர்களிடம் இருந்து வந்தது," என்று கூறினார். மல்லிகா தமிழ்நாட்டை சேர்ந்தவர், திருமணத்திற்கு பிறகு ஆந்திராவில் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கிறார்.
 
பிறந்தது முதல் இறப்பது வரை இதே பாரம்பரியம் இங்கு தொடர்கிறது என்று அவர் கூறுகிறார்.
 
"ஒவ்வொரு மாதமும் எனக்கு இதே நிலைமை தான். எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்லிய இந்த வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. என்ன ஆனாலும் 4 நாட்கள் இங்கேதான் நான் இருக்க வேண்டும். மழை பெய்தால் மரத்தடியில் அல்லது பாறைக்கு கீழே இருப்போம். சில நாட்களில் தார்பாயை வைத்து குடிசை கட்டி உள்ளே இருப்போம். அப்படி தங்கும் போது பாம்பு, தேள் போன்றவையும் வரும். எந்த துன்பம் வந்தாலும் அதை நாங்கள் அனுபவிக்க வேண்டும், வேறு வழியே இல்லை," என்றார் மல்லிகா.
 
மாதவிடாய் நாட்களில் பெண்கள் மட்டுமல்லாது, அவர்களின் குழந்தைகளும் இங்கேயே தங்க வேண்டும். அந்த நான்கு நாட்களிலும் குழந்தைகள் தான் உணவை கொண்டு வந்து தருகிறார்கள்.
 
"என் மூன்று மாத குழந்தையுடன் நான் இங்கே வந்து தங்கி இருந்தேன்," என்று மல்லிகா கூறினார்.
 
'சந்தேகம் இருந்தால் வெளியே அனுப்பி விடுவார்கள்'
 
சாலர்லப்பள்ளி கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் இதே நிலைதான் காணப்படுகிறது.
 
திருவிழா காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்தால், ஊரை விட்டு வெளியே அனுப்பி வைத்து விடுகின்றனர்.
 
இதுமட்டுமின்றி, வயதுக்கு வந்த சிறுமிகளும் திருவிழா காலங்களில் 10 நாட்களுக்கு வெளியில் இருக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
 
சாலர்லப்பள்ளியைச் சேர்ந்த பாலம்மா கூறுகையில், "பிரசவ காலத்தின் போது ஊருக்கு வெளியே மரத்தடியில் குடிசை போட்டு தங்க வேண்டும். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு அங்கே தான் தங்க வேண்டும். வீட்டில் உள்ள ஆண்களும் 10 நாட்களுக்கு வீட்டுக்கு செல்ல மாட்டார்கள். 11வது நாள் தீட்டு கழித்த பிறகு அவர்கள் வீட்டுக்கு செல்வார்கள்," என்றார்.
 
வெளியூரில் இருந்து திருமணத்திற்கு பிறகு இங்கு வரும் மருமகளுக்கும் இதே நிலைதான் என்றார் பாலம்மா.
 
கிராமத்திற்கு வந்த மருமகள் என்ன சொல்கிறார்?
 
ஏகலநத்தம் கிராமத்திற்கு புதிதாக வந்த ஒரு மருமகள் இந்த வழக்கத்தை வெறுக்கிறார்.
 
தஞ்சாவூரில் இருந்து ஏகலநத்தம் கிராமத்திற்கு திருமணம் செய்து கொண்டு வந்துள்ள காஷிமா பிபிசியிடம் கூறுகையில், "மூன்று நாட்கள் பூஜை அறைக்கு செல்லாமல் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த சடங்குகள் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை," என்றார்.
 
"இந்த சடங்கைத் தவிற மற்ற எல்லாமே எனக்கு இந்த ஊரில் பிடிக்கும். திருமணத்திற்கு முன்னால் எனக்கு இந்த சடங்கு பற்றி தெரியாது. எங்க ஊர் தஞ்சாவூரில் இது போல சடங்கு எதுவும் கிடையாது. வீட்டுக்குள்ளே ஒரு அறையில் நான் இருப்பேன். ஆனால் இங்கே 2 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து வந்த போது கிராமத்திற்கு வெளியே போக வேண்டும் என்று சொன்ன போது வெறுப்பாக இருந்தது," என்று காஷிமா கூறினார்.
 
இது போன்ற பழக்கவழக்கம் மிகவும் அருவருப்பானது என்றும், இந்த நடைமுறை மாற வேண்டும் என்று காஷிமா விரும்புகிறார். என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க என்னுடைய காலத்திலேயே மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்று காஷிமா தெரிவித்தார்.
 
மாற்றத்தைத் தேடி
 
 
இந்த கிராமங்களில் தொடரும் பழமையான பழக்கவழக்கங்களை மாற்ற போதுமான முயற்சிகளை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முனிராஜ் பாபு இதுகுறித்து பிபிசியிடம் பேசும்போது, கடந்த ஏழு ஆண்டுகளில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் நிறைய மாற வேண்டியுள்ளது என்றார்.
 
"நாங்கள் 2016 முதல் பணியாற்றி வருகிறோம். ஆந்திராவின் 4 கிராமங்களிலும், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலும் இந்த மூடநம்பிக்கைகள் உள்ளன. அங்கு சென்று மருத்துவர்கள் மற்றும் சமூகவியல் படிக்கும் மாணவர்கள் உதவியுடன் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். சிறிய அளவில் அங்கு மாற்றம் நிகழத் தொடங்கி இருக்கிறது," என்றார் முனிராஜ் பாபு.
 
கிராம மக்களுடன் நெருக்கமாக பணியாற்றினால் மட்டுமே இங்கு மாற்றத்தை கொண்டு வர முடியும் என முனிராஜ் போன்ற சமூக ஆர்வலர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
 
இந்த கிராமங்களில் கடவுளின் நகைகள் வைக்கப்பட்டுள்ளதால் மாதவிடாய் நாட்களில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று கிராமத்தில் வசிக்கும் பெரியவர்கள் அச்சம் கொள்கின்றனர்.
 
கிராமத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பண்பாட்டை மதித்து, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தங்குவதற்காக கான்கிரீட் கட்டிடங்களை கட்டியுள்ளனர் முனிராஜ் போன்ற சமூக ஆர்வலர்கள்.
 
"அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர், செய்தித்தாளில் வெளியான செய்தியை பார்த்துவிட்டு, ஏகலநத்தம், உரிநயனப்பள்ளி கிராமங்களில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். பெண் குழந்தைகள் இப்படி காடுகளுக்கு சென்று தங்குவது ஆபத்து என்பதை உணர்ந்து இந்த உதவியை அவர் செய்தார். இப்போது இந்த கட்டிடங்களுக்கு மகிளா ஆசிரமம் என பெயர் வைத்துள்ளோம்," என்று முனிராஜ் பாபு கூறினார்.
 
இந்த வழக்கம் எப்படி வந்தது?
 
இக்கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். அனைவரும் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்து வருகின்றனர்.
 
இந்த கிராமங்களை பலர் இன்றும் செருப்பு அணிவதில்லை. ஆனால், இன்றைய இளைஞர்களிடம் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலைக்காக வெளியூருக்கு செல்லும் இளைஞர்கள் செருப்பு அணிந்து செல்கின்றனர்.
 
ஆனால், திருவிழாவின் போது சாமியின் நகைகளைத் தொடுபவர்கள் காலில் செருப்பு அணிவதில்லை. செருப்புகளை அணிந்தால் துரதிர்ஷ்டம் வரும் என்று இந்த ஊர் மக்கள் நினைக்கிறார்கள்.
 
இந்த ஐந்து கிராமங்களுமே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. சில ஊரிலுள்ள கோயில்கள் காட்டுப் பகுதியில் இருக்கிறது.
 
கோயில் பூசாரிகள், சாமியின் நகையையும், பொருட்களையும் திருவிழா காலங்கள் தவிர பிற நாட்களில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அறைகளில் வைப்பதால், அதை யாரும் தொடக்கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
 
“நாங்கள் கதிரி லட்சுமி நரசிம்மசுவாமியை வழிபடுபவர்கள். எங்கள் ஊரிலிரிந்து நடந்து வந்து சாமி அந்த மலையில் ஏறினார். நாம் கடவுளைத் தொடக்கூடாது. எங்கள் ஊரில் அம்மன் திருவிழாவின் போது மாதவிடாயுடன் ஒரு பெண் இருந்ததால் கடவுளுக்கு அடிக்கும் மேளம் உடைந்தது. அன்றிலிருந்து எங்கள் பெரியவர்கள் இந்தச் சடங்குகளை செய்ய சொல்லி இருக்கிறார்கள். என் தாத்தா காலத்திலிருந்தே கர்ப்பிணிப் பெண்களும், மாதவிடாய் உள்ள பெண்களும் கிராமத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன,'' என உரிநயனிப்பள்ளியைச் சேர்ந்த தாயப்பா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
மாதவிடாய் காலங்களில் கிராமத்தில் சமைத்த உணவு, தண்ணீரை கூட பெண்களுக்கு இங்குள்ள நபர்கள் கொடுப்பதில்லை. வெகு தொலைவில் உள்ள இருந்து தண்ணீர் எடுத்து வந்து உணவு சமைக்கின்றனர். அவசர காலங்களில் ஹோட்டல்களில் உணவு வாங்குகின்றனர்.
 
மாதவிடாய் நாட்களில் இந்த கிராமத்தைல் உள்ள எந்த ஒரு பொருளையும் பெண்கள் தொடுவதை குற்றமாக கருதுகின்றனர், இந்த ஊரில் வாழும் மக்கள்.
 
கிராம சபைக் கூட்டம் மூலமாக இந்த கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பிபிசியிடம் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவய்யா தெரிவித்தார்.
 
ஆனாலும் மக்களிடம் மாற்றம் வரும் வரை இந்த நடைமுறைகளை மாற்றுவது கடினம் என்று அவர் கூறினார்.
 
மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதில் பெண்கள் நம்பிக்கை கொள்ளாத வரையில் நமது முயற்சிகள் எதுவாக இருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார் அவர்.