1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:27 IST)

கேரள வெள்ளம்: மக்களின் தாகத்தை தீர்க்கும் 'தனி ஒருவன்'

கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கிறது. எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. ஆனால், அவற்றை குடிதண்ணீராக பயன்படுத்த முடியாது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நீரை குடிநீராக்கி வழங்கும் பணியில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மர்தி கருணாகர் ரெட்டி ஈடுபட்டுள்ளார்.



தெலங்கானா அரசு இரண்டு நாட்களுக்கு முன்னதாக 50 தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை கேரளாவுக்கு அனுப்பியது. இதன் மூலம் தினமும் சுமார் 10 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் தயாரிக்கப்படுகிறது.

இந்த சாதனங்கள் தண்ணீரில் உள்ள எவ்வகையான அசுத்தங்களையும் சுத்திகரித்து தரக்கூடியது. இச்சாதனங்கள் தெலங்கானா அரசால் அனுப்பபட்டிருந்தது என்றாலும் இவற்றை உற்பத்தி செய்தது ஐதராபாத்தில் உள்ள ஸ்மார்ட் இந்தியா எனும் நிறுவனம். இதன் தலைவர் மற்றும் நிர்வாகத்தலைவர் கருணாகர் .

பிபிசியிடம் பேசிய கருணாகர், கேரளாவில் அவர் சந்தித்த சவால்கள் உட்பட பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.



'ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவின் மூத்த ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் என்னிடம் பேசினார். உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, எங்களது குழுவின் மீட்புப்பணி குறித்து அவருக்கு தெரிந்திருந்தது. 13 மாவட்டங்கள் குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் தவிப்பதாக அவர் கூறினார். மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கான வழிகள் குறித்து கேட்டார்''.

''நான் திருவனந்தபுரத்துக்கு உடனடியாகச் சென்றேன். பத்து சுத்திகரிப்பு சாதனங்களை இலவசமாக வழங்க முடியும். அவற்றை வைத்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான லிட்டர் குடிதண்ணீர் தயாரிக்க முடியும். அரசுக்கு நிறைய சாதனங்கள் தேவை எனில் எனக்கு பொருளாதார உதவிகள் தேவை'' என விவரித்ததாக கூறினார்.

''இதையடுத்து கேரள அதிகாரிகள் தெலங்கானா அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசியதும் தெலங்கானா 50 தண்ணீர் சுத்திகரிப்பு சாதனைகளுக்கு செலவு செய்ய ஒப்புக்கொண்டது. தெலங்கானா அரசின் தலைமை செயலாளர் என்னை அழைத்து, கேரளாவுக்கு தேவையானதை செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து ஏற்கனவே வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டிருந்த சாதனங்களை மீண்டும் திரும்பப்பெற்று தேவையான 50 சுத்திகரிப்பு சாதனங்களை தயார் செய்தோம். ராணுவ விமானத்தில் அவை கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அவை நிறுவப்பட்டன'' என தனது வார்த்தைகளில் விவரித்தார்.



கருணாகர் தனது குழுவுடன் தற்போது நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கி வருகிறார்.

வெள்ள நீர் மற்றும் அப்பகுதியில் கிடைக்கும் நீர் மூலம் ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் இச்சாதனங்கள் வாயிலாக தயாரிக்கப்படுகிறது. பந்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து இப்பகுதியில் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.


ஏன் இவை முக்கியமானவை?

''எங்களுக்கு குடிதண்ணீரின் தேவையும் மதிப்பும் தெரியும். குறிப்பாக இயற்கை பேரிடரின்போது, நிலத்தடி நீர் மாசுபட்டு இருக்கும் சூழலில் தண்ணீர் வழங்குவது மிகக்கடினமான விஷயம். அதனால்தான் கேரளாவுக்கு உடனடியாக தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை அனுப்பினோம்'' என பிபிசியிடம் தெரிவித்தார் தெலங்கானா அரசின் தலைமை செயலாளரான ஷைலேந்திர குமார்.

'' குடிதண்ணீர் விவகாரம் ஒருபக்கம் இருக்க, கேரளாவுக்கு மற்றொரு மிகப்பெரிய பிரச்சனை காலனி பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதே. தண்ணீர் மோட்டார் உட்பட பெரும்பாலானவை வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. சாலைகள் சேதமடைந்துள்ளதால் குழாய்களும் உடைந்துள்ளன. கழிவு நீர் அமைப்பில் ஏற்பட்டுள்ள சேதாரத்தால் நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபட்டுள்ளது.

ஆகவே மொத்த தண்ணீர் வழங்கல் அமைப்பும் பழுதுபார்க்க வேண்டியிருக்கிறது. இவற்றுக்கு உதவ கேரள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆகவே, எங்களது குழு இந்த இணைப்புகளை சரி செய்யும் பணியில் இருக்கிறது'' என ஷைலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

''ஒரு சிறு குடிதண்ணீர் வழங்கும் அமைப்பை சரிசெய்ய 10-20 வேலையாட்கள் தேவை. ஆனால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் மின்சாரம் தாக்குமோ என்ற பயத்தில் ஊழியர்கள் இருக்கிறார்கள். கேரளாவின் பெரும்பகுதி மலைப்பகுதியாகும். தண்ணீரின் அழுத்தமானது ஒவ்வொரு சில மீட்டர்களுக்கும் வேறுபடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் வேலை செய்வது கடினமானது'' என்கிறார் கருணாகர்.

கலாமின் பரிந்துரை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருணாகர், 6500 சமூக தண்ணீர் மையங்களை ஏற்படுத்தியுள்ளார்.

'' ராஷ்ட்ரபதி பவனில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது, அப்துல் கலாமுக்கு எங்களது பணி பிடித்துப்போகவே அவர் என்னை அழைத்து இத்தொழில்நுட்பத்தை ஏழைகளின் நலனுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.


இப்படித்தான் சமூக தண்ணீர் மையங்கள் தொடங்கப்பட்டது. கலாம் அடிக்கடி இத்திட்டம் குறித்தது என்னிடம் விசாரிப்பார். பிற்பாடு அவர், 'கண்டுபிடிப்புகள் மற்றும் புது யோசனைகளுக்கான வங்கி' எனும் குழுவில் என்னை உறுப்பினராக்கினார்'' என கருணாகர் முன்னாள் ஜனாதிபதி கலாமுடனான நினைவுகள் குறித்து பகிர்ந்தார்.

'' வதந்திகள் நிறைய சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன''

முன்னதாக பல வெள்ள சூழ்நிலைகளில் வேலை செய்துள்ள கருணாகர், தற்போது கேரளாவில் ஏற்பட்டிருக்கும் நிலை சற்று வித்தியாசமானது என்கிறார்.

''கேரள மக்கள் மனதளவில் இச்சூழ்நிலைக்கு தயாராகவில்லை. பெரும்பாலான இளைஞர்கள் அயல்நாட்டில் இருக்கிறார்கள். ஆகவே, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இங்கே அதிகம். அவர்கள் வெள்ளம் ஏற்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்வது குறித்து பயந்துவிட்டார்கள். அது மட்டுமல்ல அணை உடைந்துவிட்டது, நகரம் தண்ணீரில் மூழ்கபோகிறது என பரவிய வதந்திகள் நிலைமையை மோசமாக்கின''.

''கேரளாவில் போக்குவரத்து கடுமையாக முடங்கியது. மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மக்களில் பலர் கேரளாவுக்கு துணிகள், ஷூக்கள், பிளாஸ்டிக் பொருள்களை அனுப்புகிறார்கள். ஆனால், கேரளாவுக்கு தற்போது இவை தேவையில்லை. ஏனெனில், இப்பொருட்கள் கேரளாவை குப்பைத்தொட்டியாக்கும். மின்சார பழுது பார்ப்பவர், குழாய்கள் பழுது பார்ப்பவர்கள் போன்ற மனித சக்திகளே தற்போது கேரளவுக்கு தேவை. அவர்கள்தான் கேரளா இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுவர் என நம்புகிறேன்''.

கேரளாவில் நிறைவாய் செல்லப் பிராணிகள் இறந்துள்ளன. அவை வெள்ளத்தில் இருந்து அகற்றப்படவேண்டும். இல்லையெனில் எதாவது நோய் தாக்கக்கூடும். இதற்கெல்லாம் அப்பால் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளே நிலைமை மிகவும் மோசமாக்குகிறது'' என்றார்.