வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:49 IST)

“கலாக்ஷேத்ரா மாணவர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்” - நடிகை அபிராமி

சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் மீது அங்கு பயிலும் மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இது தொடர்பான வழக்கில், அங்கு நடன பிரிவில் பணியாற்றிய ஆசிரியர் ஹரிபத்மன் என்பவரை காவல்துறையினர் கடந்த 3ஆம் தேதியன்று கைது செய்தனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அபிராமி வெங்கடாச்சலம், “மாணவிகள் இந்த விவகாரத்தில் சில ஆசிரியைகளால் தூண்டிவிடப்படுகிறார்கள்.
 
பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் செய்யப்படுகிறது,” என்று குற்றம்சாட்டினார். மேலும், தான் அங்கு பயின்ற வரை ஹரிபத்மன் எந்தவித பாலியல் தொல்லைகளையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
 
கலாக்ஷேத்ராவில் என்ன நடந்தது?
கடந்த வாரம், கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பணியாற்றும் ஹரிபத்மன் உள்ளிட்ட நான்கு நபர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும் அதுகுறித்துப் புகார்கள் அளித்தும்கூட அவர்கள் தொடர்ந்து பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்த போராட்டத்தைத் தொடர்ந்து கலாக்ஷேத்ரா நிறுவனம் ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், ஆசிரியர் ஹரிபத்மன் 2019ஆம் ஆண்டு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறி அடையாறு காவல்நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் செய்தார்.
 
இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவானது.
 
இந்த நேரத்தில் ஹரிபத்மன் ஹைதராபாத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்குவதற்காக மாணவிகளுடன் சென்றிருந்தார். ஆனால், நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கும் மாணவிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அந்த நிகழ்வு நடைபெறவில்லை என்று மாணவி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து அங்கிருந்து சென்னை திரும்பி வந்த ஹரிபத்மன் ஏப்ரல் 3ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
 
கலாக்ஷேத்ராவில் நடன பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மிக மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்குத் தாங்கள் பல ஆண்டுகளாக ஆளானதாகக் குற்றம்சாட்டினர்.
 
மேலும், பல முறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும்கூட, அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் புகார் அளித்தமைக்காக அச்சுறுத்தப்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். மாணவிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்கப் பல முறை தொடர்புகொண்டபோதும் கலாக்ஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்கவில்லை.
 
ஆனால், கலாக்ஷேத்ரா நிர்வாகத்தின் இணையதளத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகம் கருத்து வெளியிட்டது. அதில், “கடந்த சில மாதங்களாக, கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் பரப்ப ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலாக்ஷேத்ராவை பாதுகாப்பற்ற சூழல் என்று பொய்யாகக் காட்டி மாணவர்களையும் ஊழியர்களையும் குழப்பி துன்புறுத்துவதன் மூலம் நிறுவனத்தை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் மூலமாக இந்தப் புகார்கள் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது.
 
உள்குழு விசாரணையை சுயமாக எடுத்து, முழுமையான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு ரகசியத்தன்மையுடன் விசாரணைகள் நடத்தப்பட்டன. குழு குற்றச்சாட்டுகளில் தகுதியைக் கண்டறியவில்லை,” என்று தெரிவித்தது.
 
கலாக்ஷேத்ராவில் பயிலும் மாணவர்கள் கூறியது என்ன?
பிபிசி தமிழிடம் அங்கு தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்துப் பேசிய மாணவ, மாணவிகள் சிலர், “கலாக்ஷேத்ராவில் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லை” எனக் கூறினர்.
 
மேலும், மோசமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் தெரிவித்தபோதும்கூட, எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், பலரும் படிப்பைப் பாதியில் நிறுத்திச் சென்றதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
இங்குள்ள மாணவ, மாணவிகள் பலரும் ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் புகார் தெரிவித்தபோது, “நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இதுபோன்ற புகார்களைத் தரமாட்டார்கள்’ எனக் கூறி அவனமானப்படுத்தப்பட்டதாக” கலாக்ஷேத்ராவில் உள்ள பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
மாணவர்கள் கேள்வியெழுப்பினால், உடனடியாக டி.சி வாங்கிக்கொள்ளுமாறு பலமுறை சொல்லப்பட்டதால் பலரும் புகார் அளிப்பதையே நிறுத்திவிட்டதாகவும் அந்தப் பணியாளர் தெரிவித்தார்.
 
“கலாக்ஷேத்ரா பெயரைக் கெடுக்கிறார்கள்”
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அபிராமி, “நான் கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவி. எப்போதும் ஒரு பிரச்னையில் ஒருதரப்பு விளக்கத்தை மட்டுமே கேட்டுவிட்டுப் பேசக்கூடாது. 89 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் இப்படியொரு பிழையைச் சொல்லும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை,” என்று கூறினார்.
 
மேலும், “குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தரப்பைப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படவே இல்லை. நாங்கள் பெருமையாகப் பார்த்த ஆசிரியர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசுகிறார்கள்.
 
பாலியல் துன்புறுத்தலோ அல்லது எந்தப் பிரச்னையாகவோ இருந்தாலும் அது நடந்த நேரத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். தவறு நடக்கிறது என்றால், அந்த நேரத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 
அதைச் செய்யாமல், ‘நான் பயந்துட்டேன்’ என்று சொல்வது சரியல்ல. நாம் சொல்வதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். நாம் சொல்வது உண்மையாக இருந்தால், எதற்கும் பயப்படத் தேவையில்லை,” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது அபிராமி கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று காவல் ஆணையரை சந்தித்த அபிராமி, இந்த விவகாரத்தில் மாணவிகளை இரண்டு ஆசிரியைகள் தூண்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
 
“மாணவிகள் தூண்டிவிடப்படுகிறார்கள்”
கலாக்ஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு சிலர்தான் போராட்டம் செய்யவும் ஹரிபத்மனுக்கு எதிராக புகார் அளிக்கவும் மாணவர்களைத் தூண்டிவிடுகின்றனர் என்று நடிகை அபிராமி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
சென்னையில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை அபிராமி, “நான் கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவி. இதுபோன்ற விவகாரத்தில் தலையிடாமல் நான் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், கலாக்ஷேத்ரா குறித்து தொடர்ச்சியாக அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தது என்னை வெகுவாகப் பாதித்தது.
 
அந்தக் கல்லூரிக்காக குரல் கொடுக்க வேண்டியது, அங்கு படித்த முன்னாள் மாணவி என்ற முறையில் எனது பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளேன். அதற்காகவே இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் வந்துள்ளேன். கலாக்ஷேத்ராவில் பாலியல் புகார்கள் விவகாரத்தில் மாணவிகள் தவறாகத் தூண்டிவிடப்படுகிறார்கள்,” என்று தெரிவித்தார்.
 
மேற்கொண்டு பேசியவர், “நான் படிக்கும் காலத்திலேயே ஆசிரியை ஒருவர், ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராகப் பேசும்படி என்னை வற்புறுத்தினார். நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. கலாக்ஷேத்ராவில் நான் 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை படித்தேன். கடந்த 10 ஆண்டுகலாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது," என்று கூறினார்.
 
அதோடு, "2012-13 காலகட்டத்தில் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கினார்கள்.
 
தற்போதும் அதேபோலத்தான் ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக இந்தப் பிரச்னையை உருவாக்கியுள்ளார்கள். இத்தனை நாட்களாக எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவிகளைத் தூண்டிவிட்டு இந்த விவகாரத்தைப் பெரிதாக்கியுள்ளார்கள்.
 
அந்தக் கல்லூரியில் ஒரு சில ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டிவிடுகிறார்கள். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரைக்கும் எந்தவித பாலியல் தொல்லைகளையும் கொடுத்ததே இல்லை.
 
எனவே பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நான் நேரடியாக அமர்ந்து பேசி என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.
 
ஒருவர் மீது எளிதாகக் குற்றம் சுமத்திவிடலாம். என்னைப் பொறுத்தவரை, சில ஆசிரியைகளால் இந்த விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
 
மகளிர் ஆணையத்தில் குவியும் மாணவிகளின் புகார்கள்
இதற்கிடையே கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உள்ள மாணவிகள் பலரும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடம் ஈமெயில் வாயிலாகப் புகார் அளித்து வருவதாகவும் மகளிர் ஆணையத்தின் தலைவி ஏ.கே.குமாரி தெரிவித்துள்ளார்.
 
அவர், ''195 பெண்கள் அங்கு பயில்கின்றனர். கலாக்ஷேத்ரா மாணவ, மாணவிகள் ஆணையத்திற்கு ஈமெயில் வாயிலாகப் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியதும் அவர்கள் புகார்களைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களை அவ்வப்போது சென்று பார்த்து வரவும் முடிவு செய்துள்ளேன்.
 
இந்த மாணவ, மாணவிகள் இதற்கு முன்னதாக கலாக்ஷேத்ரா நிர்வாகத்திடம் அளித்த புகார்களின் நகல்களைத் தருமாறும் கேட்டுள்ளேன். நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் அளித்த புகார் அறிக்கை குறித்துக் கேட்டபோது, அவர்கள் இதுவரை மாணவ, மாணவிகளுக்கு அளித்துள்ள வசதிகள் குறித்த அறிக்கையை அளித்தார்கள்.
 
மீண்டும் அவர்களிடம் சரியான அறிக்கையைத் தரவேண்டும் என்று கேட்டுள்ளேன்,'' என்று குமாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விரைவில், கலாக்ஷேத்ரா மாணவ,மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குமாரி தெரிவித்தார்.