திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (12:54 IST)

நேதாஜி படையின் சிவகாமி அம்மாள்: 'குண்டுவெடிப்புகளுக்கு நடுவே குழந்தையைக் காப்பாற்றினோம்'

BBC
இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள்.

பிபிசி தமிழுக்காக தன்னுடைய சுதந்திர போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிவகாமி அம்மாளுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அன்னசாகரம். ஊரில் கடன் அதிகமாகவே, ஒன்றரை வயதாக இருந்த சிவகாமி அம்மாள் மற்றும் 6 வயதான அவருடைய அண்ணனை அழைத்துக் கொண்டு மலேசியாவின் பினாங் நகருக்குச் சென்றுள்ளார் அவர்களின் தந்தை.

அங்கு சிறிது காலம் தங்கியிருந்த பிறகு, கோலாலம்பூரில் நேதாஜியின் இந்திய சுதந்திர லீக் (Indian Independent League) படைப்பிரிவு குறித்து அறிந்து அங்கு போய் குடும்பத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் சிவகாமி அம்மாளின் தந்தை.

இதனால் சிறுவயதிலேயே சிவகாமி அம்மாளுக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் எண்ணம் வந்திருக்கிறது. தன்னுடைய 10 வயதில் நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் நாடகங்களில் நடித்து சுதந்திர போராட்டத்திற்கு ஆட்களை திரட்டும் பணியில் சிவகாமி அம்மாள் ஈடுபட்டிருந்தார். அதிலும் நாடகங்களில் ஜான்சி ராணி வேடத்தில் இவர் நடித்தால் கைத்தட்டல் விண்ணைப் பிளக்குமாம்.

"நான் வெள்ளையனே வெளியேறு என்ற நாடகத்தில் ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கும்போது, என் நடிப்பைப் பார்க்கும் மக்கள் தாங்களும் இந்திய சுதந்திர லீக் படைப் பிரிவில் சேர வேண்டும் என்றும் எங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்வார்கள்.

சுதந்திரப் போராட்டத்திற்காக மக்கள் எதையும் இழக்கத் தயாராக இருந்தார்கள். நான் புரட்சி நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நேதாஜி சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் மற்றும் ஜான்சி ராணி படையைத் தயார் செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் கோலாலம்பூருக்கு வந்தபோது நான் நடித்துக் கொண்டிருந்த நாடகத்தை, பாதி நாடகம் முடிந்திருந்த நிலையில் வந்து பார்த்தார்.

நாடகத்தை முடித்துவிட்டுச் செல்லும் போது, நாளை நான் வந்த பிறகு தான் நாடகத்தைத் தொடங்க வேண்டும் என்று சொன்னார். அடுத்த நாள், நான் நடித்த நாடகத்தில், வெள்ளைக்காரன் ஒருவனை அடிக்கும் சண்டைக் காட்சியில் அவனை வீழ்த்தி விட்டு பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மார்பிலிருந்த கொடியை இறக்கி விட்டு நம் தேசியக் கொடியை ஏற்றுவேன். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு சிலிர்த்துப் போன நேதாஜி தொடர்ந்து கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தார்," என்கிறார் சிவகாமி அம்மாள்.

குண்டுவெடிப்புகளுக்கு நடுவே குழந்தையைக் காப்பாற்றிய தருணம்

இந்தத் தகவல் கர்னல் அழகப்பா மூலம் சிவகாமி அம்மாளுக்குத் தெரிய வந்துள்ளது. அதற்குக் காரணம் அங்கு தகவல் பரிமாற்றம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடக்கும். அந்தத் தகவல்களை தமிழ் மொழியில் சிவகாமி அம்மாள் உள்ளிட்டவர்களுக்கு தெரிவிப்பவர் கர்னல் அழகப்பா தான்.

நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் இருந்தவர் சிவகாமி அம்மாள். போர் நடைபெறும் போது விமானங்கள் ஊருக்குள் அவ்வப்போது குண்டு மழை பொழியும். மக்கள் அனைவரும் பதுங்கு குழிக்குள் போய் பதுங்கிக் கொள்வார்கள்.

விமானம் அங்கிருந்து சென்றதும், ஊரில் இருப்பவர்களின் நிலை என்ன என்பது பற்றி பாலசேனா படைப்பிரிவினர் தான் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அது போல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்த பின் மக்கள் நிலைமை என்னவானது என்று சிவகாமி அம்மாளும் அவரின் நண்பர்களும் பார்க்கக் கிளம்பினார்கள்.

"போர் விமானங்கள் குண்டு போடும் போது பூமியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போல் உணர்ந்தோம். உடனடியாக பதுங்கு குழியில் பதுங்கினோம். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து, மற்றவர்களுக்கு என்ன ஆனது என்று பார்க்கக் கிளம்பினோம்.

சிறிது தூரம் நடந்தவுடன் பூமிக்கு அடியிலிருந்து சத்தம் வந்தது. உடனடியாக மண்ணை அகற்றிப் பார்த்தால் பல பேர் பதுங்கு குழியிலேயே மண் சரிந்து மூச்சுத் திணறி செத்துக் கிடந்தார்கள். அதில் அம்மா ஒருவரும் அடக்கம்.

அவர் கையிலிருந்த குழந்தை மட்டும் உயிரோடு இருந்தது. அதை வெளியில் எடுத்தோம். அப்போது அங்கு வந்த ஒருவர் எனக்குக் குழந்தை இல்லம்மா, அந்தக் குழந்தையை நான் வளர்த்துக் கொள்ளவா என்று ஏக்கத்துடன் கேட்டார்.

நாங்கள் அந்தக் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டோம். அதற்குப் பதிலாக அவர் நிறைய பொருட்கள் மற்றும் துணிகளைக் கொடுத்தார். ஆனால் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவற்றை அனாதை விடுதிகளுக்குக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி பணியைத் தொடங்கினேன்," என்று கண்கலங்கினார் சிவகாமி அம்மாள்.

பர்மாவுக்கு அழைத்த நேதாஜி

சிங்கப்பூரில் ஒரு மிகப் பெரிய திரைப்படக் கொட்டகை வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் பர்மாவில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கத் தயார் நிலையில் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் சிவகாமி அம்மாளின் நாடகத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லியிருக்கிறார் நேதாஜி.

"ஆயிரக்கணக்காணோர் மத்தியில் வீர எழுச்சியுடன் ஜான்சி ராணி வேடமிட்டு நடித்தேன். நாடகம் முடிந்ததும் என் அருகே வந்த நேதாஜி, என் தோளில் தட்டி, அடுத்த முறை நான் இங்கே வரும்போது நீங்கள் என்னுடன் பர்மா வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

நான் அச்சா என்று ஹிந்தியில் சொன்னேன். உடனே நேதாஜி, ஓ உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? பர்மா வாருங்கள் நான் அனைத்தும் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். ஆனால் என்னால் போக முடியவில்லை. இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுவேன்.

இதுவரை எனக்கு வாழ்க்கையில் உற்சாகத்தைக் கொடுத்து வருவது நேதாஜியின் வார்த்தைகள் தான். அவர் சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் எங்கு சென்றாலும் என்னால் தைரியமாக பேச முடிகிறது. எனக்கு 90 வயதானாலும் என் மனது இன்னும் தளரவில்லை. பொறுமையாக இருங்கள், வீரத்துடன் சண்டையிட்டு வெள்ளைக்காரர்களை விரட்டுங்கள் என்று நேதாஜி முழங்குவார்.

அது இன்றுவரை காதில் கேட்கிறது," என்று சொல்லும்போது சிவகாமி அம்மாளின் உறுதி, அவரின் வார்த்தைகளைத் தாண்டி கண்களில் தெரிகிறது.

ராஸ்பிகாரி போஸ், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்திருக்கிறார் சிவகாமி அம்மாள். நேருவுடன் நடந்த சந்திப்பின் போது, இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க உங்களின் சேவை தொடர வேண்டும் என்று நேரு இவரிடம் சொல்லியிருக்கிறார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் சிவகாமி அம்மாளுக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. எதிர்பட்ட எல்லா மனிதர்களிடத்திலும் தன் அன்பையும் தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

1949ஆம் ஆண்டு இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண பத்திரிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அச்சடிக்கப்பட்டது. ஆனால் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான ஒன்றரை வருடத்திலேயே கணவர் இறந்துவிட்டார்.

இன்று வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார் சிவகாமி அம்மாள். தன்னுடைய பென்ஷன் பணத்தில் ஏழை எளியவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்கிறார். அவர் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.

"நாங்கள் கஷ்டப்பட்டு பெற்றுத் தந்த சுதந்திரத்தைக் காக்கும் விதமாக நல்ல எண்ணங்களோடு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை," என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் சிவகாமி அம்மாள்.