திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (13:31 IST)

ஆஃப்கனிலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் இத்தனை சிக்கல்கள் வருமா?

அமெரிக்கா இல்லாமல், காபூல் விமான நிலையத்தில் இருந்து இத்தனை ஆயிரம் மக்களைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது என பிரிட்டன் அமைச்சர் கூறியுள்ளார்.
 
காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க, அமெரிக்கா தான் அதிக அளவிலான துருப்புகளை களத்தில் நிறுத்தி இருக்கிறது. விமான கட்டுப்பாட்டு அறை உட்பட பல அத்தியாவசிய சேவைகளையும் அமெரிக்கா தான் நடத்திக் கொண்டிருக்கிறது.
 
மக்களைக் காப்பாற்றும் பணி தொடர்பான உளவுத்துறை தகவல்கள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை அமெரிக்கா தான் வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் வெளியேறிவிட்டால், அவர்களின் பணியை வேறு ஒருவர் வந்து செய்வதற்கு கால தாமதமாகும், பல ஆதார வளங்கள் வேறு தேவைப்படும்.
 
அமெரிக்காவின் உதவியின்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது மிகவும் சிரமமானது என்கிறார் 2013 முதல் 2016 வரையான காலத்தில் ஒருங்கிணைந்த படைகளின் கமாண்டராக இருந்த ஜெனரல் சர் ரிச்சர்ட் பாரோன்ஸ்.
 
"நாம் விமான நிலையத்தை விட்டு வெளியேறி, தாலிபன்களோடு போரிட்டு மக்களை காப்பாற்ற வேண்டி இருக்கும். அதை ஒரு நல்ல திட்டமாக நான் பார்க்கவில்லை".
 
"நம் விமானங்கள் அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தக் கூடாது என தாலிபன்கள் விரும்பினால், ஒரே ஒரு மார்டர் குண்டு, ஒரு ஏவுகணை, ஒரேயொரு இயந்திர துப்பாக்கியைக் கொண்டு ஒரு சுற்று சுட்டால் போதும். ஒட்டுமொத்த மக்களின் வெளியேற்றப் பணியும் பாதிக்கப்படும்".
 
போர் விமானங்கள் அல்லது ஹெலிகாப்டரின் பாதுகாப்பு அவசியமாகிறது என்கிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த நிக் ரெனால்ட்ஸ். தற்போது அப்பாதுகாப்புப் பணியை அமெரிக்க படைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
பிரிட்டனின் ராயல் விமானப் படையின் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்ற முடியாது. அதுவும் இது போன்ற அழுத்தம் நிறைந்த காலகட்டத்தில் முடியாது என்கிறார் நிக்.
 
காபூல் விமான நிலையத்தில் சூழல் என்ன?
 
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் இருக்கும் ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது அமெரிக்கா தான் அதிக படை துருப்புகளை நிறுத்தி இருக்கிறது. சுமார் 6,000 வீரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கர்களின் விமானங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்த படி ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளன.
 
பிரிட்டன் அவ்விமான நிலையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட துருப்புகளைக் கொண்டுள்ளது. இதில் பிரிட்டன் ராணுவத்தின் 16 ஏர் அசால்ட் ப்ரிகேட் அணியும் அடக்கம். நேட்டோ படைகளின் அங்கமாக இருக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளின் சிறு படைகளும் அங்கு இருக்கின்றன. 

விமான நிலையத்தில் நார்வே, மருத்துவமனையை நிறுவி உதவி செய்து வருகிறது. களத்தில் 800 சிவில் ஒப்பந்ததாரர்கள் இருப்பதாகவும், அவர்களில் பலரும் விமான நிலையத்தில் இருப்பதாக்வும் நேட்டோ கூறியுள்ளது.
 
பிரிட்டனுக்கு என்ன வேண்டும்?
செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்தில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியேறுவதை ஒத்திப் போடுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நேற்று (திங்கட்கிழமை) பிரிட்டன் பாஸ்போர்ட் உள்ள 1,800 பேர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் ஹீபே கூறினார். மேலும் பிரிட்டனுக்காக பணியாற்றிய 2,275 பேர் ஆஃப்கானில் இருப்பதாகவும், அவர்கள் மறுகுடியேற்ற திட்டத்தின் கீழ் பிரிட்டனில் குடியேறலாம் எனவும் கூறினார்.
 
கடந்த வாரத்தில் 7,000 பேரை பிரிட்டன் ஆஃப்கானில் இருந்து வெளியேற்றி இருக்கிறது. மேற்கொண்டும் மக்களைக் காப்பாற்ற விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் "அமெரிக்கா வெளியேறிய உடனேயே நாமும் அங்கிருந்து வெளியேற வேண்டும்" என கூறியுள்ளார் பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ்.
 
அமெரிக்காவின் பதில் என்ன?
 
ஆப்கன் கூட்டாளிகள், அமெரிக்கா உடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதற்காகவே இலக்கு வைக்கப்பட வாய்ப்பு இருக்கும் ஆஃப்கானியர்கள் ஆகியோரை, பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறோம் என முன்பு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.
 
அமெரிக்கா கடந்த வாரம் 28,000 பேரை மீட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் நிலை, அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைக் வெளிப்படுத்துகிறது என்கிறார் நிக் ரெனால்ட்ஸ்.
 
அகஸ்ட் 31ஆம் தேதி காலக் கெடு பார்க்காமல் பிரிட்டன் எத்தனை மக்களை காப்பாற்ற முடியுமோ அத்தனை பேரை பாதுகாக்க விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவோ ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஆஃப்கனை விட்டு வெளியேறுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
 
தாலிபன் திட்டவட்டம்
இதுவரை விமான நிலையங்களில் தாலிபன், தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஆனால் தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவரோ, ஆகஸ்ட் 31 வரை தான் கெடு என குறிப்பிட்டிருக்கிறார்.
 
ஒருவேளை அமெரிக்க படைகள் குறிப்பிட்ட தேதிக்குள் ஆஃப்கானை விட்டு வெளியேறவில்லை எனில், பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் எனக் கூறியுள்ளார் தாலிபனின் செய்தித் தொடர்பாளர்.