ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியிலிருந்து யுக்ரேன் நாட்டுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் முகமது அதீம். ரஷ்ய யுக்ரேன் போரில் சிக்கி கொண்டு 2 வார காலத்திற்கு பின் மத்திய அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் தனது சொந்த ஊர் வந்து சேர்ந்த மாணவரை பெற்றோர் கட்டித்தழுவி வரவேற்றனர்.
கட்டி தழுவிய அப்பா, ஆரத்தி எடுத்த அம்மா
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்தவர் நவாஸ் அலி. இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில் மகன் முகமது அதீம் யுக்ரேன் தென் பகுதியில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
யுக்ரேனில் நடக்கும் தாக்குதலால் அங்கு படிக்கும் மாணவரை மீட்டு சொந்த ஊர் அழைத்து வர மாணவரின் பெற்றோர் மத்திய, மாநில அரசுக்கு கடந்த வாரம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் யுக்ரேனில் சிக்கிய மாணவ, மாணவிகளை, அருகில் உள்ள நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியை மத்திய, மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
மேலும், யுக்ரேனில் சிக்கி இருந்த தமிழக மாணவர்களை மீட்கும் வகையில், தமிழக அரசும், மத்திய அரசுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனையடுத்து யுக்ரேன் தென் பகுதியில் இருந்து ருமேனியா வந்த மாணவர் முஹமது அதீமை இந்திய தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைத்தனர்.
பின்னர் டெல்லியில் இருந்து விமானத்தில் புறபட்டு சென்னை விமானம் நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து மதுரை, திருச்சி ராமநாதபுரம் மாவட்டத்தை சோந்த 7 மாணவர்களை கார் மூலம் சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
சொந்த ஊருக்கு வந்த மாணவர் முஹமது அதீமை அழகன்குளம் பேருந்து நிலையத்தில் வைத்து ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் முகமது அதீமை அப்பா நவாஸ் அலி கட்டித்தழுவி கண்ணீருடன் வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து வீடு சென்ற முகமது அதீமை அவரது அம்மா ஆரத்தி எடுத்து கட்டிப்பிடித்து, முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்நிகழ்வு பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
இந்திய மாணவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டோம்
சொந்த ஊர் திரும்பிய மாணவர் முகமது அதீம் தான் எவ்வாறு யுக்ரேனில் இருந்து மீட்கப்பட்டேன் என்பதை பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்:
யுக்ரேன் நாட்டின் தென் பகுதியில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன்.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இன்று காலை நான் சொந்த ஊர் வந்து சேர்ந்தேன். என்னுடன் பெரும்பாலான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.
யுக்ரேனில் இருக்கும்போது போர் பதற்றம் காரணமாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குண்டுவெடிப்புக்கு பயந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு கீழே உள்ள பதுங்கு குழியில் தங்கி எங்களை பாதுகாத்துக் கொண்டோம். போதுமான உணவு இல்லாமல் கஷ்டப்பட்டோம்.
விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களுக்காக எங்களுடைய ஏஜெண்டுகள் 4 பேருந்துகளை அனுப்பினர். ஆனால் அங்கு 270 மாணவர்கள் இருந்தோம். அதனால் ஏஜென்டுகள் அனுப்பிய பேருந்தில் 200 மாணவர்கள் மட்டுமே செல்ல முடிந்தது. மீதமுள்ள 70 மாணவர்கள் பேருந்திற்காக விடுதியில் காத்திருந்தோம்.
யுக்ரேன் அரசு போக்குவரத்தை முற்றிலும் துண்டித்ததால் பேருந்து வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து அருகே உள்ள நகரத்திற்கு சென்றோம்.
யுக்ரேன் எல்லையில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முயற்சித்த போது அங்கு ஏராளமான யுக்ரேன் மக்கள் எல்லை தாண்டி செல்ல காத்திருந்தனர். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்தியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.
குண்டு விழுந்த அதிர்வு இன்னும் நீங்கவில்லை
இந்திய மாணவர்கள் எல்லையை கடக்க முடியாமல் 12 மணி நேரத்துக்கு மேலாக கொட்டும் பனியில், கடும் குளிரில் காத்திருந்தோம். யுக்ரோனை விட்டு வெளியேறிய மாணவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் பேருந்து மூலமாக மால்டோ நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்து ருமேனியாக்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் தங்க வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்கு பின்னர் டெல்லி வந்து சேர்ந்தேன்.
பேருந்திற்காக யுக்ரேன் எல்லையில் காத்திருந்தபோது மாணவர்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு அருகே 100 மீட்டர் தூரத்தில் அடுத்தடுத்த பத்துக்கு மேற்பட்ட குண்டுகள் வந்து விழுந்தது அந்த குண்டுகள் விழுந்த அதிர்வில் இருந்து இன்று வரை என்னால் மீள முடியவில்லை என்றார் மாணவர் முகமது அதீம்.
படிப்பை இந்தியாவில் தொடர அனுமதிக்க வேண்டும்
யுக்ரேனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மாணவரின் அப்பா நவாஸ் அலி பிபிசி தமிழிடம் பேசுகையில், யுக்ரேனில் எனது மகன் மொத்தமாக ஐந்து அரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும்.
இந்த ஆண்டு நான்காம் ஆண்டு படிக்கிறார். தற்போது யுக்ரேன் ரஷ்யாவுக்கு இடையே நடந்து வரும் போர் காரணமாக என் மகன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொந்த ஊர் வந்துள்ளார்.
எனது மகன் உயிருடன் சொந்த ஊருக்கு திரும்பியது மகிழ்ச்சி அளித்தாலும் படிப்பு பாதியில் நிற்பது மிகுந்த கவலையளிக்கிறது. எனவே மத்திய அரசு மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர அனுமதி அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.