1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (09:53 IST)

காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் எனவும் தங்கள் நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
 
காபூல் நகரம் தாலிபன்களின் வசமான பிறகு 10 நாள்களில் சுமார் 82 ஆயிரம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
தாலிபன்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி வரும் 31--ஆம் தேதிக்குள் படைகள் முற்றிலுமாக வெளியேற வேண்டும். அதனால் மீட்புப் பணிகளை நாடுகள் துரிதப்படுத்தியுள்ளன.
 
காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என தாலிபன்கள் அறிவித்துவிட்டனர். எனினும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களை அனுமதிப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.
 
காபூல் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் மக்களுக்கு அமெரிக்கா நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்தது. அதன்படி அபே வாயில், கிழக்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய பகுதிகளில் காத்திருக்கும் மக்கள் உடனடியாக அப்பால் சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
 
முன்னதாக இதேபோன்றதொரு அறிவுறுத்தலை பிரிட்டன் வெளியிட்டது. அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாகச் சென்றுவிடுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் அதன் எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 
எனினும் எந்தவகையாந பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது பற்றி அமெரிக்காவோ, பிரிட்டனோ எந்தவிதமான கூடுதல் தகவலையும் கொடுக்கவில்லை.
 
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையின்போது, "ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
 
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்த விமானங்களில் சுமார் 19,000 பேர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறினார். குழப்பமான காட்சிகளுக்கு மத்தியில் கடந்த சில நாள்களாக விமானம் மூலம் மீட்கப்படும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
 
வரும் 31-ஆம் தேதி காலக்கெடுவுக்குள் மீட்புப் பணிகளை முடிப்பதற்கான வேகத்தில் அமெரிக்கா இன்னும் இருப்பதாக பிளிங்கன் கூறினார்.
 
அமெரிக்கா மட்டுமே இத்தகைய பெரிய அளவிலான மற்றும் சிக்கலான ஒரு மீட்புப் பணியே ஏற்பாடு செய்து செயல்படுத்த முடியும் என்றும் வாஷிங்டனில் பேசும்போது அவர் கூறினார்.
 
"ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலக்கெடுவையும் தாண்டி அமெரிக்கர்கள், ஆபத்தில் இருக்கும் மூன்றாம் நாட்டவர்கள். ஆப்கானிஸ்தானியர் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதாக தாலிபன்கள் தனிப்பட்ட முறையிலும் பொதுவெளியிலும் உத்தரவாதம் அளித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்கு "இந்த மீட்புப் பணியின்போது மட்டுமல்ல, அதன் பிறகு ஒவ்வொரு நாளும் தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஆப்கானிஸ்தானில் இன்னும் 1,500 அமெரிக்கக் குடிமக்கள் இருக்கக்கூடும் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிளிங்கன் கூறினார்.
 
ஹெலிகாப்டர்கள், தரைப்படை ஆகியவற்றைப் பயன்படுத்தி அமெரிக்கர்களைப் தனியே அடையாளம் காணும் முயற்சிகளை சிஐஏவும், அமெரிக்க ராணுவமும் மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறியுள்ளனர்.
 
அமெரிக்க விமானம் மூலம் காபூல் விமான நிலையத்தில் இருந்து 10,000 பேர் வெளியேற்றப்படுவதற்கு இன்னும் காத்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கு தாலிபன்கள் குறித்த அச்சம் இருக்கிறது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் விமான நிலையத்தை அடைய முடியவில்லை.
 
விமான நிலைய வாசலை ஒட்டிய பகுதிகளில் தாலிபன்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விமான நிலையத்துக்கு வருவோரில் பலரிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்களை தாலிபன்கள் திருப்பி அனுப்பிவிடுவதாக பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
 
இதனிடையே மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்று அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
இன்னொரு புறம் தங்களது மீட்புப் பணிகள் குறிப்பிடத் தக்க வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது. புதன்கிழமை மட்டும் சுமார் 1,200 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
 
பிரிட்டிஷ் குடிமக்கள் மற்றும் தகுதியான ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு தங்களது அரசு கடைசித் தருணம் வரை பயன்படுத்தும் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்தார்.
 
தாலிபன்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5,800 வீரர்களும், பிரிட்டனைச் சேர்ந்த ஆயிரம் வீரர்களும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.