1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (13:07 IST)

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா: அமெரிக்கா

வடகொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது "மிகவும் தீவிரமானது" என அமெரிக்கா கூறியுள்ளது.

பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 4 அன்று மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைகள், உளவு வேலைகளுக்கான செயற்கைக்கோளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என, வடகொரியா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ஐசிபிஎம்) முழு வீச்சில் செலுத்துவதற்கு முன்பான சோதனை முயற்சியிலானது என, அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சமாக 5,500 கி.மீ. (3,417 மைல்கள்) தொலைவுக்கு செல்லும் ஐசிபிஎம் ஏவுகணைகள், அமெரிக்காவை அடையலாம். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை "மிக தீவிரமானது" என, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் விவரித்துள்ளார். வடகொரியா மீது அமெரிக்கா மேலும் தடைகளை விதிக்கலாம் என அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த அதிகாரி, வட கொரியாவுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள், ஏவுகணை சோதனைகளுக்கான "வெளிநாட்டு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை" வட கொரியா அணுகுவதிலிருந்து கட்டுப்படுத்தும் என தெரிவித்தார்.

ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்காக வட கொரியா ஏற்கெனவே சர்வதேச தடைகளை எதிர்கொண்டு வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது அணு ஆயுத சோதனைகளை கடந்த 2017ல் இருந்து வட கொரியா மேற்கொள்ளவில்லை. அச்சோதனைகளை நடத்துவோம் என, வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் மறைமுகமாக சிலமுறை கூறியபோதிலும் அவற்றை மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின், உடன்பாட்டின் அடிப்படையில் அதிக தொலைவுக்கு செலுத்தக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு சோதனைகளை மேற்கொள்வதை வடகொரியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், இதற்கு தான் இனி கட்டுப்பட மாட்டேன் என, வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் 2020ல் அறிவித்தார்.

வடகொரியா மேற்கொண்ட இரு சோதனைகள் "கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கியது" என, அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த சோதனையில், ஐசிபிஎம் ஏவுகணைகளின் தொலைவு எல்லை அல்லது அதன் திறன் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், ஆனால், "வருங்காலத்தில் இந்த புதிய ஏவுகணைகளை முழு வீச்சில் சோதிப்பதற்கு முன்பு, அதனை மதிப்பிடுவதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது" என அவர் தெரிவித்தார்.

"ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களை மீறும் இந்த சோதனைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. இந்த சோதனைகள் அப்பகுதியின் பாதுகாப்பு சூழலை குலைக்கும் வகையில், தேவையற்ற பதட்டங்கள் மற்றும் ஆபத்துக்களை அதிகரிக்கிறது" என அவர் தெரிவித்தார்.