ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (22:46 IST)

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Srilanka
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட வகையில் எதிராளியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
 
 
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கால் ஒன்றை இழந்த ஜேசுரான் கணேசன் மற்றும் அருட்தந்தை காமினி சிறில் ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

 
குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 298ஆம் பிரிவின் கீழ், மைத்திரபால சிறிசேனவை சந்தேக நபராக குறிப்பிட்டு, அவருக்கு அறிவித்தல் அனுப்புமாறு - முறைப்பாட்டாளர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 
வழக்கின் சட்டத் தன்மை என்ன?
 
இந்த வழக்கு என்ன அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது என்பது குறித்து, மூத்த சட்டத்தரணி (வழக்குரைஞர்) ருஷ்தி ஹபீபிடம் பிபிசி தமிழுக்காக யூ.எல்.மப்றூக் வினவிய போது, அவர் விளக்கமளித்தார்.
 
சிவப்புக் கோடு
 
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: 'அச்சுறுத்தல் பற்றி முன்னாள் அதிபருக்கு முன்பே தெரியும்'
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: “மூன்று ஆண்டுகளாக கண்ணீர் வடிக்காத நாளே இல்லை” – ஒரு தாயின் வேதனை
 
சிவப்புக் கோடு
 
"அரசியலமைப்பின் 35-வது ஷரத்தில் ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்கும்போது, அவரின் பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் - அவர் செய்த அல்லது செய்யாது விட்ட எவ்விடயம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எதுவும் தொடுக்கப்படுதல் அல்லது தொடர்ந்து நடத்தப்படுதல் ஆகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது".
 
 
"ஆனால் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும். அந்த வழக்கை சட்ட மா அதிபருக்கு எதிராகவே தாக்கல் செய்ய முயும் என்பதுதான் சட்ட ஏற்பாடாக உள்ளது" என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்.
 
"அரசியலமைப்பின் இந்த ஏற்பாடு 'வழக்குகளில் இருந்து ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் தற்காப்பு' எனக் கூறப்படுகிறது. அரசியல் யாப்பு ரீதியாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை இது உள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
 
ஆனாலும், ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் மட்டும்தான் இந்த சிறப்புரிமை உள்ளது என்றும், அவரின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு - அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இது இவ்வாறிருக்க, குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 138ஆவது பிரிவின் கீழ், தனியார் ஒருவர் குற்றவியல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க முடியும் எனக்கூறும் ருஷ்தி ஹபீப் "அதற்கிணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்கிறார்.
 
"இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நபர் முன்னாள் ஜனாதிபதி. அவர் ஜனாதிபதி பதவி வகிக்கவில்லையாயின் அவருக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் என்பது அரசியலமைப்பின் ஏற்பாடாக உள்ளது" எனவும் அவர் கூறினார்.
 
குற்றவியல் சட்டக் கோவையின் 298 என்ன சொல்கிறது?
 
குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 298ஆம் பிரிவு 'அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தும்' (Causing death by negligence) குற்றத்துக்கான தண்டனை பற்றி குறிப்பிடுகிறது.
 
ஒருவர் நேரடியாக கொலைக் குற்றத்தில் ஈடுபடாத போதிலும், அவர் தனது கடமையை கவனக் குறைவால் செய்யத் தவறும் போது ஏற்படும் மரணத்துக்கு காரணமாகிறார் எனும் அடிப்படையில், குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 298ஆம் பிரிவு அவரை குற்றவாளியாக அடையாளம் காண்கிறது.
 
 
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், பாரதூரமான கவனக்குறைவோடு இருந்தமையினாலேயே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது எனக்குறிப்பிட்டு, அவருக்கு எதிராக மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கூறுகின்றார்.
 
இருந்தபோதும் கடமையிலுள்ள ஒருவரின் பாரதூரமான கவனக் குறைவால் நிகழும் மரணத்தின் பொருட்டு, அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டாலும், அது கொலைக் குற்றம் போன்றதொரு செயலாகக் கருதப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
"கொலைக் குற்றத்துக்காக வழங்கப்படும் மரண தண்டனை, பாரதூரமான கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றத்துக்காக வழங்கப்பட மாட்டாது. 7 வருடங்களுக்கு உட்பட்ட சிறைத்தண்டனை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழங்கப்படும்" எனவும் அவர் கூறினார்.
 
"ரயில்வே கிராசிங் ஒன்றை திறந்து - மூடுவதற்குப் பொறுப்பாக ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் தனது கடமையில் பாரதூரமான கவனக் குறைவாக இருந்தமையினால் கிராசிங் கதவை மூட வேண்டிய நேரத்தில் மூடத் தவறுகிறார். இதன்போது அங்கு வந்த வாகனமொன்று கிராசிங்கில் நுழைந்து விபத்துக்குள்ளாகி - அதில் பயணித்தவர் மரணித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த சம்பவத்தில், கிராசிங் கதவை திறந்து மூடும் பொறுப்பில் பணியில் அமர்த்தப்பட்டவருக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 298ம் பிரிவின் கீழ், வழக்குத் தொடர முடியும்" என, எளிமையாக விளக்கினார் ருஷ்தி ஹபீப்.
 
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி - கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தில், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 277 பேர் கொல்லப்பட்டதோடு, 400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
 
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனை பதவி வகித்தார்.
 
அவர் தாக்குதல் நடந்த சமயம் சிங்கப்பூரில் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார்.
 
அந்தக் ஆணைக்குழு வெளியிட்ட இறுதி அறிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததோடு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஈஸ்டர் தினத் தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பிலிருந்து தவறியமைக்காக, அப்போது பதவிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுப்பதற்கு, அவரால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு - தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.
 
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென, தாக்குதலால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலவேறு தரப்பினர் - தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.