புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (10:01 IST)

"கச்சா எண்ணெய்‌ விலை உயர்வு இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ தாக்கத்தை ஏற்படுத்தும்‌"- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கச்சா எண்ணெய்‌ விலை உயர்வு இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ விளைவுகளை ஏற்படுத்தும்‌ என்று மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பெங்களூரில்‌, செவ்வாய்க்கிழமை கர்நாடக மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல்‌ நிகழ்ச்சியில்‌ பங்கேற்று அவர்‌ பேசியபோது, "யுக்ரேன் போர்‌ மற்றும்‌ கச்சா எண்ணெய்‌ விலை உயர்வு இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ விளைவுகளை ஏற்படுத்தும்‌.
 
இந்த சவாலை எதிர்கொள்ள எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளப்‌ போகிறோம்‌, அதன்‌ பாதிப்புகளை எப்படி சமாளிக்கப்‌ போகிறோம்‌ என்பது போகப்போகத்‌ தான்‌ தெரியும்‌.
இந்தியாவின்‌ எரிபொருள்‌ தேவையை பூர்த்தி செய்ய 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, வருகிறோம்‌. எரிபொருள்‌ விலை உயர்வது கவலை அளிக்கக்‌ கூடியதாகும்‌. அப்பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்‌.15 நாட்கள்‌ சராசரியின்‌ அடிப்படையில்தான்‌ எரிபொருள்‌ விலையை எண்ணெய்‌ நிறுவனங்கள்‌ முடிவு செய்கின்றன. தற்போதுள்ள நிலையில்‌ சராசரி, அதையும்‌ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
 
வேறு ஆதாரங்களில்‌ இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல்‌ செய்வது குறித்து ஆராய்வோம்‌. உலக கச்சா எண்ணெய்‌ சந்தையின்‌ போக்கைக்‌ கணிப்பது கடினமாகும்‌.
 
கச்சா எண்ணெய்‌ விலை உயர்வை அரசு சமாளிக்கும்‌ தேவை இருக்கும்‌. இதற்காக நிதிநிலை அறிக்கையில்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்‌ அது சராசரி விலை உயர்வைக்‌ கணக்கில்‌ கொண்டு ஒதுக்கப்பட்டது. தற்போது நிலைமை மோசமடைந்துவருகிறது. எனவே, நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்‌.
 
பெட்ரோல்‌, டீசல்‌ விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள்‌ கொண்டு வருவது தொடர்பான விவாதம்‌ ஜிஎஸ்டி கவுன்சில்‌ முன்பு இருக்கிறது" என தெரிவித்து உள்ளதாக தினமணி நாளிதழின் செய்தி கூறுகிறது.