நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் தன் மீது தவறாக பரப்பப்படும் வதந்திகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடனான திருமண உறவை முறித்து கொள்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைதள பக்கத்தில் தன் மீது தவறாக பரப்பப்படும் வதந்திகள் குறித்தும், மணவிலக்கு ஏற்படுத்தியுள்ள வலி குறித்தும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,
"என்னுடைய தனிப்பட்ட பிரச்னை மீது நீங்கள் அனைவரும் காட்டிய அக்கறை என்னை நெகிழ செய்தது. என் மீது காட்டிய கருணைக்கு நன்றி. அதேபோல, இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பின்னால் என்னை சுற்றி நிறைய வதந்திகளும் வலம் வருகின்றன. நான் பிறருடன் தவறான உறவில் இருக்கிறேன், குழந்தை வேண்டாம் என மறுத்தேன், சந்தர்ப்பவாதியாக இருந்தேன், கருக்கலைப்பு செய்திருக்கிறேன் என இப்படி ஏராளாமான வதந்திகள் வந்து கொண்டே இருந்தன.
மணவிலக்கு என்பது உண்மையில் மனதளவில் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த வலியில் இருந்து நான் மீள்வதற்கு சிறிது காலம் ஆகும். மேலே சொன்னபடி, தனிப்பட்ட முறையில் என் மீதான தவறான வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், நான் ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். இப்போது என் வாழ்க்கையில் நடந்த விஷயமோ அல்லது வேறு எதுவோ என்னை உடைக்க முடியாது," என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சமந்தா.