1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:50 IST)

1,000 கிலோமீட்டர் வேகத்தில் தரையில் பயணிக்க முடியுமா? ஹைப்பர்லூப் காணொளி காட்டுவதென்ன?

கிட்டத்தட்ட வெற்றிடம் போன்ற சூழல் நிலவும் குழாய் ஒன்றில், 'மேக்னடிக் லெவிடேஷன்' என்கிற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வழி செய்யும் ஹைப்பர்லூப் பாட்கள் தொடர்பான விளக்கங்களோடு காணொளி ஒன்றை விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
 
காந்தத்தை பயன்படுத்தி பொருளை மேலே உயர்த்தி உந்தித் தள்ளுவதே மேக்னடிக் லெவிடேஷன் கோட்பாடு.
 
ரயில் போல ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிப்பதற்கு பதிலாக, கார்கள் சாலைகளில் பயணிப்பது போல இந்த ஹைப்பர்லூப் பாட்கள் ஒன்றன் பின் ஒன்று வரிசையாக தனக்கான பாதையில் பயணிக்கும். பாட்களை தனித் தனி திசைகளிலோ அல்லது ஒரே திசையில் சேர்த்தோ இயக்கலாம்.
 
கடந்த ஆண்டு விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் ஹைப்பர்லூப் பாட்களை இயக்கி தன் முதல் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.
 
விர்ஜின் ஹைப்பர்லூப்பின் இந்த காணொளி வெறும் மிகைப்படுத்தல் மட்டுமே என ஒரு விமர்சகர் தன் கருத்தை முன் வைத்திருக்கிறார்.
 
"எல்லாம் வேலை செய்வதாகவும், பிரமாதமாக இருப்பதாகவும் ஒரு ஜொலிக்கும் காணொளி கூறுகிறது. அக்காணொளியில் வெறுமனே கணினியில் உருவாக்கப்பட்ட படங்களே இருக்கின்றன. அதோடு ஒரு மிகப்பெரிய கண் சிமிட்டும் முகமொன்று இருக்கிறது, அதைத் தாண்டி எதுவும் இல்லை" என்கிறார் ரயில் பொறியாளர் மற்றும் எழுத்தாளர் கெரெத் டென்னிஸ்.

"ஆயிரக் கணக்கிலான பயணிகளை ஒரு மணி நேரத்தில் ஒரே திசையில் அழைத்துச் செல்ல, ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான பாட்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தேவை அல்லது மூன்று நொடிகளுக்கு ஒரு பாட் வீதம் தேவை" என அதன் சாத்தியப்பாடு குறித்து பிபிசியிடம் கேள்வி எழுப்பினார் அவர். அக்கேள்வியை விர்ஜின் ஹப்பர்லூப்பிடம் எழுப்பியது பிபிசி.
 
"அது ஒரு நல்ல கேள்வி. இது தான் ஹைப்பர்லூப் அமைப்பை மற்ற போக்குவரத்து முறைகளிலிருந்து பிரித்து, தனித்தன்மை கொண்டதாக மாற்றுகிறது" என ஹைப்பர்லூப் பதிலளித்தது.
 
"அதிக எண்ணிக்கையிலான மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல ரயில்களை ஒன்றோடு ஒன்று இணைக்கிறார்கள். பாட்கள் அப்படி ஒன்றோடு ஒன்று இணைக்காமல், டிஜிட்டல் முறையில் இணைத்து, சாலைகளில் வரிசைகட்டிச் செல்லும் டிரக்குகளைப் போல பயணிக்கவைப்பதே இந்த தொழில்நுட்பம்.
 
"எனவே ஹைப்பர் லூப் அமைப்பால் ஒருவருக்கு தேவையானபோது சேவையை வழங்கவும், நேரடியாக சென்று சேர வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லவும் முடிகிறது. ரயில்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு மற்றும் செயல்திறனை உணரும்போது இவையனைத்தும் சாத்தியமாகிறது"
 
அரசு நிதி உதவி
 
மின்கல மின்சாரத்தில் இயங்கும் பாட்கள் எந்த வித நச்சு வாயுக்களையும் வெளியிடுவதில்லை என்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப்.
 
கடந்த ஜூலை மாதம், ஹைப்பர்லூப் டிடி என்கிற நிறுவனம், ஹைப்பர்லூப் திட்டத்தை வணிக ரீதியில் சாத்தியமாக்க ஹைப்பர் போர்ட் என்கிற சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சரக்குகளை அதிவிரைவாக அனுப்பலாம் என்றது.
 
சமீபத்தில் அமெரிக்காவின் செனட் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அமெரிக்க உள்கட்டமைப்புச் சட்டத்தில் ஹைப்பர்லூப் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. எனவே இத்திட்டத்துக்கு அமெரிக்க கூட்டரசின் நிதி உதவிகள் கிடைக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
 
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இது எதார்த்தத்தில் சாத்தியமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அதோடு ரயில் மற்றும் விமான கட்டணங்களோடு போட்டி போடும் விதத்தில், நிதி ரீதியாக இதன் கட்டுமானங்களை நிறுவுவது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பப்படுகிறது.
 
தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் இதன் செலவினங்களை குறைத்து அதிக லாபம் பார்க்கலாம், பொது முதலீடுகளை ஈர்க்கலாம் என்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப்.
 
"தனியார் துறையில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும், பொது முதலீடுகளைப் பெறவும் அதிக சாத்தியக் கூறுகள் இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது" என்கிறது இந்நிறுவனம்.