ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டுப்பாடு அறிவிப்பு – அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது.
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும், பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தும் இன்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”ஆன்லைன் வகுப்புகளுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. சமீபத்திய ஆசிரியரின் பாலியல் அத்துமீறலே அதற்கு உதாரணம். எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கான வரைவு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.