வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (15:24 IST)

அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆலோசனை

பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
 
வரும் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார்.
 
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வந்தார். அங்கு அவரை தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவரது வீட்டில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
 
இதைத்தொடர்ந்து நேற்று காலை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.
 
ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் பண்ணை வீட்டை விட்டு வெளியே வரும்போது செய்தியாளர்கள் வழிமறித்து கருத்து கேட்டனர். அப்போது சிலர் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், கட்சிக்கு பொதுச்செயலாளராகவும் வர வேண்டும் என்றனர். நேற்று இரவு வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பண்ணை வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.