1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (21:10 IST)

IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை திணற வைத்த பும்ரா, சிராஜ் - சமன் செய்த இந்திய அணி

siraj india
கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
 
கடந்த 40 ஆண்டுக்கால வரலாற்றில் இந்த முறையாவது இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் இருந்தாலும் ஆறுதலும் கிடைத்துள்ளது.
 
கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 7 முறை விளையாடியுள்ளது என்றாலும் ஒரு போட்டியில்கூட வென்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நியூலாந்து மைதானத்தில் வெற்றியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது.
 
முதலிடத்தில் இந்திய அணி
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 26 புள்ளிகளுடன் 54.16 சதவீதத்துடன் முதலிடத்தை இந்திய அணி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி 2வது இடத்துக்குச் சரிந்தது.
 
92 ஆண்டுகளுக்குப் பின்...
ஏறக்குறைய 92 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் மிகக் குறைவான பந்துகள் வீசப்பட்டு, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது என்றால் இந்த ஆட்டம்தான்.
 
இதற்கு முன் கடந்த 1932ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே 656 பந்துகள் வீசப்பட்டதுதான் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக இருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 106.4 ஓவர்கள், அதாவது 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு 92 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களும், இந்திய அணி 153 ரன்களும் சேர்த்து, இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து 79 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.
 
பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம்
 
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “சிறந்த அடியை முன்னெடுத்துள்ளோம் என்றாலும் ஏராளமான தவறுகளில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம்.
 
பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் வீசி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். பேட்டர்களும் 100 ரன்கள் வரை முன்னிலை எடுத்துக் கொடுத்தனர். ஆனால், கடைசி 6 விக்கெட்டுகள் சரிந்தது வேதனைதான்.
 
யாரும் இதுவரை பார்க்காத வகையில் சிராஜ் பந்துவீச்சு இருந்தது. இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம். தென் ஆப்பிரிக்கா எப்போதுமே நமக்கு சவலாக இருந்தது, இங்கு வந்து வெற்றியும் பெற்றுள்ளோம்,” எனத் தெரிவித்தார்
 
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன.
 
ஆட்டநாயகன் விருது 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜுக்கும், தொடர்நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், எல்கருக்கும் வழங்கப்பட்டது.
 
இந்த டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்தப் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட டீன் எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்புதான் முக்கியக் காரணம். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்தது சிராஜ்ஜின் பந்துவீச்சும் 6 விக்கெட்டுகளும் என்றால், 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை கதிகலங்க வைத்தது ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு.
 
வேகப்பந்துவீச்சாளர்களின் நலனுக்காக, சாதகமாக ஆடுகளத்தை அமைத்த தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த ஆடுகளமே “பேக்ஃபயராக” மாறிவிட்டது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு சுருண்டதும், 2வது இன்னிங்ஸில் 48 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம்.
 
இந்திய அணியும் இதில் சளைத்தது இல்லை. முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் சேர்த்திருந்தபோது, அடுத்து எந்த ரன்னும் சேர்க்காமல் பூஜ்ஜிய ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையைப் படைத்தது. இரு அணிகளும் பந்துவீச்சாளர்களை நம்பி நியூலாந்தில் கால் வைத்தன, இதில் இந்திய அணி முந்திக்கொண்டதால், தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.
 
ஆறுதல் அளித்த மார்க்ரம்
 
தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்டில் ஒரே ஆறுதல் மார்க்ரம் அடித்த சதம்(103) மட்டுமே. டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு அணியில் மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கு மேல் சேர்காத நிலையில் மார்க்ரம் மட்டும் சதம் அடித்தது இதுதான் முதல்முறை.
 
இரண்டாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 36, பெடிங்கம் 7 ரன்களில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
 
ஆனால், இன்றைய தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பாக அமையவில்லை. பும்ராவின் முதல் ஓவரிலேயே பெடிங்ஹாம் விக்கெட் கீப்பரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
அடுத்து வந்த வெரினேவும் நிலைக்கவில்லை. பும்ரா பந்துவீச்சில் ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு, சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மகராஜ் கல்லி பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேற தென் ஆப்பிரிக்க 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்தித்திருந்தது.
 
விக்கெட்டுகள் ஒருமுனையில் வீழ்ந்தாலும் மற்றொரு முனையில் மார்க்ரம் அதிரடியாக ஆடினார். 68 பந்துகளில் அரைசதம் அடித்த மார்க்ரம், அடுத்த 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்தார். ரபாடா, மார்க்ரம் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர்.
 
மார்க்ரம் 73 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை ராகுல் தவறவிட்டதால், அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்று சதம் அடித்தார். இல்லாவிட்டால் சதம் அடிக்காமலே மார்க்ரம் நடையைக் கட்டியிருப்பார். மார்க்ரம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
 
இரண்டு முதல் ஐந்து விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு பறிகொடுத்த தென் ஆப்பிரிக்க அணி கடைசி 3 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களுக்குள் இழந்தது. 36.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களில் 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
 
இந்திய அணி தரப்பில் பும்ரா 13.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. எளிய இலக்கை அதிரடியாக அடைந்தால்தான் வெற்றி கிட்டும் என்பதை உணர்ந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆவேசமாக பேட் செய்தனர். இருவரின் பெரும்பாலான ஷாட்கள் பேட்டின் மத்தியப் பகுதியில் விழவில்லை, இருப்பினும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 5.4 ஓவர்களில் இந்திய அணி 44 ரன்களை தொட்டது.
 
ஜெய்ஸ்வால் 28 ரன்னில் பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சுப்மான் கில் 10 ரன்னில் ரபாடாவின் லோபவுன்ஸரில் போல்டாகி வெளியேறினார். கோலி 12 ரன்னில் யான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.