1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (12:53 IST)

உயரும் விலைவாசியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும் வழிகள்

Anand Srinivasan
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்களின் கையில் உள்ள பணம் குறைவதோடு, பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் எப்படி ஏற்பட்டது, இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு மிக வேகமானதாகவும் அதிகமானதாகவும் இருக்கிறது. என்ன காரணம்?

மில்டன் ஃப்ரைட்மேன் என ஒருவர் இருந்தார். அவர்தான் பருவினப் பொருளியலில் (Macro Economics) பணவீக்கத்தைப் பற்றி ஆய்வுசெய்தார். பணவீக்கம் என்பது எப்போதுமே ரொக்கம் சார்ந்த ஒரு சூழல் என்று குறிப்பிட்டார். நாம் விலை கொடுத்து வாங்குவதில் பொருட்கள், சேவைகள் என இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. பொருட்களையும் சேவைகளையும் சேர்த்துத்தான் நாம் பயன்படுத்துகிறோம். பொருட்களின் உற்பத்தியையோ, சேவைகளின் அளவையோ திடீரென மிகப் பெரிய அளவுக்கு உயர்த்த முடியாது. இரண்டு சதவீதம், ஐந்து சதவீதம் என்றுதான் உயர்த்த முடியும்.

மற்றொரு பக்கம் இந்தப் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதற்கான பணம் இருக்கிறது. நினைத்தால் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் அரசால் அடிக்க இயலும். இப்போது அச்சடிக்கக்கூட தேவையில்லை. கணக்கில் அதிகரித்துக்கொண்டாலே போதும்.

இந்த கோவிட் காலகட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருவாய் வரவில்லை. இதனால், ரிசர்வ் வங்கியே பாண்ட்களை வாங்கி, பணத்தை கடனாகக் கொடுக்கச் சொன்னது. அதேபோல ரிசர்வ் வங்கியும் செய்தது. இதனால், சந்தையில் பணம் அதிகரித்தது. எளிய பொருளாதார விதிப்படி, எது குறைவாக இருக்கிறதோ அதன் மதிப்பு அதிகமாக இருக்கும். இப்போது பணம் அதிகமாகவும் பொருட்களும் சேவைகளும் குறைவாகவும் இருக்கின்றன. இதனால்தான் விலைவாசி உயர்கிறது.

மற்றொரு பக்கம் பெட்ரோலின் விலை ஒரு பீப்பாய் 70 டாலரிலிருந்து 25 டாலர் வரை வந்தது. பிற நாடுகளில் எல்லாம் பெட்ரோலின் விலையைக் குறைத்து, மக்களுக்கே விலை குறைப்பின் பயனை அளித்தார்கள். ஆனால், இந்தியாவில் சிறப்பு வரிகள் விதிக்கப்பட்டு 26 லட்சம் கோடி மக்களிடமிருந்து பெறப்பட்டது. மக்களிடம் புழக்கத்தில் இருந்த 26 லட்சம் கோடி ரூபாய், இப்போது இல்லாமல் போய்விட்டது. ஒரு பக்கம் மக்களின் புழக்கத்தில் இருந்த பணம் எடுக்கப்பட்டது. மற்றொரு பக்கம் அதிக அளவில் பணம் அச்சிடப்பட்டது. ஆகவே, பணத்தின் மதிப்புக் குறைந்ததோடு மக்களிடம் பணமும் இல்லாமல்போனது.

எரிபொருள் விலை அதிகரித்தால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவு அதிகரித்தால் எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். விலைவாசி எங்கே அதிகரித்திருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் மட்டும்தான் கேட்கிறார். மற்றவர்கள் எல்லோருமே விலைவாசி உயர்ந்திருப்பதை உணர்கிறார்கள்.
Indian Economy

இதற்கடுத்ததாக ரஷ்ய - யுக்ரைன் யுத்தம். இதனால், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெயின் விலை அதீதமாக உயர்ந்தது. ஏனென்றால், ரஷ்யாவும் யுக்ரைனும்தான் மிகப் பெரிய அளவில் சூரியகாந்தி எண்ணையை உற்பத்தி செய்கிறார்கள். சூரியகாந்தி எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்தோனேஷியாவில் உற்பத்தியாகும் பனை எண்ணெயின் விலையும் உயர்ந்தது. இந்த இரு எண்ணெய்களின் விலையும் உயர்ந்ததால், மற்ற சமையல் எண்ணெய்களின் விலையும் உயர ஆரம்பித்தது. இதுதான் பணவீக்கத்தின் துவக்கம்.

இதெல்லாம் எந்த காலகட்டத்தில் நடந்தது?

பணம் அடிப்பதைப் பொறுத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இனிமேல் பணம் அடிக்கப்போவதில்லையென இப்போதுதான் சொல்லியிருக்கிறார். பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி என்பது கோவிட் காலகட்டத்திலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய் விலை உயர்வு என்பது கடந்த ஏழு மாதமாக நடக்கிறது. இதுதவிர வருவாய் குறையும்போது ஜி.எஸ்.டி. வரி அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தினால், அரசின் வருவாய் உயரத்தான் செய்யும். அதைவைத்து வளர்ச்சியிருப்பதாக சொல்ல முடியாது.

ஆக மக்களுக்கு பணமும் கொடுக்க மாட்டார்கள், விலையும் உயரும் என்றால் எப்படி? இந்தச் சூழலை சமாளிப்பது மிகவும் கடினம்.

சராசரியான மாத சம்பளம் வாங்கக்கூடிய ஒருவருக்கு, விலைவாசி இப்படிக் கடுமையாக அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்ள என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

மிகவும் கடினம். சில ஆண்டுகளுக்கு முன்பாக 400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இப்போது 1000 ரூபாய்க்கு விற்கிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றுபவர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போதுதான் மீண்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் வாங்கி சமாளித்திருப்பார்கள். அதற்கான வட்டியைக் கட்ட வேண்டும். நான் பணம் சேமிக்க வேண்டும் என்று சொல்வதற்காக என்னைப் பற்றி நிறைய மீம்ஸ்களைப் போடுகிறார்கள். நான் சொன்னதுபோல சேமித்து வைத்திருந்தால் இன்றைக்கு சிரமப்பட்டிருக்க மாட்டார்கள்.

மாத வருமானம் 40,000 ரூபாய் இல்லாவிட்டால் சென்னை போன்ற இடங்களில் வாழ்வதற்கே கஷ்டப்பட வேண்டும் என்று சொன்னதைக் கேலி செய்கிறார்கள். நான் நல்ல எண்ணத்தில்தான் சொன்னேன். ஒரு நல்ல இடத்தில் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாய் வேண்டும். இல்லாவிட்டால் ஊருக்கு வெளியில்தான் செல்ல வேண்டும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மாதம் 4-5 ஆயிரம் ரூபாய் ஆகிவிடும். பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும். எரிவாயு சிலிண்டர் ஆயிரம் ரூபாய். மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது. ஆகவே 40,000 ரூபாய் இல்லாவிட்டால், கணவன் - மனைவி, இரண்டு குழந்தைகள் சென்னையில் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம். ரேஷனில் பொருள் வாங்கினால்கூட இருப்பது கடினம்தான்.

அப்படியானால், சாதாரணமான, கீழ் மத்தியதர வர்க்கத்தினருக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

அடுத்த ஒரு வருடம் மிகக் கடினமாகத்தான் இருக்கப் போகிறது. ரஷ்ய - யுக்ரைன் போர் இப்போதைக்கு முடியாது. பெட்ரோல் - டீசல் விலை குறைந்தாலும் அதன் பலன் நமக்குக் கிடைக்காது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, கச்சா எண்ணையின் விலை குளிர்காலம் நெருங்கும்போது இன்னும் உயரப்போகிறது.
வெளிமாநில தொழிலாளிகளை அனுப்ப வேண்டாம்

அரசு விதிக்கும் வரிகளைப் பொறுத்தவரை இருவகையான வரிகள் இருக்கின்றன. ஒன்று நேரடி வரி. மற்றொன்று மறைமுக வரி. 2017ல் இருந்து நேரடி வரிகள் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அப்படியானால், வசதியாக இருப்பவர்கள் வரி செலுத்தவேண்டாம். சாமானியன் வரி செலுத்த வேண்டும். இதை மாற்றி வசதியாக இருப்பவர்கள் வரி அதிகம் செலுத்தும் வகையில் நேரடி வரி விதிப்பை அதிகரித்தால், இந்தப் பிரச்னை ஓரளவுக்குத் தீரும்.

35,000 - 40,000 வரை சம்பளம் வாங்கக்கூடியவர்கள், எந்தெந்த விஷயங்களைச் செய்வதன் மூலம் இந்த விலைவாசி உயர்வை சமாளிக்க முடியும்?

முதலில் சமூக ரீதியில் தங்களை மற்றவர்களுடன் ஒத்துப்போக பழகிக்கொள்ள வேண்டும். கூட்டுக் குடும்பமாக வாழப் பழகலாம். ஒரு சிறு குடும்பத்தை இந்தச் செலவைக் குறையுங்கள், அந்தச் செலவைக் குறையுங்கள் என்று சொல்வதைவிட, ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு பேர் சம்பாதிப்பது செலவுகளைச் சமாளிக்க உதவும். பெற்றோரோ, குழந்தைகளோ தனியாக வசித்தால் சேர்ந்து வாழலாம். இதனால் இரட்டைச் செலவுகளைக் குறைக்கலாம்.

செலவுகளைக் குறைக்க வேறு என்ன யோசனைகள் இருக்கின்றன?

நீங்கள் ஏற்கனவே தங்கத்தைச் சேர்த்து வைத்திருந்தால், அந்தத் தங்கத்தை அடகு வைத்து பணம் திரட்டி, வாடகை வீட்டிலிருந்து வேறு வீட்டை ஒத்திக்கு எடுத்துச் செல்லலாம். ஏனென்றால், வாடகை வீட்டில் குடியிருப்போரின் பெரிய செலவு வாடகையாகத்தான் இருக்கும். அதனை இந்த முறையில் குறைக்கலாம்.

சுயதொழில் செய்வோரின் வருவாய் இந்த காலகட்டத்தில் உயர்ந்திருக்குமா? அவர்களால் சமாளிக்க முடியுமா?

அவர்கள் வருவாய் எப்படி உயர்ந்திருக்கும்? சிறு, குறு தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளாக எந்த ஆர்டரும் இல்லாமல் இருந்தார்களே.. கடைகள் எல்லாம் மூடிதானே இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி, கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தவர்களுக்கு சம்பளம் கிடைத்தது. மற்றவர்களுக்கு? கடன்தான் ஏறியிருக்கும். அதற்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும். வட்டி வேறு மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ப. சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அதில், இந்தியாவில் நடுத்தர வருவாய் என்பது 15 ஆயிரம் ரூபாய். மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் மேலே உள்ள பத்து சதவீதம் பேர். அதாவது, மாதம் வெறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலே, இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் 10 சதவீதம் பேருக்குள் வந்துவிடுவீர்கள். தமிழ்நாட்டில் இந்தத் தொகை 40 ஆயிரமாக இருக்கலாம். மாதம் 1,20,000 சம்பாதித்தால் அதிகம் சம்பாதிக்கும் 3 சதவீதம் பேருக்குள் வந்துவிடுவீர்கள். மூன்று லட்சத்திற்கு மேல் வாங்கினால், அதிகம் சம்பாதிக்கும் ஒரு சதவீதம் பேருக்குள் வந்துவிடுவீர்கள். அப்படியானால், பணக்காரர்கள் என்பவர்கள், இந்த ஒரு சதவீதத்திலும் ஒரு சதவீதம் இருப்பார்கள். ஆகவே, 97 சதவீதத்திற்கு குறைவான மக்கள் தொகையினர் தங்கள் வாழ்வை நடத்தப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது அரசாங்கத்திற்குப் புரிய வேண்டும். ஆனால், அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் மேலே உள்ள ஒரு சதவீதம் பேருக்குத்தான் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசிப்பதில் ஒரு வசதி இருக்கிறது. இங்கு வரும் எல்லா அரசுகளுமே அரிசியை இலவசமாக அளிக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி அளிப்பதால், தமிழ்நாட்டில் பசி பட்டினி இருக்காது என்பது என் நம்பிக்கை. இந்தியா முழுக்க இது போல செய்ய வேண்டும். விரைவில் காலை உணவும் அளிக்கப்படும் என முதல்வர் சொல்லியிருக்கிறார். இதனால், குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாடோடு இருப்பது தடுக்கப்படும். ஆகவே, இங்கு அரசு முடிந்ததைச் செய்கிறது.

இதைவிடக் கூடுதலாகச் செய்ய வேண்டுமானால், அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். நேரடி வரியை உயர்த்தி, மறைமுக வரியை குறைக்க வேண்டும்.

கர்நாடகம் போன்ற மாநிலங்களில் விலைவாசியைச் சமாளிக்க முடியாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

இந்தப் பிரச்னை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என நினைக்கிறீர்கள்?

ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், அந்தப் பிரச்னை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். விலைவாசியை கணிப்பதில் இரண்டு புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஒன்று மொத்த விலை குறியீட்டு எண். மற்றொன்று சில்லரை விலை குறியீட்டு எண். ஆனால், மொத்த விலை குறியீட்டைவிட சில்லரை விலை குறியீடு குறைவாக இருப்பதாக அரசு சொல்கிறது. இது நம்புவதைப் போல இருக்கிறதா? மொத்த விலை 17 சதவீதம் அதிகரித்திருக்கிறது; ஆனால், சில்லரை விலை 7 சதவீதம்தான் அதிகரித்திருக்கிறது என்றால், எப்படி நம்ப முடியும்? ஆனால், இந்த 7 சதவீத உயர்வே மக்களால் தாங்க முடியாத ஒன்று.

இதில் நாம் அதிகம் பேசாத ஒன்று, இந்த அரசின் நடவடிக்கைகள் மக்களின் சேமிக்கும் பழக்கத்தையே நீக்கி வருகின்றன. இப்போது வைப்பு நிதிக்கு ஐந்தரை சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பாக வெறும் ஐந்து சதவீத வட்டிதான் தரப்பட்டது. அந்த வட்டி வருவாயிலும் 10 சதவீதம் வரி பிடிக்கப்படும். சரியாகப் பார்த்தால் நான்கரை சதவீதம்தான் கிடைக்கும். என் பணம் கரையும் விகிதம் ஏழரை சதவீதம். ஆனால், வங்கிகளில் அளிப்பது நான்கரை சதவீதம். இதனால்தான் கூடுதல் வட்டி கிடைக்குமென, தவறான இடங்களில் முதலீடு செய்து மக்கள் பணத்தை இழக்கிறார்கள்.

அடுத்த ஓராண்டு கடினமாகத்தான் இருக்கும். அமெரிக்காவில் தற்போது விழித்துக்கொண்டுவிட்டார்கள். வட்டி விகிதம் இரண்டு முறை முக்கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி, மேலும் முக்கால் சதவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இது செப்டம்பரில் நடக்கலாம். இந்திய அரசும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்.

வட இந்தியாவில் பருவ மழை பொய்த்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் கோதுமை விளைச்சலும் அரிசி விளைச்சலும் குறையும். அரிசி விளைச்சல் 13 சதவீதம் குறைந்திருக்கிறது. அதனால், அரிசியின் மொத்த விலை கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது. கோதுமை விளையும் உயர்ந்து வருகிறது. பருவ மழைக்காலத்தில் பாதியைக் கடந்துவிட்டோம். இதே போல நிலைமை தொடர்ந்தால், அரசி, கோதுமை விலை மேலும் உயரும்.