1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (14:52 IST)

ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன் உரை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தனது நட்பு நாடுகள் கால நீட்டிப்பு கோரியிருந்தாலும் காலக்கெடுவுக்குள் மக்களை மீட்கும் பணிகளை முடிப்பதற்கான "வேகத்தில்" இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

"நாம் எவ்வளவு விரைவாக முடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது" என்று அவர் பேசினார். ஏற்கெனவே சில அமெரிக்கப் படை வீரர்கள் நாடு திரும்பி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. எனினும் இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
காபூல் நகரம் தாலிபன்களின் வசமாகி 10 நாள்களாகி இருக்கும் நிலையில், இதுவரை அங்கிருந்து சுமார் 70 ஆயிரம் பேர் விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
 
மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று ஏற்கெனவே தாலிபன்கள் அறிவித்துவிட்டனர்.
 
"மக்களை வெளியேற்றுவதற்கு தாலிபன்கள் உதவி செய்து வருகின்றனர்" என்று அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். தாலிபன்களின் நடவடிக்கைகள் மூலமாகவே சர்வதேச சமூகம் அவர்களை மதிப்பிடும் என்றும் பைடன் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வெற்றி: இந்தியா என்ன செய்யப் போகிறது?
 
'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
"யாரும் தாலிபன்களின் வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை," என்று பைடன் மேலும் தெரிவித்தார்.
 
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக விமானம் மூலம் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று பைடன் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நீண்ட காலம் இருப்பதால், "தாக்குதல் நடத்தும் ஆபத்து தீவிரமாக அதிகரித்துவருகிறது" என்றார் பைடன்.
 
கசப்பான ஏமாற்றம் - தாரா மேக்கெல்வே, பிபிசி வெள்ளை மாளிகை செய்தியாளர்
வெள்ளை மாளிகை ஊழியர்கள் நேரந் தவறாமல் பணியாற்றினார்கள். அவர்கள் வெல்வெட் கயிறுகளை ரூஸ்வெல்ட் அறைக்கு நகர்த்தி அதிபரின் உரைக்குத் தயாரானார்கள்.
 
அதிபர் உரைக்காக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு மேடை தயாராக இருந்தது. ஒரு முக்கியமான தருணத்துக்காக அனைவரும் காத்திருந்தனர். ஆப்கானிஸ்தானைப் பற்றிய மிக முக்கியமான அறிவிப்பை அதிபர் வெளியிட இருந்தார். ஆனால் அவர் தாமதமாகவே வந்தார். தனது ஓவல் அலுவலகத்தில் உதவியாளர்களைச் சந்தித்தார். உரை குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
"என்ன நடக்கிறது?" என்ன நடக்கிறது, ஏன் அவரது பேச்சு தாமதமாகிறது என்று என்று குறுஞ்செய்தி அனுப்பி என சகாக்கள் கேட்கத் தொடங்கியிருந்தனர்.
 
அவர்கள் மட்டும் இதில் வியப்படைவில்லை, காபூலில் காத்திருந்த ஏராளமானோர் அதிபர் என்னப் பேசப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
 
இறுதியில் பல மணி நேரம் தாதமாக பைடன் பேசத் தொடங்கினார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி கெடுவுக்குள் பணிகளை முடிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
 
அவரது பேச்சு காபூலில் உள்ள பலருக்கு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தன. பணி இன்னும் நிறைவடைய இன்னும் நெடுந்தூரம் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
வெள்ளை மாளிகையில் பைடனின் பேச்சுக்கு முந்தைய அவரது நாள் ஒழுங்கமைக்கப்பட்டதாக இல்லை. கணிக்க முடியாததாகவும், குழப்பமானதாகவும் இருந்தது.
 
பைடனின் உரை அவரது ஆப்கானிஸ்தான் கொள்கையின் சாரத்தைக் கொண்டிருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.
 
ஜி-7 மாநாட்டில் பேசப்பட்டது என்ன?
 
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 தலைவர்கள் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நெருக்கடி குறித்து பைடன் பேசினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகும் மீட்பு விமானங்களை அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின.
 
கடைசித் தருணம் வரை மக்களை வெளியேற்றும் நடவடிக்கைளை எடுக்கப் போவதாக கூட்டத்துக்கு தலைமை விகித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். காலக்கெடு முடிந்த பிறகும் மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தாலிபன்களைக் கேட்டுக் கொண்டார்.
 
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு முடிந்தவரை உதவுவது தார்மீகக் கடமை என்று தலைவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெல் லெயேன் கூறினார்.
 
ஆபத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானியரை நாட்டில் இருந்து மீட்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் உண்மையில் களநிலவரம் நிச்சயமற்றதாகவும், குழப்பமானதாகவும் உள்ளது.
 
காபூலில் இருந்து வெளிநாட்டினரையும் தகுதியான ஆப்கானியரையும் வெளியேற்றுவதற்காக அங்குள்ள விமான நிலையத்தில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க வீரர்களும், பிரிட்டனைச் சேர்ந்த சுமார் ஆயிரம் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இவர்கள் தவிர, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளைச் சேர்ந்த சிறிய ராணுவக் குழுக்களும் காபூலில் உள்ளன.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் காபூலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு முன்னதாகவே சில அமெரிக்கப் படை வீரர்கள் அங்கிருந்து புறப்படுவது மீட்புப் பணிகளைப் பாதிக்காது எந்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
 
செவ்வாய்க்கிழமையன்று இரு அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காபூலுக்குப் பறந்து சென்றனர். இது சமூக ஊடகங்களில் கடும் எதிர்வினையைத் தூண்டியது. ஜனநாயகட்சியின் சேத் மோல்டன் மற்றும் குடியரசுக் கட்சியின் பீட்டர் மீஜர் ஆகியோர் காபூல் விமான நிலையத்தில் பல மணி நேரம் இருந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
 
ராணுவ மற்றும் ராஜீய அதிகாரிகளிடம் அனுமதி பெறாத இந்தத் திடீர்ப் பயணம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கடும் கோபமடைந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
நிச்சயமற்ற மற்றும் குழப்பமான சூழல் - யோகிதா லிமாயே, பிபிசி நியூஸ், மும்பை
 
விமான நிலையத்திற்கு செல்ல முயன்ற சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போர் பிபிசியிடம் தெரிவித்தனர். எனினும் அவர்களுக்கு அனுமதி மறுப்பது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.
 
விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த வாரம் முழுவதும் மக்கள் அதன் வாயில்களைக் கடந்து செல்வது கடினமாக இருந்தது. இப்போது நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
 
ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தாலிபன்கள் அறிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்துக்குச் செல்லும்போது ஏதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தை பலர் கைவிட்டு விட்டதாக பிபிசிக்கு தெரியவந்திருக்கிறது.
 
காபூலில் இருந்து மணிக்கு ஒரு விமானம் புறப்படுகிறது. முதலில் விமானங்களில் நெரிசல் அதிகமாக இருந்தது. இப்போதே ஆட்கள் இல்லாமல் சில விமானங்கள் பறக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
 
ஆபத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானியரை நாட்டில் இருந்து மீட்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் உண்மையில் களநிலவரம் நிச்சயமற்றதாகவும், குழப்பமானதாகவும் உள்ளது.
 
"பெண்களிடம் பழக தாலிபன்களுக்கு பயிற்சியளிக்கவில்லை"
 
காலக்கெடுவை நீட்டிக்கை ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்றும், விமான நிலையத்துக்குச் செல்வது தடை செய்யப்படும் என்றும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமையன்று கூறியிருந்தார்.
 
விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில் சிக்கி "மக்கள் தங்கள் உயிரை இழக்கும் ஆபத்து உள்ளது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
முழுமையான பயண ஆவணங்களை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானியரும் நாட்டை விட்டு வெளியேற முடியாதா என்ற குழப்பத்தை இவரை பேட்டி ஏற்படுத்திவிட்டது.
 
ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முறையான அமைப்புகள் ஏற்படுத்தப்படும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று முஜாஹித் கூறியிருக்கிறார்.
 
"எங்கள் பாதுகாப்புப் படைகளுக்குப் பெண்களுடன் எப்படிப் பழகுவது, பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
 
"முழு பாதுகாப்பு அளிக்கப்படும் வரை பெண்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றார் அவர்.
 
தாலிபன்கள் 2001 க்கு முன்னர் ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினர். ஆனால் இப்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகளை அளிப்பதாக புதிய பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
 
ஆனால் தாலிபன்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகமான தகவல்கள் இருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்சேல் பேக்லெட் கூறியுள்ளார்.