ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (16:59 IST)

நரேந்திர மோதி - இமானுவேல் மக்ரோங் சந்திப்பு : 'இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் வேறு தலையீடு தேவையில்லை’

காஷ்மீர் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு பிரச்சனை என்றும் அதில் வேறு யாரும் தலையிடத் தேவையில்லை என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.

பிரான்ஸில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த பிறகு இமானுவேல் மக்ரோங்கின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

சனிக்கிழமையன்று பிரான்ஸில் தொடங்கவுள்ள ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நரேந்திர மோதி அங்கு சென்றுள்ளார்.

நரேந்திர மோதி மற்றும் இமானுவேல் மக்ரோங் ஆகிய இரு தலைவர்களும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நரேந்திர மோதி மற்றும் இமானுவேல் மக்ரோங் ஆகிய இரு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை பிரான்சில் தற்போதுள்ள மூத்த பத்திரிகையாளர் ரன்வீர் நய்யார் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் பிராந்திய, இந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டாலும், காஷ்மீர் பிரச்சனை முக்கிய விவாதமாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

தனது உரையில் காஷ்மீர் என்று வார்த்தையை மூன்று அல்லது நான்கு முறைகள் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பயன்படுத்தினார். காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு பிரச்சனை மட்டுமே என்று பிரான்ஸ் நம்புவதாக இமானுவேல் மக்ரோங் அழுத்தமாக கூறினார்.

காஷ்மீரில் தான் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் அந்த பிராந்தியத்தை வலுப்படுத்தும் என்றும் இந்தப் பகுதியில் பயங்கரவாதத்தை இந்நடவடிக்கை குறைக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தன்னிடம் கூறியதாக இமானுவேல் மக்ரோங் மேலும் கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமையன்று காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று இந்திய நிர்வாகத்துட்பட்ட ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளிட்டபின்னர், பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுத்தது