செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (18:12 IST)

போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளியான நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார்

Singapore - Hanged
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காப்பாற்ற கடைசி வரை போராடிய அவரது குடும்பத்தார் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர்.


முன்னதாக, நேற்று தன் மகனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் அனைத்து விதமான சட்டப்பூர்வ வாய்ப்புகளும் முடிவுக்கு வந்ததை அடுத்து, நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.

34 வயதான நாகேந்திரன் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் எதையும் அவரது தரப்பு முன்வைக்கவில்லை என சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது.

மேலும், விசாரணையை இழுத்தடிக்க நாகேந்திரனின் வழக்கறிஞர்கள் முயற்சி செய்வதாக நீதிபதிகள் அதிருப்தியை வெளியிட்டனர். நாகேந்திரனின் கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் முன்பே நிராகரித்துவிட்டார்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், அந்நாட்டின் மாமன்னர் ஆகியோரும் நாகேந்திரனுக்கு கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அனைத்து சட்டப்பூர்வ வாய்ப்புகளும் முடிந்துபோனதால் நாகேந்திரன் தூக்கிலிடப்படுவது கடந்த வாரம் உறுதியானது. இதையடுத்து, அவரது தாயாரும் உடன்பிறந்தோர் மூவரும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விரைந்தனர்.

நாகேந்திரன் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியாக சுந்தரேஷ் மேனன் பொறுப்பில் இருந்தார். பின்னர் நாகேந்திரனின் மரண தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை அவரது தலைமையிலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்தது என்பதைச் சுட்டிக்காட்டிய நாகேந்திரன் தரப்பு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டது,

மேலும் இது நாகேந்திரனுக்கு சிங்கப்பூர் அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையை மீறும் செயல் என்றும் நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால், இந்த வாதம் எடுபடவில்லை.

நாகேந்திரனின் மேல்முறையீட்டு மனு முன்பு விசாரிக்கப்பட்டபோது, இது குறித்து அவரது தரப்பு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, நாகேந்திரனின் தாயார் நீதிபதிகளை நோக்கி, கண்ணீர்மல்கப் பேசினார்.

"என் மகன் எனக்கு உயிருடன் வேண்டும்," என்று அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டார். எனினும், அவரது அந்த கண்ணீர் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலையின் மனு தீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிங்கப்பூர் சட்டப்படி, நாகேந்திரனின் குடும்பத்தார் அவரைச் சந்திக்க இரண்டு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கண்ணாடித் தடுப்புக்கு மத்தியில் உள்ள இடைவெளியில், ஒருவருக்கொருவர் கைகளை மட்டும் பற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், நாகேந்திரனின் தாயார் தன் மகனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் பேசும் பழக்கம் இல்லாத நாகேந்திரனும் தாயாரைக் கண்டதும் 'அம்மா.. அம்மா... ' என்று தொடர்ந்து கதறியதாகவும், அது நீதிமன்ற வளாகத்தில் எதிரொலித்ததாகவும் அவருக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்தது.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் முந்நூறுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் நாகேந்திரனைத் தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.

அறிவுசார் குறைபாடு உள்ளவர் என்பதால் 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கத்தை விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

"கடைசி வரை முயற்சி செய்வோம். எங்கள் நம்பிக்கையை கைவிடத் தயாரில்லை," என்று நாகேந்திரனின் உறவினர் தேன்மொழி சின்னையா கூறினார்.

இந்த அமைதிப் போராட்டத்தில் நாகேந்திரனின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சிங்கப்பூர் சட்டப்படி வெளிநாட்டவர்கள் அங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க அனுமதி இல்லை.

மரண தண்டனைக்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கப்பூரை சேர்ந்த செயற்பாட்டாளர் கிர்ஸ்டென் ஹான், நாகேந்திரன் தனது விருப்பமான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்வதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மரண தண்டனைக்கு முன்பாக சிறையில் இருப்பவருக்கு அவரது குடும்பத்தினர் துணிகள் வாங்கித் தர அனுமதிக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்போ அல்லது பின்போ குடும்பத்தினரிடம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாகேந்திரனும் தூக்கிலிடப்பட்ட நிலையில், மலேசியாவில் உள்ள அவரது சகோதரி ஷர்மிளாவை தொடர்புகொள்ள பிபிசி தமிழ் முயற்சி மேற்கொண்டது எனினும், இணைப்பு கிடைக்கவில்லை.

இதற்கிடையே, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மேலும் இரண்டு மலேசியர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.