ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (13:39 IST)

ஆந்திர கிராமத்தை தாக்கும் சிவப்பு எறும்புப் படை - அச்சத்தில் மக்கள்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் பரவலாக இந்த மஞ்சள் எறும்புகளின் ஆதிக்கத்தால் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பல்வேறு மலை கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.

கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து இந்த மஞ்சள் எறும்புகள் தாக்குவதால் அவை கண்பார்வை இழந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எங்கள் காலனியை எறும்புகள் தாக்குகின்றன. பத்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் எங்கள் காலனியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். எங்களுக்கு உதவுங்கள் என்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள இசகலபேட்டா கிராமவாசிகள் அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் தம்மினேனி சீதாராமிடம் உதவி கோரியுள்ளனர்.

சபாநாயகரின் மனைவி வாணி இந்த கிராம பஞ்சாயத்து தலைவர். எறும்புகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடமும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அது சரி. மக்கள் அச்சமடையும் அளவுக்கு மிகக் கடுமையாக எறும்புகள் தாக்க கூடியவையா? அவற்றின் தாக்குதல் அவ்வளவு ஆபத்தானதா? இசகலபேட்டா கிரமத்தை மட்டும் குறிப்பாக ஏன் தாக்குகின்றன? இந்த பிரச்னை குறித்து கிராமவாசிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், உயிரியல் போராசிரியர்களிடம் பிபிசி பேசியது.

கடந்த இரண்டு வாரங்களாக எறும்புகள் தங்களை தாக்குவதாக இசகலபேட்டா கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் தங்களை எறும்புகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

"பொதுவாக நாய்கள் மனிதரை கடிக்கும். சில இடங்களில் குரங்குகள் தாக்கும். எங்கள் கிராமத்தை எறும்புகள் தாக்குகின்றன" என்கிறார் பிபிசியிடம் பேசிய கிராமவாசி ஈஸ்வர ராவ்.

எறும்புக் கடி காரணமாக 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் நீரிழிவு நோயாளிகள். எறும்பு கடிக்கு மருத்துவமனை சிகிச்சை பெறுகிறோம் என்றவுடன் எல்லாரும் எங்களை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், அவர்கள் எங்கள் கிராமத்தை வந்து பார்த்தால் எங்கள் வலி புரியும் என்கிறார் ஈஸ்வர ராவ்.

நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த எறும்புகளின் பிரச்னை இப்போது உச்சத்தை அடைந்துள்ளது. இசகலபேட்டா கிராமத்தின் எல்லா திசைகளிலும், லட்சக் கணக்கணக்கான எறும்புகளை பார்க்க முடிகிறது. சாலைகள், வயல்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் என கிரமத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றன எறும்புகள்.

எல்லா இடங்களிலும் எறும்புகள், தேனீர் மற்றும் காப்பி குடித்தால் அவற்றில் எறும்புகள். சாப்பாட்டில் எறும்புகள். இதுவரை இந்த கஷ்டத்தை அனுபவிக்கவில்லை. இதனால் புதிய நோய்கள் பரவுமோ என அச்சமடைந்துள்ளோம். குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம் என்று ஆதங்கத்தை கொட்டினார் பிபிசியிடம் பேசிய எறும்புகளால் பாதிக்கப்பட்ட வனஜா.