வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (08:29 IST)

காத்திருப்பு கைகொடுக்கும் - சாதித்து காட்டிய சஞ்சு சாம்சன்

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பங்களிக்கும் பேட்ஸ்மேன்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்று சொல்வார்கள். காரணம் மிக சிறந்த இந்த பேட்ஸ்மேன்களை தாண்டி இந்திய அணியில் இடம்பெறுவதற்கு, புதிய பேட்ஸ்மேன்கள் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

இருந்த போதிலும், கிடைத்த வாய்ப்புகளில் அணியில் தங்கள் இடத்தை யுவராஜ் சிங், முகமது கைஃப் போன்றவர்கள் உறுதி செய்தனர்.

ஆனால், இதை விட சிரமமானது, மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் கோலோச்சிய காலத்தில் அணியில் மற்றொரு விக்கெட் கீப்பராக இடம்பிடிப்பது தான். பொதுவாக ஆறேழு பேட்ஸ்மேன்கள் ஓர் அணியில் இடம்பெறுவர். ஆனால் விக்கெட் கீப்பருக்கான இடம் ஒன்று தான்.

தோனி இந்திய அணியில் இடம்பெறுவதற்கு முன்பே தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கிய தினேஷ் கார்த்திக், தோனியின் அதகளம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடங்கிய பிறகு விளையாடிய போட்டிகள் மிகவும் குறைவு.

பெஞ்சில் காத்திருந்த சாம்சன்

ஒரு தொடரில் அல்லது போட்டியில், களத்தில் விளையாடும் 11 வீரர்களை தவிர, எஞ்சிய வீரர்களை பெஞ்ச் என்பார்கள். அப்படிப்பட்ட பெஞ்ச்சில் தனது சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப போட்டிகளை கழித்தவர் தான் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முத்திரை பதித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன்.

2014-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணியில் இடம்பெற்ற சாம்சன், அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தோனி இருந்ததால், அந்த தொடரின் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் பெஞ்சில் தான் இருக்க வேண்டியதாயிற்று.

2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டஇளம் வீரரான யாஷவி ஜெய்ஸ்வால் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தவுடன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் களத்தில் இறங்கினார்.

பேட்டிங், கீப்பிங் இரண்டிலும் அதிரடி
32 பந்துகளில் 74 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன், தனது அதிரடி ஆட்டத்தில் 1 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார்.

சென்னை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்த சஞ்சு சாம்சன், ஆட்ட நாயகன், அதிக சிக்ஸர்களுக்கான விருது என அனைத்தையும் தட்டிச்சென்றார்.

பேட்டிங்கில் அதகளம் நடத்தியதை தவிர, 2 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங் செய்து விக்கெட் கீப்பிங்கிலும் சாம்சன் சிறப்பாக பங்களித்தார்.டிராவிட்

சாம்சனின் திறமையை அடையாளம் கண்ட டிராவிட்

ஆரம்ப நாட்களில் சாம்சனின் திறமைகளை இனம் கண்டு வாய்ப்பளித்தவர்களில் இந்திய பேட்டிங் ஜாம்பவானான ராகுல் டிராவிட் ஒருவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வழிகாட்டியாக டிராவிட் இருந்தபோது, சாம்சனின் பேட்டிங் மற்றும் விக்கெட்கீப்பிங் திறமைகளை அடையாளம் கண்டு அவர் சாம்சனுக்கு வாய்ப்பளித்தார்.

ஐபிஎல் தொடர்களில் 1000 ரன்களை கடந்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை படைத்த சாம்சன், 2017 ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடிய அவர் முறையே 441 மற்றும் 342 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடர் மூலம் அடையாளம் பெறுவதற்கு முன்பு, கேரள அணியின் சார்பாக 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சாம்சன் விளையாடியுள்ளார். பின்னர் கேரள அணிக்காக ரஞ்சி கோப்பையிலும் விளையாடி சிறப்பாக அவர் பங்களித்துள்ளார்.

கடுமையாக போராடியே ஓவ்வொரு முறையும் சாம்சன் வாய்ப்புகளை பெற்றார். இதுவரை 4 டி20 போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியுள்ள சாம்சனுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தான் விளையாடிய சொற்ப சர்வதேச போட்டிகளிலும் பெரிய அளவில் சாதிக்காத சஞ்சு சாம்சன், சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். காத்திருப்பு சாம்சனுக்கு புதிதல்ல.

6 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்ற கொரோனா தொடர்பான கட்டுப்பட்டால், ராஜஸ்தான் அணியின் முதல் போட்டியில் விளையாடாத ஜோஸ் பட்லர் மற்றும் அந்த அணியின் மற்றொரு வீரரான ராபின் உத்தப்பா ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் என்பதால் கூடுதல் அழுத்தம் சாம்சனுக்கு உண்டு.

ஆனாலும் அந்த அழுத்தங்கள் சற்றும் தன்னை பாதிக்காத வண்ணம், செவ்வாய்க்கிழமையன்று சஞ்சு சாம்சன் விளையாடியபோது, மறுமுனையில் பேட்டிங் செய்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் விக்கெட்கீப்பிங் செய்த எம்.எஸ். தோனி ஆகிய இருவரும் காத்திருத்தலில் வலி மற்றும் பலனை நன்கு அறிந்தவர்கள்தான்.