ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?
முன்னாள் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் முக்கிய அரசியல் விவாதங்கள் நடைபெற்றதாகவும், வரவிருக்கும் தேர்தல்களுக்கான ஆதரவு குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த சந்திப்பு, ஓபிஎஸ்-ஐ பாஜக கூட்டணியில் மீண்டும் இணைப்பதற்கான தீவிர முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததை தொடர்ந்து, அண்ணாமலை டிடிவி தினகரனையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த இரண்டு சந்திப்புகளிலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், அ.தி.மு.க.வின் நிலைப்பாடு மற்றும் வரும் தேர்தலுக்கான கூட்டணிகள் அமைப்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க, அண்ணாமலை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த தொடர் சந்திப்புகளுக்கு பின்னால், மற்றொரு அரசியல் வதந்தியும் வலம் வருகிறது. அண்ணாமலை விரைவில் பாஜகவிலிருந்து விலகி, தனிப்பட்ட புதிய அரசியல் கட்சியை தொடங்கி, அதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் புதிய கூட்டணியை உருவாக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அண்ணாமலையின் இந்த தொடர்ச்சியான சந்திப்புகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva