வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:13 IST)

அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?

அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் சிறந்த வழியை விஞ்ஞானிகள்கண்டறிந்துள்ளனர்.


அவர்களின் அழுகை நிறுத்துவது பற்றியோ, தொட்டிலை ஆட்டுவதைப் பற்றியோ மறந்துவிடுங்கள். ஒரு சிறிய ஆய்வில் சில பெற்றோர்களை கொண்டு பல்வேறு வழிகளை ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தனர். அப்போது, அந்த குழந்தையை படுக்கையில் தூங்க வைப்பதற்கு முன், ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு நடப்பதும், அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவர்களை கைகளில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதும் சிறந்த வழி என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகள், 'கரண்ட் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை, விலங்குகள் எவ்வாறு தங்கள் குட்டிகளை கையாள்வதற்கு இணையாக உள்ளது என்பதை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்களில் சிலரும் பெற்றோர்கள். பல பாலூட்டிகள் தங்கள் குட்டிகளை எடுத்துக்கொண்டு நடக்கும்.

மூளை அறிவியல் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆர்ஐகேஇஎன் ( RIKEN center) மையத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், சுமார் மூன்று மாத வயதுடைய 21 குழந்தைகளையும், அவர்களின் தாய்மார்களையும் கொண்டு பரிசோதனை செய்தனர். அவர்கள் ஒரு குழந்தையின் அழுகையை நிறுத்த வடிவமைக்கப்பட்ட நான்கு அணுகுமுறைகளை ஆய்வு செய்தனர்:

1. தாய்மார்கள் நடக்கும்போது குழந்தைகளை கையில் வைத்திருப்பது
2. உட்கார்ந்து இருக்கும் தாய்மார்கள் அவர்களை கையில் குழந்தையை வைத்திருப்பது
3. தொட்டிலில் போடுவது.
4. குழந்தையை கட்டிலில் வைத்திருப்பது.

ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் கவனமாக நடக்கும்போது, அழுதுகொண்டிருந்த குழந்தைகள் அமைதியடைகின்றன. அவர்களின் இதயத் துடிப்பு (கையடக்கமான மானிட்டர் மூலம் அளவிடப்பட்டது) 30 விநாடிகளுக்குள் சமநிலையடைந்ததை இந்த குழு கண்டறிந்தது. இதேபோன்ற அமைதியை கட்டிலில் படுக்க வைக்கும்போது, குழந்தை அனுபவிக்கின்றது. ஆனால் தாய் உட்கார்ந்துகொண்டு குழந்தையை வைத்திருக்கும் போதோ அல்லது குழந்தையை தொட்டிலில் போடும்போதோ அத்தகைய அமைதியை குழந்தை அனுபவிக்கவில்லை.

தாயின் தொடர்பு மட்டுமே குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது . நடப்பது முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும், தாய்மார்கள் தூக்கத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளை படுக்கையில் வைக்க முயற்சிக்கும் போது, குழந்தை மீண்டும் எழுந்து அழும். தாய்மார்கள் தங்கள் குழந்தையை மெதுவாக கட்டிலில் படுக்க வைக்கும்போதும் இது நடந்தது.

இதை புரிந்துக்கொள்ள, உங்கள் குழந்தையை படுக்கையில் படுக்க வைக்கும் முன், சிறிது நடந்த பிறகு, ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வரை அரவணைப்புடன் உட்கார்வது நல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எப்போது மருத்துவ உதவி தேவைப்படும்?
குழந்தையின் அழுகை என்பது உங்கள் குழந்தையின் பசியாக, தாகமாக இருப்பதைக் குறிக்கும். நாப்கின் இருந்தால்கூட குழந்தை அழும். ஆகவே, முதலில் இவற்றைச் சரிபார்த்து, அதை சரி செய்வது அவசியம். குழந்தை ஏதேனும் வலியில் இருப்பதாலும் அழலாம். கோலிக் எனப்படும் வயிற்றுப் பிடிப்பு இருப்பதாலும் குழந்தை அதிகமாக அழலாம். குழந்தையின் அழுகை சில மணி நேரம் வரை நீடிக்கலாம். உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த முயற்சிப்பதையும் , அழுகையை நிறுத்தும் வரை காத்திருப்பதையும் தவிர உங்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் எவ்வளவு விரக்தியடைந்தாலும், உங்கள் குழந்தையை குலுக்கக் கூடாது. அவர்களின் தலையை வேகமாக குலுக்குவது, அவர்களின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால், உங்களால் அவர்களை சமாதானப்படுத்தவோ அல்லது திசை திருப்பவோ முடியாவிட்டால், அல்லது அவர்களின் அழுகை சாதாரணமாக இருப்பது போல் இல்லாவிட்டால் , அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கும். நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்கள் குழந்தை மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அவசரகால சேவையைத் தொடர்பு கொள்ளவும்.

லண்டனின் தேசிய குழந்தை பிறப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஜென்னி பாரெட் இவ்வாறு கூறினார்: "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சமாதானப்படுத்த பல்வேறு உத்திகளை கற்றுக்கொள்கின்றனர். சிலருக்கு சில வழிகள் வேலை செய்யலாம். மற்றவர்களுக்கு அது பொருந்தாமல் இருக்கலாம். இது நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் குழந்தையைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களை சமாதானப்படுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதும் ஆகும்.

"சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையை கையில் வைத்திருப்பது சிறந்த வழியாக இருக்கலாம். சில குழந்தைகள் நடப்பதையும், கவனத்தை திருப்புவதையும், சூழலை மாற்றுவதையும் விரும்பலாம்."