1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (13:33 IST)

ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பம், ஸ்டெம் செல் மூலம் அழிந்துபோன டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்

BBC
90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டஸ்மானியன் புலி என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தின் முறைப்படியான பெயர் 'தைலசைன்' என்பதாகும். இந்த இனத்தில் மிச்சம் இருந்த கடைசி விலங்கு 1930களில் இறந்துபோனது.

ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்னும் 10 ஆண்டுகளில் முதல் தைலசைன் விலங்கினை உருவாக்கி காட்டில் விட முடியும் என்று இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிந்த உயிரினங்களை மீட்கும் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதுதான் என்கிறார்கள் இவர்கள்.

ஆனால், அழிந்துபோன உயிரினத்தை மீட்பது சாத்தியமா என்பது குறித்து மற்ற விஞ்ஞானிகள் சந்தேகம் கொள்கிறார்கள். இதெல்லாம் அறிவியல் புதினம் போன்ற கற்பனையே என்பது அவர்களது கருத்து.

உடலின் மேற்பகுதியில் புலிக்கு உள்ளதைப் போல கோடுகள் இருப்பதால் இந்த விலங்குக்கு டஸ்மானியன் புலி என்ற புனைபெயர் வந்தது. ஆனால், உண்மையில் இது மர்சூபியல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பைம்மா இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். ஆஸ்திரிலியாவில் பெரிதும் காணப்படும் பைம்மா பாலூட்டி இன விலங்குகளுக்கு வயிற்றின் வெளிப்புறம் பை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். கங்காருவுக்கு இருக்குமே அதைப் போன்ற இந்தப் பையில் இந்த விலங்குகள் தங்கள் குட்டிகளை வைத்து வளர்க்கும்.

எப்படி மீண்டும் உருவாக்குவார்கள்?

 
டஸ்மானிய புலி இனத்தைப் போலவே இருக்கும் வாழும் பைம்மா இன விலங்கு ஒன்றின் டி.என்.ஏ.வை எடுத்து அதை ஜீன் எடிட்டிங் முறையில் மாற்றியமைத்து அழிந்துபோன டஸ்மானிய புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இப்படி உருவாக்கப்படும் விலங்கு மிகச்சரியாக டஸ்மானிய புலியாகவோ அல்லது அதைப் போல மிக நெருக்கமாகக் காணப்படுவதாகவோ இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

பல விஞ்ஞானத் தடைகளை உடைத்துதான் இந்த விலங்கினை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி அதை செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

"கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட இந்த தைலசைன் இனக் குட்டி ஒன்றை 10 ஆண்டுகளில் உயிரோடு உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன்," என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ பாஸ்க்.

ஆஸ்திரேலியாவுக்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வந்து சேர்ந்ததில் இருந்து டஸ்மானியப் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. டிங்கோஸ் எனப்படும் ஒரு காட்டு நாய் இனம் உருவானபோது மீண்டும் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

நடந்து முடிந்தால் பெரிய அதிசயம்

கடைசியாக டஸ்மானிய தீவில் மட்டுமே இந்த விலங்குகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஆனால், அங்கேயும் பிறகு வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த உலகின் கடைசி டஸ்மானியப் புலி 1936ல் இறந்தது.

இந்த டஸ்மானியப் புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், அழிந்துபோன பிறகு மீட்டெடுக்கப்படும் முதல் உயிரினமாக டஸ்மானியப் புலி இனம் இரு்கும். ஆனால், இந்த திட்டத்தில் இடம்பெறாத பல விஞ்ஞானிகள் இதற்கான சாத்தியம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளார்கள்.

"அழிந்த உயிரினத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கற்பனைக் கதை," என்று சிட்னி மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பழங்கால டி.என்.ஏ. தொடர்பான ஆஸ்திரேலிய மையத்தை சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரமி ஆஸ்டின்.
"இந்த திட்டம் விஞ்ஞானிகளுக்கு ஊடக வெளிச்சம் தருவதே தவிர, உண்மையில் காத்திரமான அறிவியல் பணி தொடர்பானது அல்ல" என்றும் அவர் கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.

டஸ்மானியப் புலிகளை மீட்டெடுக்கும் யோசனை 20 ஆண்டுகளாக உள்ளதுதான். 1999ல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் இந்த விலங்கை குளோன் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த விலங்கின் மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்கவும், மறு கட்டுமானம் செய்யவும் பல முயற்சிகள் விட்டுவிட்டு நடந்தன.

டஸ்மானிய புலிகளை மீட்கும் தற்போதைய திட்டத்தை மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் டெக்சாஸ் நகரில் இருந்து இயங்கும் கொலோசல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

பல ஊழிகளுக்கு முன்பு அழிந்துபோன மாமத யானைகளை உயிரோடு மீட்பதற்கு ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது கொலாசஸ் நிறுவனம். ஆனால், இந்த முயற்சியில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.