திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 மே 2021 (14:45 IST)

சுபோத் குமார் ஜெய்ஸ்வால்: போலீஸ் மட்டுமல்ல வேவு பார்ப்பதில் நிபுணர்

இந்திய புலனாய்வுத்துறையின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் என்ற இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியை பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயரதிகாரிகள் நியமனங்களுக்கான உயர்நிலைக்குழு நியமித்துள்ளது.

இந்த குழுவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை எதிர்கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய நியமனத்தைத் தொடர்ந்து பதவியேற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநர் ஆக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி வகிப்பார் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தமது புதிய நியமனம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், "சிபிஐயில் பணியாற்றுவோரின் தொழில்முறை சார்ந்த திறன்களை மேம்படுத்தி உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாற்ற பங்களிப்பை வழங்குவேன்," என்று தெரிவித்தார்.

1985,1986 ஆகிய ஆண்டுகளில் இந்திய காவல் பணியில் சேர்ந்த உயரதிகாரிகளே சிபிஐ இயக்குநர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதால், அந்த காலகட்டத்தில் பணியில் சேர்ந்து, சிபிஐ இயக்குநர் பதவி வகிக்க வரையறுக்கப்பட்ட தகுதிகளுக்கு பொருந்தக்கூடிய சுமார் 70 பேரின் பெயர்கள் இந்திய உயர்நிலைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டது. கடைசியில் ஐந்து உயரதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் ஒருவராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய காவல் பணியில் 1985ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்தவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால். காவல்துறை பணியில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு போன்றவற்றில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவான "ரா", உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனிக்கும் இன்டலிஜென்ஸ் ப்யூரோ (ஐ.பி) ஆகியவற்றிலும் பணியாற்றியவர்.

மும்பை காவல் துறை ஆணையராக 2018-2019 ஆண்டில் பணியாற்றிய போது, அவரை மாநில காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கு அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்தார். அந்தப் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர் மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் பதவியை வகித்து வந்தபோதுதான் சிபிஐ இயக்குநர் பதவிக்கு இவர் தேர்வாகியிருக்கிறார்.
வழக்கமாக சிபிஐ தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி, ஊழல் எதிர்ப்பு வழக்குகள், உளவு சார்ந்த பணிகள் போன்றவற்றில் நீண்ட காலம் பணியாற்றியிருக்க வேண்டும். அதன்படியே, சுபோத் குமார் ஜெய்ஸ்வால் ரா பிரிவு, ஐபி உளவுத்துறை போன்றவற்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்பதால் அவரை சிபிஐ இயக்குநர் பதவிக்கு உயர்நிலைக்குழு தேர்வு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ரா பிரிவில் இவர் பதவி வகித்த காலம் ஒன்பது ஆண்டுகள். இதில் மூன்று ஆண்டுகளை அந்த பிரிவின் கூடுதல் செயலாளராக இருந்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க வகையில், மகாராஷ்டிரா காவல் பணியில் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் இருந்தபோதுதான் நாட்டையே உலுக்கிய டெல்கி முத்திரைத்தாள் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும்வரை அதை புலனாய்வு செய்த அதிகாரியாக இருந்தவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்.

அதன் பிறகு மாநில காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். பிறகு மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப்படை தலைமை அதிகாரியாக அவர் பணியாற்றினார்.

2008இல் மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் உளவுத்துறை தலைமை அதிகாரியாக இவர் பதவி வகித்த காலத்தில்தான் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்த மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கையில் அமெரிக்க புலனாய்வாளர்களுடன் நெருக்கமாக தொடர்பைக் கொண்டு குற்றவாளிகளின் அடையாளத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர்களில் ஒருவராக முக்கிய பங்களிப்பை திரை மறைவிலேயே வழங்கி வந்தார் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்.

மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் வன்முறை வழக்குகள் தொடர்பரான விசாரணையும் இவரது மேற்பார்வையிலேயே நடந்தன. அந்த வழக்குகள் பின்னர் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

"மகாராஷ்டிராவில் எப்போதெல்லாம் மாநில காவல்துறை புலனாய்வு செய்த வழக்குகள் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்துகிறதோ அதன் பிந்தைய மாதங்களில் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் ஒன்று உளவுப் பணிக்கு மாற்றலாவார் அல்லது மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளப்படுவார்," என்கின்றனர் அவருடன் பணியாற்றிய இளநிலை அதிகாரிகள்.

1962ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மகாராஷ்டிராவின் தன்பாத் மாவட்டத்தில் பிறந்த இவர், பி.ஏ ஹானர்ஸ் மற்றும் எம்பிஏ மேல்படிப்பு படித்துள்ளார்.