பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஐ.நா. அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியே 57 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஆக உள்ளது. இந்தியாவும், சீனாவும் தலா 140 கோடிக்கு மேல் மக்கள்தொகையை கொண்டிருக்கும் நாடுகளாக, அதாவது உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை இவ்விரு நாடுகளிலுமே இருந்து வந்த நிலையில், 142 கோடியை தாண்டி இந்த விஷயத்தில் சீனாவை விஞ்சி நிற்கிறது இந்தியா.
மக்கள்தொகையில் உலகின் நம்பர் ஒன் நாடு என்பது இந்தியாவுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியா அல்லது பீதியடைய செய்யும் தகவலா? என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
சூடானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தப்பிச்செல்ல குவிவதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்
மக்கள்தொகையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனாவில் அடுத்த ஆண்டு (2024) முதல் மக்கள்தொகை மெல்ல மெல்ல சரிய தொடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2022) அங்கு 10.6 மில்லியன் பேர் புதிதாக பிறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கையை விட சற்றுதான் அதிகம். அதேசமயம், பிறப்பு விகிதம் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அதிரடியாக குறைந்துள்ளது.
இதன்படி பார்க்கும்போது, தற்போது 1.4 பில்லியனுக்கு மேலாக உள்ள சீனாவின் மக்கள்தொகை, 21 ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் 1 பில்லியனுக்கு (100 கோடி) கீழ் வந்துவிடும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவின் கதை வேறாக இருப்பதாக சொல்கிறது ஐ.நா. இந்தியாவிலும் பிறப்பு விகிதம் சமீபகாலங்களில் கணிசமான அளவு குறைந்து வந்தாலும், இந்த சரிவின் வேகம் மெதுவாகவே இருப்பதாக கூறுகிறது ஐ.நா.
1950 களில் இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 5.7 குழந்தைகளை பெற்றுவந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது.
ஆனாலும் இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் சில, பல ஆண்டுகளுக்கு ஏறுமுகத்தில்தான் இருக்கும் எனவும், இந்த எண்ணிக்கை 2064 இல் உச்சத்தை அடைந்து, அதன் பின்னரே கணிசமான அளவு குறையத் தொடங்கும் என்றும் ஐ.நா கணித்துள்ளது.
மக்கள்தொகை, இந்தியா, சீனா
மக்கள்தொகை குறைப்பில் வேகம் காட்டிய சீனா
1973 இல் 2 சதவீதமாக இருந்த மக்கள்தொகை பெருக்க விகிதாசாரத்தை 1983 இல் 1.1% ஆக குறைத்தது சீனா. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கத்தை கிட்டதட்ட பாதியாக குறைத்தது.
நாம் இருவர் -நமக்கு ஒருவர், இரண்டு குழந்தைகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்து கிராமப்புறங்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தியது, பெண் கல்வி மற்றும் அவர்களுக்கு வேலைவாய்பபை உறுதி செய்தது, பொது சுகாதார துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளால் மக்கள்தொகை பெருக்க அளவை பத்தே ஆண்டுகளில் பாதியாக குறைத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது சீனா.
மும்முடங்கு உயர்ந்த இந்தியாவின் மக்கள்தொகை:
1973 -1983 இடைப்பட்ட காலத்தில் சீனாவின் மக்கள்தொகை பெருக்க விகிதம் பாதியாக குறைந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இந்கியாவின் மக்கள்தொகை 1951 முதல் 2011 வரையிலான 60 ஆண்டுகளில் மும்மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1951 இல் 361 மில்லியனாக (36 கோடி) இருந்த இந்தியாவின் மக்கள்தொகை, 2011 இல் 1.2 பில்லியனாக (120 கோடி) அதிரடியாக உயர்ந்தது. அதாவது 60 ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது.
கடந்த 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் மக்கள்தொகை சராசரியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து வந்துள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
“இந்தியாவில் தனிநபரின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததன் காரணமாக இறப்பு விகிதம் குறைந்தது. குறிப்பாக நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் அதிகரித்ததன் பயனாக அவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைத்ததுடன், நவீன கழிவுநீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கப் பெற்றன. இவற்றின் விளைவாக, நாட்டில் இதுநாள்வரை பிறப்பு விகிதம் அதிகமாக இருந்து வருகிறது” என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிஸ்சை சேர்ந்த மக்கள்தொகை வல்லுநர் டிம் டைசன்.
நாட்டின் மக்கள்தொகை அசுர வேகத்தில் அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டே 1952 இல் குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தேசிய மக்கள்தொகை கொள்கை 1976 ஆம் ஆண்டுதான் வகுக்கப்பட்டது. அந்த நேரத்தில் எல்லாம் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீனா மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்தது.
மக்கள்தொகை, இந்தியா, சீனா
கட்டாய கருத்தடை
“நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படட 1975 இல், பல வட்சக்கணக்கான ஏழை மக்கள் கட்டாயம் கருத்தடை செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர். மனித உரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது என்கிறார் பேராசிரியர் டைசன்.
மேலும், இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்படாமல் இருந்திருந்தாலும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதில் அரசியல்வாதிகள் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டிருந்தாலும் நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்திருக்கும்” என்கிறார் அவர்.
தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, தாய்வான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள், இந்தியாவை விட மிகவும் தாமதமாக குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தாலும், நாட்டின் பிறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்தன. அதேபோன்று, தாய்- சேய் இறப்பு விகிதம் குறைப்பு, தனிநபர் வருமானம் அதிகரிப்பு மற்றும் தனிமனித வாழ்க்கை தர மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவை இந்த நாடுகள் விஞ்சி நிற்கின்றன.
இந்தியாவுக்கு இனி இந்த அச்சம் தேவையில்லை
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுநாள்வரை இந்தியாவின் மக்கள்தொகை ஒரு பில்லியனுக்கு அதிகமாக (100 கோடி) கூடியுள்ளது. இன்னும் 40 ஆண்டுகளுக்கு நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்கதான் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்கம் கணிசமாக குறைந்து வருவதாலும், மக்கள்தொகை பெருக்கத்தின் எதிர்விளைவுகள் குறித்த கணிப்புகள் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளதாலும், மக்கள்தொகை பெருக்கத்தை பேராபத்தாக கருதி இந்தியா இனி அச்சப்பட தேவையில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
வருவாய் அதிகரிப்பு, பெண்களுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் இந்தியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
அதாவது 22 மாநிலங்களில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு பெண் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்கின்றனர் அவர்கள்.
எல்லா மதங்களிலும் குறைந்த பிறப்பு விகிதம்
1951 இல், ஆண்டுக்கு 2.19% ஆக இருந்த மக்கள்தொகை பெருக்க விகிதம், 2020 இல் 0.68% ஆக குறைந்துள்ளதாக பியூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்து, முஸ்லிம், கிருஸ்துவம், பெளத்தம், சீக்கிய மற்றும் ஜெயின் என பல்வேறு மதங்களை சேர்ந்த பெண்களின் குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதையே இது காட்டுவதாக பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி இந்த மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
“இந்த விஷயத்தில் தென் இந்தியாவை போல, நாட்டின் பிற பகுதிகள் இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது எனக் கூறும் பேராசிரியர் டைசன், மக்கள்தொகை பெருக்கம் வடமாநில மக்களின் வாழ்க்கை தரத்தை குறைத்துள்ளது” என்கிறார்.
ஐ.நா-வில் நிரந்தர உறுப்பினராகுமா இந்தியா?
மக்கள்தொகையில் சீனாவை விஞ்சியுள்ளதன் பயனாக, ஐநா பாதுகாப்பு சபையில் நிறுவன உறுப்பினராக மட்டுமே இருந்துவரும் இந்தியா, சீனாவை போல் தம்மையும் நிரந்தர உறுப்பினர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் இனி வலுவாக முன்வைக்கலாம்.
“உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு என்ற முறையில்,ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான கோரிக்கை இந்தியாவிடம் உள்ளதாகவே கருதுகிறேன்” என்று ஐநாவின் சமூக, பொருளாதார விவகாரங்கள் துறையின் மக்கள்தொகை பிரிவு இயக்குநர் ஜான் வில்மோத் கூறுகிறார்.
“ஏழ்மை, கல்வியறிவின்மை போன்ற குறைபாடுகள் இருந்தாலும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி, அதன் பயனாக ஆரோக்கியமான மனித வளத்தை இந்தியா பெற்றுள்ளது. பெரும்பாலான நாடுகள், தங்களது மக்களின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திய பிறகே, குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ்.
அத்துடன், உலக அளவில் சராசரியாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில், ஐந்தில் ஒருவர் இந்தியராக இருப்பதும், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 47 சதவீதத்தினர் 25 வயதுக்கு குறைவானவர்கள் என்பதும் ஒட்டுமொத்த உலகிற்கே நல்ல செய்தி” என்று குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.
பொருளாதார நிபுணரான ஸ்ருதி ராஜகோபாலன் கூறும்போது, “ இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்ட 1990 களில் பிறந்தவர்கள். இந்த இளைஞர்கள் பட்டாளம் தங்களுக்கென தனித்துவமான திறன்களை கொண்டுள்ளனர். இவர்களின் தொழில்நுட்ப மற்றும் நுகர்வு கலாசாரம் சார்ந்த அறிவு, சர்வதேச அளவில் இந்தியா போட்டி போடுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது” என்கிறார் அவர்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவல்படி, இந்தியாவில் உழைக்கும் திறன்கொண்ட வயதில் உள்ள மக்களில் வெறும் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே இங்கு பணிவாய்ப்பு உள்ளது அல்லது அவர்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றனர்.
மேலும், பணிபுரியும் வயதில் உள்ள பெண்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டும் இந்தியாவில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை சீனாவில் 69 சதவீதமாக உள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வேலைவாய்ப்பின்மை , குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால், கிராமப்புறங்களை சேர்ந்த இந்தியர்கள் சுமார் 20 கோடி பேர் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் விளைவாக இங்கு நகரமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
“பணிநிமித்தமாக குடிபெயர்ந்து வரும் கிராமப்புற மக்களால் இந்திய நகரங்கள் வளர்ச்சி அடையலாம். ஆனால், இங்கு குடியேறும் மக்கள் எல்லோருக்கும் தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்த இயலுமா என்பது தான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.
கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களில் குடியேறுவோருக்கு தரமான வாழ்க்கை தரமுடியாமல் போனால் அது மேலும் சேரிகள் உருவாவதற்கும், புதிய நோய்கள் உண்டாவதற்கும்தான் வழிவகுக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்” குடிபெயர்வு நிபுணர் இருதய ராஜன்.
குழந்தை திருமணங்கள், இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இந்தியாவில் இருப்பதாக கூறுகின்றனர் மக்கள்தொகை வல்லுநர்கள்.
ஒருவரின் பிறப்பு -இறப்பை முறையாக பதிவு செய்ய வேண்டிய தேவையும் இங்கு இன்னமும் இருப்பதாக தெரிவிக்கும் அவர்கள், பெண் குழந்தைகளைவிட ஆண் பிள்ளைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கின்றனர்.
பியூ ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, மக்கள்தொகை கட்டுப்பாடு எனும் அரசியல் சொல்லாடல் இங்கு நாட்டின் மிகப்பெரிய சிறுப்பான்மையினரான முஸ்லிம்களை இலக்காக கொண்டதாக தெரிகிறது” என கூறப்படுகிறது.
முதுமை மீது தேவைப்படும் அதிக கவனம்:
1947 இல் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 5% பேர் 60 வயதை கடந்தவர்களாக இருந்தனர். ஆனால் இன்று 10 சதவீதம் பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். அதாவது கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் முதியோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், 2023 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காகவும், இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கைவிட அதிகரிக்கக்கூடும் என்றும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக முதியோர் ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கான சமூக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துவது அரசுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
“உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், முதியோரை காப்பது அரசுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது என்கிறார் ஆசி்ரியர் ருக்மணி.
முதியோர் தனிமையில் வாழும் அவலநிலை அதிகரித்து வருவது வருந்தத்தக்க விஷயம் என குறிப்பிடும் அவர், இந்த அவலநிலை மாற இந்தியாவில் குடும்ப கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.