பூத்தொட்டிக்குள் சடலம்: சீரியல் கில்லர் கைது...

Last Updated: புதன், 18 ஏப்ரல் 2018 (14:54 IST)
இலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா போலீஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்ஆர்தரால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் நம்புகின்றனர்.
 
66 வயதாகும் ப்ரூஸ் மெக்ஆர்தர் மீது, 37 வயதாகும் கிருஷ்ண குமார் கனகரத்திரனம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. மெக்ஆர்தரால் கொல்லப்பட்டவரர்களில் கனகரத்திரனம் 8-ஆவது நபர் ஆவார்.
 
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதிக்குள்ளாக இடைப்பட்ட காலத்தில் கிருஷ்ண குமார் கனகரத்திரனம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
 
2010ஆம் ஆண்டு கனடா வந்த கிருஷ்ண குமார் கனகரத்திரனம் டொராண்டோ பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்தவார இறுதியில் கனகரத்தினத்தின் மரணம் குறித்து இலங்கையில் வசிக்கும் அவரது குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக டொராண்டோ போலீஸ் பிரிவை சேர்ந்த அதிகாரி ஹேங்க் இட்ஸிங்கா தெரிவித்தார்.
 
கனகரத்தினத்தின் குடியுரிமை நிலை குறித்து ஹேங்க் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், கனடாவில் கனகரத்தினம் காணாமல் போனதாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
கொலையாளி என சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்ஆர்தருக்கு தொடர்புடைய இடம் ஒன்று டொராண்டோவில் உள்ளது. அங்கு செடிகளை வைக்கும் தொட்டிகளிலிருந்து துண்டுகளாக வெட்டப்பட்ட ஏழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஓர் உடலைத்தான் டொராண்டோ போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :