வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (13:00 IST)

கொரோனா வைரஸ் 'இந்தியத் திரிபு' என்பதை உடனே நீக்குங்கள்: ஃபேஸ்புக், ட்விட்டேர் சமூக ஊடகங்களுக்கு நரேந்திர மோதி அரசு உத்தரவு

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை 'இந்தியத் திரிபு' (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு 'B.1.617' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை 'இந்தியத் திரிபு' என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது.

பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்டன் திரிபு, பிரேசில் திரிபு என்று குறிப்பிடப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையைக் கையாள்வதில் இந்திய அரசு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய அரசை விமர்சிக்கும் ட்விட்டர் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனத்திற்கு கடந்த மாதம் இந்திய அரசு உத்தரவிட்டது கடுமையான எதிர்ப்பை தூண்டியது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வைரஸ் திரிபு உண்டாக்கிய பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இந்தியா - உலகளவில் இரண்டாம் இடம்

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி 2 கோடியே 60 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று லட்சத்தைத் தொட்டுள்ளது.

அலுவல்பூர்வமான தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில், உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

ஆனால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்று துறைசார் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்தியத் திரிபு என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளிக்கிழமை என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஆணை ஒன்றை அனுப்பியது. இவை செய்தி முகமைகளால் வெளியிடப்பட்டன.

இந்தியத் திரிபு என்று குறிப்பிடும் பதிவுகளை உங்கள் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

"இந்தியத் திரிபு உலக நாடுகளில் பாதிப்பை உண்டாக்குவதாக தவறான தகவல் இணையதளத்தில் பரவி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இது முற்றிலும் தவறான கூற்று," என்று அதில் கூறப்பட்டுள்ளதாக ஏ.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

B.1.617 என்று பெயரிடப்பட்டுள்ள திரிபை உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையை எதிலும் தொடர்புபடுத்தவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான பதிவுகள் அனைத்தையும் நீக்குவது மிகவும் கடினமானது என்று சமூக ஊடக நிறுவனம் ஒன்றை சேர்ந்த அதிகாரி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

எளிதில் பரவக்கூடிய தன்மையுடைய இந்தத் திரிபு கடந்த ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

உலக நாடுகள் பலவும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடை விதித்துள்ளன.

நரேந்திர மோதி ஆட்சியில் இந்தியாவில் கருத்து சுதந்திரம்

சமூக ஊடக நிறுவனங்களை பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.

ஜனவரி மாதத் தரவுகளின்படி, ட்விட்டர் நிறுவனத்துக்கு உலகிலேயே மூன்றாவது அதிக பயனாளர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் தவறான தகவல்கள் பகிர்வது ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை இந்த ஆண்டு இந்திய அரசு வெளியிட்டது.

சட்டவிரோதமானது என்று அரசு கருதும் பதிவுகள் ஏதாவது சமூக ஊடகங்களில் வெளியானால் அவற்றை நீக்குவதற்கு அரசு உத்தரவிட இது வழிவகை செய்கிறது.

ஒருவேளை அந்த சமூக ஊடக நிறுவனம் அரசு அளித்துள்ள காலக்கெடுவுக்குள் அந்தப் பதிவுகளை நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை இந்திய அரசிடமிருந்து எதிர்கொள்ள நேரிடும்.

இதன்படி பயனர்கள் என்ன பதிவிட்டாலும் அது அவர்களது கருத்து என்று கூறி சமூக நிறுவனங்கள் அவற்றுக்கு பொறுப்பேற்காமல் இருக்க முடியாது.

இந்த விதிமுறைகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருக்கின்றன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு ஊடகங்கள், பத்திரிக்கை சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக கவலைகளும் உள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கொரோனா பரவலை சரியாகக் கையாளவில்லை என்று அவரை விமர்சித்து பதிவிடப்பட்ட கருத்துகளை நீக்குமாறு கடந்த மாதம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களை இந்திய அரசு அறிவுறுத்தியது.

திரிக்கப்பட்ட தகவல்கள் என்பதை பயனர்களுக்கு தெரிவிக்கும் வகையிலான 'manipulated media' எனும் எச்சரிக்கை அறிவிப்பை சில இந்திய அரசியல்வாதிகள் பதிவிட்ட ட்வீட்டுகளில் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு இருந்ததையும் வெள்ளியன்று இந்திய அரசு விமர்சித்து இருந்தது.