1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (20:25 IST)

மகாராஷ்ட்ரா தலித் சிறுவன் ஆர்யனுக்கு கொடிய தண்டனை

கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது.
 


 
இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் நபரை கைது செய்துள்ளனர்.
 
அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது.
 
அமோல் தோர் குற்றப் பின்னணி உடையவர்.
 
சாராயம் விற்றது தொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
என்ன நடந்தது?
ஆர்வி நகரத்தில் உள்ள ராணி லக்‌ஷ்மிபாய் பகுதியில் உள்ள ஜோகனா மாதா கோயிலில் மதிய நேரங்களில் பெரிதாக கூட்டம் இருக்காது.
 
இது பிரபலமான கோயில் இல்லை. வட் பூர்ணிமா தினங்களில் மட்டுமே கூட்டம் வரும் என்கிறார் அந்த பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திலீப்.
 
"அந்த கோயிலில் ஆலமரம் இருப்பதால், வட் பூர்ணிமா அன்று மக்கள் அங்கு திரள்வார்கள். மற்ற நேரங்களில் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சூதாடி கொண்டும், சாராயம் விற்றுக் கொண்டும் இருப்பார்கள். இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமோல் தோரும் சாராய தொழிலில் ஈடுபடுபவர்தான்" என்கிறார் திலீப்.
 
படத்தின் காப்புரிமைNITESH RAUT
எப்போதும் போல், அந்த கோயில் பகுதியில் மதியம் 12 மணி அளவில் ஆர்யன் விளையாடி கொண்டு இருந்திருக்கிறான். அமோல் தோர் அங்குள்ள ஒரு தூண் அருகே அமர்ந்து இருந்திருக்கிறர். திடீரென, அந்த ஆர்யனை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
 
பின், அந்த சிறுவனின் ஆடைகளை நீக்கி, அங்கிருந்த சூடான டைல்ஸில் அமர வைத்திருக்கிறார். வெயிலின் காரணமாக அந்த டைல்ஸின் வெப்பம் 45 டிகிரி என்ற அளவில் இருந்திருக்கிறது. ஆர்யனின் பின்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டது.
 
அந்த சிறுவன் அழுது கொண்டே வீட்டிற்கு ஓடி இருக்கிறார். காயங்களைன் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் தாய், அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்.
 
'கடும் நடவடிக்கை'
ஆர்யன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
குறைந்தது பத்து நாட்களாவது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்கிறார் அவரின் தந்தை கஜனன் கட்சே.
 
பிபிசி மராத்தி சேவையிடம் பேசிய அவர், "அந்த குற்றவாளி என்ன மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என யோசிக்கவே முடியவில்லை. திருடினான் என்று ஆர்யனை தண்டித்தார்களா அல்லது சாதிய வன்மத்துடன் தண்டித்தார்களா? ஒருவேளை ஆர்யன் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ திருடி இருந்தால், அவனை திட்டி இருக்கலாம் அல்லது கன்னத்தில் அறைந்திருக்கலாம். ஆனால், அவனி ஆடைகளை நீக்கி 45 டிகிரி வெயிலில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவன் வலியில் அழுதிருக்கிறான். ஆனால் அவன் மீது எந்த கருணையும் காட்டப்படவில்லை." என்கிறார்.
 
"இதனை பார்த்த ஒரு பெண் இதனை நிறுத்தும்படி கேட்டிருக்கிறார். ஆனால், அந்த நபர் ஆர்யனை விடவில்லை. இறுதியில் அந்த பெண்தான் ஆர்யனை காப்பாற்றி இருக்கிறார். அவர் என் மகனை கொல்லப்பார்த்தாரா என்று தெரியவில்லை. கடவுள் போல வந்து அந்த பெண் என் மகனை காப்பாற்றி இருக்கிறார். அவர் மட்டும் இல்லை என்றால் என் மகனை இழந்திருப்போம்" என்று பிபிசி மராத்தி சேவையிடம் அந்த பெண் தெரிவித்தார்.
 
வேறு சாதி இளைஞனை திருமணம் செய்ததற்காக மகளை கொன்ற தலித் தந்தை
'வேறு சாதி நபரை திருமணம் செய்பவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள்'
'விளையாட்டுக்காக'
"தினமும் மதிய வேளையில் இந்த சிறுவன் கோயில் பகுதியில் விளையாடுவான். இது அமல் தோரின் சாராய தொழிலுக்கு பாதகமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த சிறுவனை அமல் தோர் தண்டித்திருக்கலாம்" என்கிறார் திலீப்.
 
இந்த வழக்கை விசாரிக்கும் பர்மேஷ் அகாசே இதனை மறுக்கிறார்.
 
சட்டத்திற்கு புறம்பான எந்த தொழிலும் அந்த கோயில் வளாகத்தில் நடைபெறவில்லை. இந்த வழக்கில் சாதிய பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார் பர்மேஷ்.
 
இந்த சிறுவன் எதையாவது திருடி இருக்கலாமென அந்த நபர் நினைத்திருக்கலாம். அதனால் விளையாட்டிற்காக இதனை செய்திருக்கலாம் என்கிறார் பர்மேஷ்.
 
ஆர்யனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். தினக்கூலியில் வரும் வருமானத்தை வைத்தே அவர்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். பல அமைப்புகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கோரி கோரிக்கை வைத்துள்ளன.


 
உரிய நடவடிக்கை கோரி பீம் டைகர் சேனா எனும் அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது. 
 
இதற்கு முன்பும் அந்த கோயில் அருகே விளையாடிய குழந்தைகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மனிததன்மையற்ற முறையில் இவ்வளவு மோசமாக யாரும் தாக்கப்படவில்லை.