1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (15:17 IST)

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: குழாய் பதிக்க விவசாயி எதிர்ப்பு

சென்னை நகரத்தின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்துவருவதில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
 
வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து  நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டுவரும் திட்டம் புதன்கிழமை தொடங்குவதாக இருந்தநிலையில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 
 
வேலூர் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில்நிலையம் வரும்வழியில்  ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. இரண்டு இடங்களுக்கு மத்தியில் 3.2 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்ட குழாய்களில் ஒரு பகுதி பார்சன்பேட்டை கிராமத்தில் இளையராஜா என்பவரது விளைநிலத்தில் பதிக்கப்படன. குடிநீர் கொண்டுசெல்லும் திட்டம் முடிந்ததும், குழாய்கள் அகற்றப்படும் என்ற உத்தரவாதம் தரவில்லை என இளையராஜா எதிர்த்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது என உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர். 
 
தற்போது குழாய்களை அகற்றி பார்சன்பேட்டையில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு, தண்ணீர் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது என வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
''வேலூரில் இருந்து சென்னைக்கு ஒரு நாளில் நான்கு முறை சரக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுசெல்லப்படும். சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் நடைமேடையில் 500 மில்லி மீட்டர் இரும்பு குழாய் நிறுவப்பட்டு ரயில் பெட்டிகளில் நீர் ஏற்றுவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன". என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குழாய்கள் பதித்ததில் இருந்த பிரச்சனை சிறிது நேரத்தில் தீர்க்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ரூ.65 கோடி செலவில் வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என முதல்வர் பழனிசாமி முன்னர் குறிப்பிட்டிருந்தார். 55,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 நீர்கலன்களில் தண்ணீர் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கென ராஜஸ்தானில் இருந்து 50 பெட்டிகள் வரவழைக்கப்பட்டன என்கிறார்கள் அதிகாரிகள். 
 
ஒரு முறை சென்னை செல்லும் ரயிலில் சுமார் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுசேர்க்கப்படும் என்று  கூறப்படுகிறது. சென்னைக்கு வந்துசேரும் தண்ணீர் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை அடையும். வில்லிவாக்கத்தில் இருந்து தண்ணீர் சுத்தப்படுத்தப்பட்டு, நகரப் பகுதிகளில் விநியோகம் செய்ய குடிநீர் வழங்கல் மையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.