வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 5 மே 2021 (11:17 IST)

ஸ்டாலின் முன்னுள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தீவிரமாகியிருக்கும் நெருக்கடியான சூழலில் புதிய ஆட்சி அமையபோகிறது. மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவால்கள் என்ன?
 
எதிர்நிற்கும் சவால்கள்
எந்தவொரு புதிய அரசும், ஆட்சி அதிகாரத்தில் காலூன்றி சுதாரிக்க ஆறு மாத கால அவகாசம் தேவை. ஆனால் அமையப்போகும் திமுக ஆட்சிக்கு எதிர்வரும் ஆறு மாதங்களும் அதீத நெருக்கடியான காலமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் கொரோனா இரண்டாம் அலை.
 
கொரோனா தொற்றின் முதல் அலையை தமிழ்நாடு ஏதோ சமாளித்து விட்டாலும், இரண்டாவது அலை என்பது அதை காட்டிலும் கடினமானதாகவே உள்ளது. எனவே கொரோனா தொற்றை முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் எவ்வாறு கையாளப் போகிறார், போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து எவ்வாறு பெற போகிறார் என்பதுதான் அவர் முன் உள்ள இமாலய சவால்களில் முதன்மையானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
 
கொரோனா பெருந்தொற்று
"கொரோனா இரண்டாம் அலை அதிக ஆபத்தானதாக உள்ளது. இளைஞர்களை தாக்குகிறது. இதுவரை பார்க்காத எண்ணிக்கையை காட்டிலும் இப்போது எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. முதல் அலையில் மருத்துவமனை படுக்கைகளுக்கு எந்த தட்டுபாடும் இல்லை. ஆனால் இந்த இரண்டாம் அலையில் ஐசியூ படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு தீவிரமாக உள்ளது. அது போக இங்கேயும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலைமை இருப்பதுபோலவே தெரிகிறது. எனவே திமுகவினர் மிக நெருக்கடியான காலகட்டத்தில் தான் பொறுப்பை கையில் எடுக்கிறார்கள்." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி. சுரேஷ் குமார்.
 
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி என்பது வெறும் சுகாதார நெருக்கடி என்ற நிலையில் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்குக்கும் வித்திடும். எனவே பெருந்தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதும் தமிழகத்தின் தற்போதைய பெரும் தேவை.
 
"பொதுமுடக்கம் இல்லை என்றாலும், கிட்டத்தட்ட முழு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் ஒரு சூழலில் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படும். ஒரு பக்கம் தமிழகம் இதுவரை காணாத மிகப்பெரிய சுகாதார நெருக்கடி மறுப்புறம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பொருளாதாரம் கிட்டதட்ட ஸ்தம்பிக்கும் நிலைக்கு வரும்போது அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சவால்." என்கிறார் சுரேஷ் குமார்.
 
கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பெரும் பகுதியாக மாநிலத்தின் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் அது மத்திய அரசின் கையில் உள்ளதால் இதை கையாளுவதும் திமுகவிற்கு பெரிய சவலாகவே இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
 
"18-45 வயதினருக்கு தடுப்புசி போடுவது அடுத்தகட்ட நடவடிக்கை, அது மத்திய அரசின் கையில் உள்ளது. திமுக என்பது பாஜகவுக்கு எதிராக இருக்ககூடிய ஒரு கட்சி எனவே அதை கையாள்வதும் சவாலானதுதான். சரியாக கையாளவில்லை என்றால் மகராஷ்டிராவுக்கு வந்த சூழல் தமிழகத்துக்கு வந்துவிடும்." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லஷ்மி.
 
"ஆக்சிஜன் விநியோகத்தை பொறுத்தவரை வேறு மாநிலத்திற்கு கொடுக்க வேண்டாம் என்ற அழுத்தம் தரலாம். ஆனால் தடுப்பு மருந்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும் போராடி பெற வேண்டிய சூழலே உள்ளது. இந்த தடுப்பூசி செயல்பாட்டை நிறைவேற்றினால் மட்டுமே கொரோனா நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளியே வர முடியும். மத்திய அரசு தமிழகத்திற்கு தடுப்பூசிகளை எந்த அளவிற்கு ஒதுக்கிறது என்றும் பார்க்க வேண்டும்." என்கிறார் சுரேஷ் குமார்.
 
அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த முடியுமா?
பெருந்தொற்றை சமாளிக்காமல் அதிலிருந்து மீளாமல் வேறு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலாத ஒரு சூழலே நிலவுகிறது என்கிறார் சுரேஷ் குமார்.
 
கொரோனா காலத்தில் குடும்பங்களுக்கு 4000ரூபாய் நிதி உதவி குடும்ப தலைவிகளுக்கு ஊக்க தொகை என்பதெல்லாம் உடனடியாக நிறைவேற்றுவது சிரமமாகவே இருக்கும் என்கிறார் அவர்.
 
மத்திய அரசின் ஒத்துழைப்பு
மத்தியில் இருக்கும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது திமுக. மேலும் திமுகவுடன் கொள்கை அளவில் முரண்பாடு கொண்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது என்பது ஸ்டாலின் முன் வைக்கப்பட்டுள்ள சவால்களில் ஒன்றாகவே இருக்கும்.
 
"2019ஆம் ஆண்டு தேர்தலில் வேறு எந்த தலைவரும் விமர்சிக்காத அளவிற்கு ஸ்டாலின் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே திமுக கடுமையான ஒரு பாஜக எதிர்ப்பு நிலை எடுத்திருந்த பட்சத்தில் அதை திருப்பி கொடுக்கவே பாஜக முயற்சி செய்யும்." என்கிறார் சுரேஷ் குமார்.
 
மாநிலத்தின் நிதி சுமை
பெருந்தொற்றால் ஏற்படும் புதிய பொருளாதார நெருக்கடி, வேலையிழப்புகள், இவை எல்லாம் மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் கடன் சுமையின் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். எனவே புதியதாக வரும் அரசு நிதி மேலாண்மைக்கு பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது.
 
"மாநிலத்தின் நிதி நிலைமைகள் குறித்து முந்தைய அதிமுக ஆட்சி பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அதை சரியாக கையாளவில்லை. அதிக வட்டிகளில் பெரிய கடன்களை வாங்கியது. எனவே ஸ்டாலின் பதவியேற்கும் சமயத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு அறிவித்துவிட வேண்டும். எந்த அளவிற்கு நிதியுடன் அவர் பொறுப்பேற்கிறார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்திட வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன்.
 
தமிழகத்திற்கு பல காலமாக ஜிஎஸ்டி ரிடன்ஸ் வழங்கப்படவில்லை என்பதும் கூடுதல் சுமையே என்கிறார் லஷ்மி.
 
"மாநிலத்தில் கடன் 4.85 லட்சம் கோடி ஆக உள்ளது. தேர்தல் சமயத்தில் சொன்னது போல 4000 ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் கோடி வரை இரண்டு வருடங்களுக்கு தேவைப்படும். எனவே இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏனென்றால் மாநிலத்தின் வருவாய் வாய்ப்புகள் குறைந்து விட்டன. போன பொதுமுடக்கத்தில் டாஸ்மாக் கடைகளை மூடினோம் அப்போது மதுகடைகளினால் வரக்கூடிய வருவாய் குறைந்தது. அடுத்ததாக ஜிஎஸ்டி ரிட்டன்ர்ஸ் எதுவும் வரவில்லை. ஊதியங்களுக்கும், மானியத்திற்கும் மாநிலத்தின் வரி வருவாயிலிருந்து 150 சதவீதம் வரை செலவு செய்திட வேண்டும் அவ்வாறு செலவு செய்தால் இந்த சூழலில் இருந்து மீண்டு வருவது கடினம். எனவே தொலைநோக்கத்துடன் திட்டங்களை வகுத்தால் மட்டுமே மாநிலத்தை மீட்டு எடுத்து கொண்டு செல்ல முடியும்." என்கிறார் லஷ்மி.
 
ஸ்டெர்லைட், எட்டு வழி சாலை, நீட்
கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என்ற பெரும் சவால்கள் உடனடியாக காத்திருந்தாலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தூண்டிய முக்கிய பிரச்னைகளை திமுக அரசு எவ்வாறு கையாளவிருக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
 
அவ்வாறு முந்தைய ஆட்சிக்காலத்தில் எதிர்ப்புகளை உருவாக்கிய பிரச்னைகள் தேர்தல் சமயத்தில் பெரும் தாக்கத்தையும் செலுத்தியுள்ளது என்கிறார் பத்திரிகையாளர் இளங்கோவன்.
 
"10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதையும் மீறி வட தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று இருப்பது எட்டு வழி சாலை பிரச்னையும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சொல்கிறது. ஏனென்றால் மக்கள் தங்களின் நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழக்கும்படியான திட்டமாக அது உள்ளது. எனவே ஸ்டாலின் அதை மிக கவனமாக கையாள வேண்டும்" என்கிறார் இளங்கோவன்.
 
"அதேபோன்று ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதை அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். எந்த குற்றப் பின்னணியும் இல்லாத 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு எந்த ஒரு விளக்கத்தையும், நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது கடந்த கால அரசு. எனவே அந்த விவகாரத்தையும் ஸ்டாலின் சரியான முறையில் அணுகி முதிர்ச்சியான முறையில் உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும். அதுவும் ஸ்டெலைட் திறக்கப்படாமல் இவற்றை செயல்படுத்திட வேண்டும்," என்கிறார் அவர்.
 
கடந்த ஆட்சியில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதும் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பாதகமாக அமைந்தது.
 
"காவிரி டெல்டா மாவட்டங்களில் திமுக வென்றதற்கு காரணம், தொழிற்சாலைகளின் நலன்களுக்காக விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதிமுக அரசு அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதால்தான். எனவே ஸ்டாலின் இம்முறை அதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும்,"
 
"அடுத்தபடியாக நீட்டை பொறுத்தவரை தனி ஒரு மாநிலமாக தமிழ்நாட்டில் என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை ஆனால் ஒரு வலுவான சட்ட நிபுணர்கள் கல்வியாளர்களின் ஆலோசனையை கொண்ட குழுவை அமைத்து கல்வியில் மாநிலத்தின் உரிமையை மீட்டெடுக்க என்ன செய்ய முடியுமோ அதை விரைவாக செய்ய வேண்டும்." என்கிறார் இளங்கோவன்.
 
சட்டம் ஒழுங்கு பிரச்னை
இவைகளை தாண்டி, "தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை என்பதுபோல மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களால் வட இந்தியர்களுக்கு அதிகமாக வேலை கிடைக்கும் சூழல் உள்ளது அதை தடுத்து தமிழர்களுக்கு வேலை என்பதை கொண்டு வர வேண்டும்." என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
 
மேலும், பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறை¬ போக்கு ஆபாச தாக்குதல்கள், இவற்றை சரியான முறையில் வெறும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையாக மட்டுமின்றி சமூக ஒழுங்கு நடவடிக்கையாக, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுத்து அதை செயல்படுத்துவதும் கடமைகளும் முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளது என்கிறார் அருள்மொழி.
 
முதல்வராக ஸ்டாலின்
 
தமிழகத்திற்கு திமுகவின் ஆட்சி புதியதில்லை என்றாலும், தற்போது கருணாநிதி அல்லாத ஒரு திமுக ஆட்சி அமையவிருக்கிறது. ஸ்டாலின் முதன்முறையாக முதல்வர் பதவியில் அமருகிறார். அந்த நிலையில் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் முதல்வராக எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
 
"ஸ்டாலினை பொறுத்தவரை நல்ல அதிகாரிகளை தன் ஆலோசகராக உடன் வைத்துக் கொண்டு செயல்படும் ஒரு நபராகவே இருந்துள்ளார். அவர் சென்னை மேயராக இருந்த சமயத்திலும், துணை முதல்வராக இருந்த சமயத்திலும் சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை வைத்து கொண்டு அந்த குழுவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர் செயல்பட்டுள்ளார். அது ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிட்டால் அவர்கள் நல்ல முறையில் செயல்படும் நிலையில்தான் உள்ளனர்." என்கிறார் சுரேஷ் குமார்.
 
"அதேபோல எளிதாக அணுகும் ஒரு நபராகவே ஸ்டாலின் இருந்துள்ளார். துணை முதல்வராக இருக்கும் போது காலை நடைபயிற்சி செய்யும் சமயத்தில் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார். அவர் ப்ரோ ஆக்டிவாக இருந்த ஒரு தலைவர் தான் எனவே தற்போது களத்தில் இறங்கி செயல்படக்கூடிய ஒரு தலைவராக இருப்பார் என்றே தோன்றுகிறது." என்கிறார் சுரேஷ் குமார்.
 
அரசியல் ரீதியான சவால்
தனிப்பட்ட ரீதியில் மட்டுமல்ல திமுகவையும் தொடர்ந்து வலுவாக மாற்ற வேண்டும் என்றால் அக்கட்சி மீது கட்டமைக்கப்பட்டுள்ள இமேஜ்களை மாற்ற கடுமையாக செயல்பட வேண்டும் என்கிறார் லஷ்மி.
 
"அரசியல் ரீதியாக பார்க்க வேண்டுமென்றால் தற்போது ஒரு வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. அதிமுக வலுவான ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவர்களை கேள்வி கேட்க நிறைய ஆள் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அதுவும் பாஜகவும் உடன் இருக்கிறார்கள் அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்க கூடியவர்கள் எனவே எந்தஒரு திட்டமும் உடனடியாக முன்னெடுத்து செல்ல முடியாத ஒரு நிலை ஏற்படும். திமுக மாநில உரிமைகளை பேசும் கட்சி ஆனால் பாஜகவால் கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவே இது ஒரு பெரிய சவால்"
 
"திமுகவுக்கு என்று கட்டமைக்கப்பட்ட பெயர்கள் எப்போதுமே உண்டு எனவே அந்த இமேஜை எப்படி உடைக்கபோகிறார் என்பது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஒரு சவால். இது அனைத்தையும் கடக்கவில்லை என்றால் மற்றொரு முறையும் திமுக வெற்றி பெறுவது சந்தேகமே." என்கிறார் லஷ்மி.