ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!
ஜப்பானில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகளும் கட்டிடங்களும் கடுமையாக குலுங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் மிசாவா என்ற பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு பசுபிக் கடலை மையமாக வைத்து ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆமோரி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உருவானது. இது ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மக்கள் வெளியேறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை ஓர பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருவதாகவும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva