ஜைனுல் ஆபித்
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகளில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்ள ஐ.எஸ் அமைப்பின் சேனல்கள் வாயிலாக ஆகஸ்டு 22ஆம் தேதியிடப்பட்ட இந்த இதழ் பகிரப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய வளைகுடா நாடுகளின் சுற்றுப்பயணத்தை இது மேற்கோள் காட்டியது.
அரபு நாடுகளில் வாழும் ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு, தத்தமது நாடுகளில் வாழும் இந்துக்களை பணக்காரர் அல்லது ஏழை என பாரபட்சம் பாராமல், அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வெளியேற்றும் கடமை இருப்பதாக அந்த இதழின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அவர்களை அச்சுறுத்தி, சொத்துகளை பறியுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் இந்தியாவை சேர்ந்த மில்லியன் கணக்கானோர் பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கட்டுரையில், மோதியின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வெளிநாட்டு உறவுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருந்தன.
அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நரேந்திர மோதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுக்கு மேற்கொண்ட சமீபத்திய பயணத்தில் பிரதிபலிக்கிறது.
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அல்-மக்தூம் உடன் நரேந்திர மோதி கைகுலுக்கும் படம் ஐ.எஸ் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை மத்திய அரசு நீக்கிய பிறகு, அதுதொடர்பான முதல் எதிர்வினையை ஐஎஸ் அமைப்பு இந்த தலையங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
"விலாயா ஆஃப் ஹிந்த்" என்ற புதிய கிளையை இந்தியாவில் தொடங்குவதாக கடந்த மே மாதம் ஐ.எஸ் அமைப்பு அறிவித்தது. ஆனால், இந்த குழு இதுவரை இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் அவ்வப்போது, குறைந்த அளவிலான தாக்குதல்களுக்கு மட்டுமே பொறுப்பேற்றுள்ளது.
'அவர்களை கொல்லுங்கள்'
"அரேபிய தீபகற்பத்தில்" இந்துக்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவது குறித்து அல்-நாபா கவலை தெரிவித்துள்ளது.
இந்து மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களை அரபு பிராந்தியத்தை விட்டு வெளியேற வித்திட முடியுமென்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இந்துக்களும் இது பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது மிக முக்கியமானது என்றும், அரபு "கொடுங்கோல்" ஆட்சியாளர்களை பதவி நீக்கம் செய்து, 'ஷரியா' ஆட்சியை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிப்பதாக அந்த தலையங்கம் விவரிக்கிறது.
இந்துக்கள் "இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள்" என்று கருதப்படுகிறார்கள். எனவே, முஸ்லிம்கள் அவர்களுக்கு "பாதுகாப்பு" அளிப்பதற்கு கடன்பட்டிருக்கவில்லை. அதாவது, ஷரியா சட்டத்தில் உள்ள ஒரு கருத்து, முஸ்லிம் அல்லாதவர்களின் வாழ்க்கை, சொத்து மற்றும் மரியாதை அனைத்தையும் தீண்டத்தகாததாக ஆக்குகிறது.
ஐ.எஸ்ஸின் போட்டியாளரான அல்-கய்தா கடந்த காலத்தில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தாக்குதல்களை வலியுறுத்தியது. ஆனால், அது கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருந்தது.
காஷ்மீர் விவகாரத்துக்காக பழிவாங்குதல்
காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து, அங்கே ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை குவித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்த "பசுவை வழிபடும்" மோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அரபு நாடுகளில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இந்துக்களுடன் போராடுவது காஷ்மீர் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு உதவுவதற்கு ஒத்ததாகும்."
காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய சமயத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமைதி காப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களை போராளிகள் என்று கூறிக் கொள்ளும் காஷ்மீரின் பிரிவினைவாத குழுக்கள் "பாகிஸ்தானின் உளவு அமைப்புகளால் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகின்றன," என்றும் இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் இந்தியா - அரபு நாடுகள் இடையேயான உறவு
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் நிலங்களை பறிப்பது, கொலை செய்வது, மசூதிகளை அழிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்துக்கள் ஈடுபடுவதாக அல்-நாபாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையில் செயல்படும், மத கொள்கைகளுக்கு எதிரான அரசுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதுடன், அங்கே முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு தூண்டிவிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ள வேண்டுமானால், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தங்களது பிராந்திய போட்டியாளரான இரானை எதிர்கொள்ள உதவும் என்று நினைத்துக்கொண்டு அரபு நாடுகளின் தலைவர்கள் செயல்படுவதாகவும் என்று தலையங்கம் கூறியது.
பொருளாதார மற்றும் கொள்கை ரீதியிலான உறவை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இந்துக்கள் அதிகமான முதலீடு செய்துள்ள நாடுகள் தத்தமது நாடுகளில் இந்தியா தனது ராணுவத்தளத்தை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படலாம் என்றும் அதில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மீதான இந்துக்களின் "வெறுப்பு" ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அல்-நாபாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்கள் மீதான இந்துக்களின் வெறுப்பை, இடைக்கால முஸ்லிம் வம்சங்கள் இந்தியாவை வென்ற பிறகு, பல தசாப்தங்களுக்கு இந்து மதத்தை அடக்கியது மற்றும் அவர்களின் கோயில்களை அழித்ததுடன் ஒப்பிட்டு அல்-நாபாவின் தலையங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.