வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (23:38 IST)

நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
 
கான்பெர்ராவில் நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை தாம் வீசிய ஓவரில் வீழ்த்தினார் நடராஜன்.
 
இடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று அறிமுகமானார்.
 
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வீரர்களின் பட்டியலில் நடராஜன் பெயர் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எந்த அணியிலும் இல்லாமல் கூடுதல் பந்து வீச்சாளராகவே அவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் நடராஜன் இன்று களமிறக்கப்பட்டார்.
 
அவரது யார்க்கர் பந்துவீச்சு பெரிதும் கவனம் பெற்றதுடன் பாராட்டையும் பெற்றார் நடராஜன்.
 
29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகினார். இதன் காரணமாக நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார்.