செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (22:02 IST)

இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மலேசியாவில் போராட்டம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களை ஒதுக்கியும் ஓரங்கட்டியும் வைக்கும் வகையில் உள்ளது என்றும், இது தங்களுக்கு கவலை அளிக்கிறது என்றும் மலேசிய வாழ் இந்திய இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த மதத்தினரையும் ஓரங்கட்டாத வகையில் அமைய வேண்டும் என்று மலேசிய இந்திய இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடியுரிமை பதிவேட்டையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
 
இஸ்‌ரேல் வழிமுறைகளை பின்பற்றுகிறார் பிரதமர் மோதி
 
அப்போது மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி  இஸ்லாமியர்களை ஒடுக்குவதில் இஸ்‌ரேலை பின்பற்றுவதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 
"இஸ்‌ரேலுடன் நெருக்கம் பாராட்டி வருகிறார் மோதி. அங்கு பயணம் மேற்கொண்ட போது எவ்வாறு பாலஸ்தீனர்களை ஒடுக்கி அகதிகளாக இஸ்‌ரேல் மாற்றியுள்ளது என்பதை பார்த்து வந்துள்ளார். இப்போது இஸ்‌ரேல் வழிமுறைகளை மோதியும் பின்பற்றுகிறார்."
 
"மோதி அரசு ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. அதனால் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது," என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய அரசையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.
 
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத்துக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காண முடிந்தது.
 
மேலும் போராட்டத்தின் போது தமிழ் மட்டுமல்லாமல், மலாய், ஆங்கிலம், உருது, மலையாள மொழிகளிலும் சிலர் உரையாற்றினர்.
 
எதிர்காலத்தில் மற்றவர்களும் பாதிக்கப்படலாம்
போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஒற்றுமை மற்றும் தொலைநோக்கு இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சபாருடீன் பின் அப்துல்ரஹ்மான், இந்திய பிரதமர் மோதி தற்போது ஹிட்லரைப் போல் செயல்படுவதாகச் சாடினார்.
 
சபருடீன் பின் அப்துல்ரஹ்மான்
 
இன்று இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நாளை மற்ற சமூகங்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
"ஹிட்லரின் நாஜி படைகள் சிறுபான்மையினரை விரட்டியது. இப்போது இந்தியாவும் அந்தப் பாதையில் செல்வது போல் தோன்றுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது. எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
 
உத்தரப்பிரதேசத்தின் மௌனத்துக்கு காரணம் காவல்துறை மீதான அச்சமா?
'இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை' - நரேந்திர மோதி கூறியது உண்மையா?
"முன்பு இந்தி மொழியைத் திணிக்க முற்பட்டனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இஸ்லாமியர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. மொழி, கலை, கலாச்சாரம் என ஒவ்வொரு தளத்திலும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இந்தியாவில் இந்துக்களுக்கே பிரச்சினை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை," என்றார் சபருடீன் பின் அப்துல்ரஹ்மான்.
 
36 இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
 
மறு ஆய்வு செய்ய மலேசிய இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை
இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் பிறந்த இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என மலேசிய இந்திய முஸ்லீம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 
எனவே இச்சட்ட திருத்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
 
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது எடுத்தப்படம்.
 
"இந்தியா ஒரு வல்லரசு நாடு. அதன் உள் விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் நம் மூதாதையர்களின் வாழ்ந்த நாடாகத் திகழும் இந்தியாவின் மீது உள்ள அக்கறையின் காரணமாக சில கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்," என்று மிம்காய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹாஜி சைட் ஜமாருல் கான் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக குடியுரிமை பெறுவதற்கு அதிகமான ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
"இந்த சட்ட திருத்தத்தினால் இஸ்லாமியர்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்ற எங்களின் கவலையை இந்திய அரசிடம் தூதரகம் மூலம் தெரிவித்துள்ளோம்," என்று ஜமாருல் கான் மேலும் கூறியுள்ளார்.
 
மிம்காய்ன், பெர்மிம் பேரவை, பினாங்கு முஸ்லிம் லீக் இயக்கம், மலேசிய மலபாரிகள் கூட்ட மைப்பு, சிலாங்கூர், கோலாலம்பூர் இந்திய முஸ்லிம் சஹாபாட் இயக்கம், இளம் முஸ்லிம் விளையாட்டு கிளப், மாவார், காபெய்ம், எம்எம்ஒய்சி, கெபிமா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மனுவை இந்திய தூதரகத்தில் ஒருசேர அளித்தனர்.