செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (14:45 IST)

நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை

இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை நேரில் சந்தித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

குறிப்பாக, ஆளும் நேபாள பொதுவுடைமை கட்சிக்குள்ளேயே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிபிசியின் நேபாளி மொழி சேவையிடம் பேசிய  அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயண் கஜி ஷ்ரேஸ்தா, இந்த சந்திப்பு குறித்து கட்சிக்கு தெரியாது என்றும், இதுகுறித்து கட்சி கூட்டத்தில் பேசப்பட  உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
நேபாள பொதுவுடைமை கட்சியின் இரண்டு தலைவர்களில் ஒருவராக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி விளங்குகிறார். இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து  கட்சியின் மற்றொரு தலைவருக்கு கூட தெரியாது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
 
அதே போன்று, இந்தியாவின் ரா அமைப்பின் தலைவர் கோயலின் சந்திப்பு குறித்து நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கூட தெரியாது என்றும்  செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கடும் விமர்சனம்
 
எனினும், இந்த சந்திப்பு குறித்து நேபாள பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
சமூக ஊடகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆளும் நேபாள பொதுவுடைமை கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியின் தலைவர்கள் மற்றும்  தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக நேபாள பிரதமர் தனது பதவிக்குரிய நடத்தை விதிகளைப் பின்பற்ற தவறிவிட்டார் என்று பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நேபாளத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷ்ரேஸ்தா, தனது பதவிக்காலத்தின்போது நடைபெற்ற வெளிநாட்டு அரசு  அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடனான சந்திப்புகளின்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரியொருவர் இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக  கூறினார்.
 
"இந்திய உளவு அமைப்பின் தலைவரை இதுபோன்ற முறையில் நேபாள பிரதமர் சந்தித்திருப்பது குறித்து கேள்விகள் எழுவது இயல்பானதே. இந்த கூட்டம்  எதற்காக நடைபெற்றது? ஏன் இப்படிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது? என்பது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இதுகுறித்து கட்சிக்குள் பேசப்படும்,  பேசப்பட்டே ஆக வேண்டும்" என்று அவர் கூறினார்.
 
ரகசிய சந்திப்பு
 
கடந்த மே மாதம் நேபாளம் தனது புதிய அரசியல் மற்றும் நிர்வாக வரைபடத்தை வெளியிட்ட பிறகு, இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்மட்ட  சந்திப்பு இது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
இருநாடுகளுக்கிடையேயான உறவு இயல்பாக இல்லாத சமயத்தில், இந்திய உளவு அமைப்பின் தலைவர் ஒருவர் நேபாள பிரதமரை நேரில் வந்து சந்தித்திருப்பது என்பது ஆழ்ந்த அர்த்தத்தை கொண்டிருப்பதாக வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
 
எனினும், நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கே தெரியாமல் நடைபெற்ற இந்த கூட்டம் ஆளும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
என்ன பேசப்பட்டது?
 
இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றதாக நேபாளத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  "கூட்டத்தின்போது, இந்திய உளவு அமைப்பான ராவின் தலைவர் கோயல், நேபாளம் - இந்தியா இடையேயான நட்புறவை நிலைத்திருக்க செய்யவும், இருநாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவும், மேலும் இருதரப்பு ஒத்துழைப்பிற்கும் உறுதியளித்தார்" என்று அந்த  செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நேபாள பிரதமரின் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிடும் வரை, இந்த சந்திப்பு குறித்த எவ்வித தகவலையும் நேபாள அரசின் பிற எந்த துறைகளும்  வெளியிடவில்லை.
 
இந்த நிலையில், அரசுத்துறைகளின் முக்கிய அதிகாரிகள் பலரும், தாங்கள் கோயலை சந்திக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
 
கொந்தளிப்புக்கு காரணமென்ன?
 
சமீபத்தில் நடைபெற்ற ஆளும் நேபாள பொதுவுடைமை கட்சியின் கூட்டத்தில், முக்கிய பிரச்சனைகள் மற்றும் அதுசார்ந்த அரசின் முடிவுகள் குறித்து  கட்சிக்குள்ளேயே ஆலோசிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நேபாள பிரதமருக்கும் இந்திய உளவு அமைப்பின் தலைவர் கோயலுக்கும்  இடையே நடந்துள்ள இந்த சந்திப்பு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரதமரின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி நேபாளத்தின் உள்துறை அமைச்சர் வரை பலரும் பொதுவெளியிலேயே  வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
 
ஒலிக்கும் கோயலுக்கும் இடையிலான சந்திப்பு ராஜாங்க நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று சில வெளியுறவு விவகார வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர்.
 
நேபாளத்தில் சீனா செல்வாக்கு செலுத்துவது குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கும் நேரத்திலும், பேச்சுவார்த்தைக்கு நேபாளம் தயாராக இருக்கும் சூழ்நிலையிலும் இந்த சந்திப்பு நடந்திருந்தாலும், இது நீண்டகால அடிப்படையில் நேபாளத்தை பாதிக்கக்கூடும் என்று முன்னாள் தூதர் தினேஷ் பட்டராய் பிபிசி  நேபாளி மொழி சேவையிடம் தெரிவித்தார்.
 
"இந்த சந்திப்பு நடைபெற்ற விதம், நேபாள பிரதமர் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து மனம் திறந்திருக்கலாம் என்றும் அதற்கு இந்திய தரப்பு உதவ  முன்வந்திருக்கலாம் என்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறுகிறார்.
 
"இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், தற்போதைக்கு இது பலனளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் இது பிரச்சனைகளுக்கு  வித்திடும்."
 
நேபாளத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரமேஷ் நாத் பாண்டே, இராஜதந்திரத்திற்கு வரம்பு இல்லை என்றும், சமீபத்திய சந்திப்பு அதன் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
 
ராணுவத்தின் மூலம் இராஜதந்திர ரீதியில் தொடர்பு கொண்ட வரலாற்றை நேபாளம் மற்றும் இந்தியா கொண்டுள்ளது என்று பாண்டே கூறுகிறார். சமீப காலமாக,  இரு நாடுகளுக்கிடையேயான தவறான புரிதல்களை முடிவுக்கு கொண்டுவர இந்த சந்திப்பு ஒரு துவக்கமாக இருக்கும்பட்சத்தில், இதனால் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த சந்திப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
"நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவுகளில் உத்தியோகபூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இராஜதந்திர முறைகள் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டு  வந்துள்ளன. இந்த நிலையில், இருநாடுகளுக்கிடையேயான உறவில் ஒரு புதிய தொடர்பாடல் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது  புரிந்துகொள்ளத்தக்கது."
 
"இராஜதந்திர உறவில் அனைத்து விடயங்களும் பொதுவெளியில் விளக்கப்பட வேண்டும் என்றில்லை. அந்த வகைப்பாட்டிற்குள் இந்த சந்திப்பு வருகிறது."